மாடலிங்கில் அசத்தும் இளம் கிரிக்கெட் வீராங்கனை ஜெயஸ்ரீ
|சென்னை கொளத்தூரை சேர்ந்த ஜெயஸ்ரீக்கு, இருவேறு ஆசைகள் உண்டு. அதில் ஒன்று கிரிக்கெட் உலகில் கோலோச்சுவது. மற்றொன்று, மாடலிங் துறையில் அசத்துவது. இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை என்றாலும், தன்னுடைய இருவேறு இலக்குகளை துரத்திக்கொண்டே இருக்கிறார்.
அதற்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. அதுபற்றி ஜெயஸ்ரீ விளக்குகிறார்.
''என்னுடைய அப்பா சதீஷ் குமார், தமிழ்நாடு மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றுகிறார். அப்பா மட்டுமின்றி எங்கள் குடும்பம் மூன்று தலைமுறைகளாக கிரிக்கெட் விளையாட்டோடு பயணிக்கிறது. அதனால் அதில் சாதிக்கும் ஆசை எனக்குள் இயல்பாகவே இருந்தது. அதற்காக சிறுவயதில் இருந்தே, கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். மாவட்ட கிரிக்கெட் அணிக்கு தேர்வாகும் சமயத்தில்தான் கொரோனா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது என்பதால் பயிற்சி களத்திற்கு செல்லமுடியாமல் போனது. இப்போதுதான் அதற்கான பயிற்சிகளிலும், முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறேன்'' என பொறுப்பாக பேசும் ஜெயஸ்ரீ, தற்போது சென்னை கெல்லீஸ் பகுதியில் இருக்கும் சிந்தி சீனியர் பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறார்.
தன் வாழ்க்கை புத்தகத்தின் கிரிக்கெட் பக்கங்களை மெதுவாக புரட்டி பார்க்கும் ஜெயஸ்ரீ, அதில் புதிதாக எழுதப்பட்டிருக்கும் மாடலிங் அத்தியாயம் குறித்தும் பேசினார்.
''கொரோனா காலகட்டத்தில் கிரிக்கெட் பயிற்சிகளுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்த சமயத்தில்தான், மாடலிங் மற்றும் பேஷன் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் வீட்டிற்குள்ளேயே பேஷன் போட்டோ ஷூட்களை நடத்தினோம். அதன்மூலம்தான், பேஷன் துறை, மாடலிங்கில் கால் பதிக்கும் தன்னம்பிக்கை பிறந்தது. இதற்கிடையில், தேசிய அளவிலான அழகிப்போட்டி குறித்து தெரிந்துகொண்டு, அதற்காக தயாரானேன்.
மிஸ்.டீன் அழகிப்போட்டியான அதில், இந்தியா முழுவதிலும் இருந்து 13 முதல் 19 வயதிற்குட்பட்ட டீன் ஏஜ் பெண்கள் கலந்துகொண்டனர். புதுமையான களம் என்பதால், தொடக்கத்தில் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. இருப்பினும் எல்லா சவால்களையும் சமாளித்துவிட்டேன்'' என்றவர், ஆக்ராவில் 4 நாட்களாக நடந்த பல்வேறு போட்டிகளை சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறார்.
''கேள்வி-பதில் சுற்று, நேர்காணல், பிட்னஸ், ராம்ப் வாக், பிரஷர் ஹேண்ட்லிங்... இப்படி 5 நாட்களும், எனக்கு மிகவும் புதுமையான தேர்வுகளை எதிர்கொண்டேன். இருப்பினும் அவை அனைத்தும் ரசிக்கும்படியாகவே இருந்தது. இதில் ஒய்யாரமாக நடக்கும் 'ராம்ப் வாக்' சுற்றின் ஒவ்வொரு அசைவையும் அனுபவித்தேன்'' என்று போட்டி அனுபவங்களை உற்சாகமாக பகிர்ந்துகொள்பவர், அந்த பேஷன் போட்டியில், 'மிஸ். தமிழ்நாடு' என்ற பட்டத்தை வென்று வந்திருக்கிறார்.
''இந்த அழகி பட்டம் உங்களுக்கு கிடைத்தால் அதன்மூலம் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்குவீர்கள்? என்ற கேள்வி, இறுதிச்சுற்றுக்கு தேர்வான எல்லோரிடமும் முன்வைக்கப்பட்டது. அதற்கு நான் 'அழகி பட்டத்தின் வாயிலாக ஆண்-பெண் பாலின பாகுபாட்டையும், நிறம் சம்பந்தப்பட்ட வேறுபாட்டையும் சமூகத்தில் களைய முற்படுவேன்' என பதிலளித்து, 'மிஸ் தமிழ்நாடு' பட்டத்தை வென்றேன்'' என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.
* கிரிக்கெட் பயிற்சி, உங்களது முகப்பொலிவை பாதிக்காதா?
இல்லை. கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பது, சிறுவயதில் இருந்தே எனக்குள் ஊறிப்போன ஒன்று. அதேசமயம், பேஷன் துறையில் கிடைத்திருக்கும் வரவேற்பும், மாடலிங் துறையில் சாதிக்கும் உத்வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இவ்விரண்டும் வெவ்வேறானவை என்றாலும், இவ்விரு இலக்கையும் எட்டிப்பிடிக்க முயற்சிப்பேன். அதேபோல கிரிக்கெட் பயிற்சி, முகப்பொலிவையும், அழகையும் கெடுத்துவிடும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் நிறத்திற்கும், அழகிற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நம்புவதில்லை.
* உங்களுடைய ஆசை என்ன?
கிரிக்கெட்டராக, அதேசமயம் மாடலாக சாதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
* படிப்பில் நீங்கள் எப்படி?
பெரும்பாலும் கிரிக்கெட் பயிற்சிகளில் பங்கெடுப்பதால், தேர்வுகளில் தேர்ச்சி பெறும் அளவிற்கு படித்து கொள்வேன். ஆவரேஜ் ஸ்டூடண்ட் நான்.