மிதக்கும் காவல் கோட்டை: ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந் தாங்கி கப்பல்
|ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந் தாங்கி கப்பல், 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி நாட்டுக்கு முறைப்படி அர்ப்பணிக்கப்படுகிறது.
ஒரு மிதக்கும் காவல் கோட்டையாக இந்திய கடற்பரப்பில் கம்பீர வலம் வரப்போகும் ஐ.என்.எஸ். விக்ராந்த், நம் நாட்டின் கடற்படைக்கு அசுர பலம் சேர்க்கிறது.
அனேக சிறப்பம்சங்களுக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். விக்ராந்தின் முதலாவது, முக்கியமான விசேஷம், இது உள்நாட்டிலேயே கட்டப்பட்டது என்பதாகும்.
* இந்தியாவின் 4-வது விமானந்தாங்கி கப்பலான இதற்கு, நாட்டின் முதலாவது விமானந்தாங்கி கப்பல் 'விக்ராந்தை' நினைவு கூரும்விதமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு 'தீரம்' என்று பொருள்.
* இன்றைக்கு உலகின் மிகப் பெரிய, நவீன கப்பல்களுள் ஒன்றான 'விக்ராந்தை' இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்ககம் வடிவமைத்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் கட்டியிருக்கிறது. இதற்கு ஆன மொத்த செலவு ரூ.23 ஆயிரம் கோடி. 2003-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட இக்கப்பலின் கட்டுமானப் பணி 2009-லேயே தொடங்கியது. இதன் கடல் வெள்ளோட்டம், கடந்த ஆண்டுதான் நடந்தது.
* இந்த விமானந்தாங்கி கப்பலின் எடை 45 ஆயிரம் டன். நீளம் 262 மீட்டர். அகலம் 62 மீட்டர். உயரம் 59 மீட்டர். 14 தளங்களை கொண்டுள்ளது. 2 ஆயிரத்து 300 பிரிவுகள் உள்ளன.
* ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் உருவாக்கத்தில் 23 ஆயிரம் டன் உருக்கு, 2 ஆயிரத்து 500 கி.மீ. நீள மின்சார வயர்கள், 150 கி.மீ. நீள குழாய்கள், 2 ஆயிரம் வால்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்திய உருக்கில் 3 ஈபிள் கோபுரங்களை உருவாக்கிவிடலாம்.
* ஐ.என்.எஸ். விக்ராந்தில் 2 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் ஒரு முழுமையான ஆஸ்பத்திரி உண்டு. ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேருக்கு சமைப்பதற்கு தயார்நிலையில் பிரமாண்ட சமையல்கூடமும் இருக்கிறது.
* இக்கப்பலில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 700 பேர் பணிபுரிய முடியும். பெண் அதிகாரிகளுக்கு தனிப்பிரிவுகளும் உண்டு.
* இவ்வளவு பெரிய, சிக்கலான வடிவமைப்பை கொண்ட கப்பலை உள்நாட்டிலேயே உருவாக்கியதன் மூலம் உலகத்துக்கு தனது திறனை இந்தியா பெருமிதமாக பறைசாற்றி இருக்கிறது. இதன் 76 சதவீத பாகங்கள் உள்நாட்டைச் சார்ந்தவை. அரசு, தனியார் நிறுவனங்கள் பலவற்றின் ஒருங்கிணைந்த உழைப்பில் விக்ராந்த் பிறந்து, கடலில் தவழ்ந்துகொண்டிருக்கிறது.
* ஐ.என்.எஸ். விக்ராந்தை உருவாக்கியதன் மூலம், சொந்தமாக விமானந்தாங்கி கப்பலை கட்டும் திறன் படைத்த அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைகிறது.
* இந்த கப்பலால் 18 'நாட்' வேகத்தில் தொடர்ந்து 7 ஆயிரத்து 500 நாட்டிகல் மைல் தூரத்துக்கு பயணிக்க முடியும். இக்கப்பலின் அதிகபட்ச வேகம் 28 'நாட்'.
