சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது கடமை
|சுற்றுச்சூழல் என்பது நம்மைச் சுற்றியுள்ள இயற்கைப் பரப்பாகும். இயற்கையானது காடுகள், கடல்கள் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளையும் கொண்ட தாகும். அறிவியல் வளர்ச்சி எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளதோ அதை பயன்படுத்தும் நாம் சுற்றுச்சூழல் மாசடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
தாவரங்கள், பறவைகள், விலங்குகள், நீர் நிலைகள் ஆகியவற்றை நாம் மாசடையாமல் பார்த்துக் கொண்டால் இயற்கை நம்மையும் நம் வருங்கால சந்ததியையும் பாதுகாக்கும். சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நிலம்
"அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல என்பதற்கிணங்க தோண்டத் தோண்ட வளங்களைக் கொடுக்கும் மண்ணில் தாவர இனங்கள் மட்டுமின்றி பல நன்மைகளை செய்யும் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. நில உயிரினங்கள் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. நிலத்தில் கலக்கும் ஆலைக் கழிவுகளும், அணு கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சுப் பொருட்களும் நிலத்தின் தன்மையை மாற்றி விடுகின்றன. இதன் மூலம் பூமியுடன் தொடர்பு கொள்ளும் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. நிலத்தில் விளையும் காய்கறிகளில் இந்த நச்சுத் தன்மை படர்வதால் மனிதனின் உடலிலும் கலந்துவிடுகிறது.
நீர்
"நீரின்றி அமையாது உலகு என்பார்கள். பூமியின் 75 சதவீதமான பரப்பு நீரினாலே சூழப்பட்டுள்ளது. இந்த நீரானது தொழிற்சாலைக் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதாலும், கிருமி நாசினிகளை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் போது அவை நீரில் கலப்பதாலும் மாசடைகின்றது. உலகுக்கு முக்கியமான நீரானது இன்று ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் என பலவிதமான நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இவை வீடுகளாகவும், கட்டிடங்களாகவும் மாறியுள்ளன. ஆறுகள் எல்லாம் தொழிற்சாலைக் கழிவு நீர்க் கால்வாய்களாகவும், கடல் ஒரு மாபெரும் குப்பைத் தொட்டியாகவும் மாறி நீர் வாழ் உயிர்கள் மடிவதற்கு காரணமாகின்றன.
காற்று
அனைத்து உயிர்களின் சுவாசத்திற்கு இன்றியமையாததாக விளங்கும் காற்று வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையினாலே அதிகளவில் மாசுபடுகின்றது. தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான எரிபொருள் பயன்பாடு காற்றை மாசுபடுத்தி சுவாசப் பிரச்சினை உள்பட பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி அமிலமழை, ஓசோனில் ஓட்டை என பல ஆபத்துகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. காற்றை சுத்தப்படுத்தும் காடுகளை அழிப்பதால் இந்த ஆபத்துகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளால் சுனாமி, எரிமலை வெடிப்பு, வெள்ளம், வறட்சி முதலான உருவாகின்றன. ஆகவே சுற்றுச்சூழலை பாதுகாத்து நோய்க்காரணிகளின் தொற்றுக்கு ஆளாகாமல், சுற்றுச்சூழல் பற்றிய சிறு, சிறு செயல்களின் மூலம் நமது சுற்றுப்புறத்தைக் காக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு என்பதை நாம் உணர்வோம்.