வெற்றிக்காக போராடும் ஜான்வி கபூர்
|என்னை ஒரு வெற்றிப்பட நடிகையாக நிரூபிக்க ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி’ படம் உதவும் என்று தெரிவித்திருக்கிறார் ஜான்வி கபூர்.
மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு 'தடாக்' என்ற இந்திப் படத்தின் மூலமாக, திரைத் துறையில் காலடி எடுத்து வைத்தார். பிரபலமான ஒரு நடிகையின் மகள் என்பதால், ஜான்வி கபூர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தாலும், 'தடாக்' படம் அவருக்கு பெயர் சொல்லும் வகையில் அமையவில்லை.
அடுத்ததாக, 'கஞ்சன் சக்ஷேனா: த கார்கில் கேர்ள்', 'ரூகி', 'குட்லக் ஜெர்ரி' ஆகிய படங்களிலும் நடித்தார். இந்தப் படங்களும் ஜான்வி கபூருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது அவரது நடிப்பில் 'மிலி' என்ற திரில்லர் படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி வெளியாக இருக்கிறது. கதாநாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படமாவது அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் ஜான்விகபூர், 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர், கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட இல்லத்தரசி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஜான்வி கபூர் தன்னுடைய இணைய பக்கத்தில், தான் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது சோசியல் மீடியாவில் ரசிகர்களால் வைரல் ஆனது.
இதுபற்றி ஜான்விகபூர் கூறுகையில், "இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு, அதற்கு என்னை முழுமையாக தயார்படுத்திய பிறகே களத்தில் இறங்கி இருக்கிறேன். என்னை ஒரு வெற்றிப்பட நடிகையாக நிரூபிக்க இந்தப் படம் உதவும்" என்று தெரிவித்திருக்கிறார்.