பனி படர்ந்த 22,850 அடி உயர நிலப்பரப்பில் யோகா செய்யும் வீரர்கள்..! அரிய புகைப்படங்கள் வெளியீடு
|சமீபத்திய சாதனையாக, 24,131-அடி உயர அபி கமின் சிகரத்தில் ஏறி இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் மலையேற்ற வீரர்கள் குழு சாதனை படைத்துள்ளது.
டேராடூன்,
இந்திய-சீனப் போருக்கு மத்தியில், 1962இல் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐ.டி.பி.பி) உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐ.டி.பி.பி), 230க்கும் மேற்பட்ட மலையேறுதல் பயணங்களை வெற்றிகரமாக முடித்த தனிச்சிறப்பு பெற்றுள்ளது.
அந்த வகையில் சமீபத்திய சாதனையாக, 24,131-அடி உயர அபி கமின் சிகரத்தில் ஏறி இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் மலையேற்ற வீரர்கள் குழு சாதனை படைத்துள்ளது.
மலையேறும் குழுவினர் தங்களது வெற்றியைக் கொண்டாடும் வகையில் சிகரத்தின் உச்சியில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினர்.
இந்த நிலையில், 22,850 அடி உயரத்தில், மலை உச்சிக்கு செல்லும் வழியில் கடந்த வாரம், அந்த வீரர்கள் குழு யோகா செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகாண்டில் உள்ள அபி கமின் மலைச்சிகரத்தின் உச்சிக்கு செல்லும் வழியில், பனி படர்ந்த நிலப்பரப்பில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐ.டி.பி.பி) மலையேற்ற வீரர்கள் யோகா செய்தனர். இந்த பகுதி கடல் மட்டத்தில் இருந்து 22,850 அடி உயரத்தில் அமைந்துள்ளது.