* மிதக்கும் விமான தளமான ஐ.என்.எஸ். விக்ராந்தில் இருந்து 30 விமானங்கள், ஹெலிகாப்டர்களை இயக்க முடியும். அதில், மிக்-29 கே போர் விமானங்கள், கமோவ்-31, எம்எச்-60 ஆர் பல்பயன்பாட்டு ஹெலிகாப்டர்களுடன், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, எடை குறைவான நவீன ஹெலிகாப்டர்களும், போர் விமானங்களும் அடங்கும்.
* இந்த கப்பலில் உள்ள 4 கியாஸ் விசையாழிகள் மூலம் கப்பலுக்கு தேவையான 88 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்துகொள்ளப்படும். இந்த மின்சாரத்தால் பாதி கொச்சின் மாநகரத்துக்கு ஒளியூட்ட முடியும்.
* தற்போது நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டாலும், விக்ராந்தில் இருந்து போர் விமானங்களின் இயக்கத்துடன் அடுத்த ஆண்டு மத்தியில்தான் முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
* விக்ராந்துக்கு முன்பு இந்திய கடற்படையிடம் 'ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா' என்ற ஒரே ஒரு விமானந்தாங்கி கப்பல் பயன்பாட்டில் இருந்தது. அது முந்தைய சோவியத் ரஷியா பயன்படுத்திய அட்மிரல் கோர்ஷ்கோவ் விமானந்தாங்கி கப்பலாகும். அதேபோல இங்கிலாந்தின் எச்எம்எஸ் ஹெர்குலிஸ் விமானந்தாங்கி கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்த் ஆகவும், எச்எம்ஸ் ஹெர்ம்ஸ் விமானந்தாங்கி கப்பல் ஐ.என்.எஸ். விராட் ஆகவும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றன.
* உலகமெங்கும், பல்வேறு பெருங்கடல் பிராந்தியங்களில் செயல்படும் திறன் படைத்த கடற்படை, 'புளூ வாட்டர் நேவி' என்று அழைக்கப்படுகிறது. இந்தியக் கடற்படை அத்தகுதியைப் பெற ஐ.என்.எஸ். விக்ராந்த் உதவும்.
* இன்னும் பெரிதாக சுமார் 65 ஆயிரம் டன் அளவில் 3-வது விமானந்தாங்கி கப்பல் வேண்டும் என்று இந்தியக் கடற்படை வற்புறுத்தி வருகிறது. கடற்படை முன்னாள் தலைமை தளபதி கரம்பீர் சிங், 'இந்திய கடற்படை, கடற்கரையுடன் கட்டிப் போடப்பட்டதாக இருக்கக் கூடாது. கடலில் விமான சக்தி என்பது மிகவும் முக்கியம்' என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
* மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் வேண்டும் என்ற கடற்படையின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்தால், அதன் பெயர் 'ஐ.என்.எஸ். விஷால்' என இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது அதற்கான பணிகளை தொடங்கினால்கூட, நிறைவுபெற்று கடலில் மிதக்கத் தொடங்குவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
* அகில உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவிடம் 11 விமானந்தாங்கி கப்பல்கள் உள்ளன. சர்வதேச கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்த முனையும் சீனாவிடம் 3 விமானந்தாங்கி கப்பல்கள் இருக்கின்றன. மேலும் இரு விமானந்தாங்கி கப்பல்களை உருவாக்கும் எண்ணமும் சீனாவுக்கு இருக்கிறதாம்.
* இந்தியா, அமெரிக்கா, சீனா தவிர இங்கிலாந்திடம் 2, ரஷியா, பிரான்ஸ், இத்தாலியிடம் தலா ஒரு விமானந்தாங்கி கப்பல்கள் உள்ளன.
* இன்றைய நவீன யுத்த காலத்தில் இதுபோன்ற, பெரும் பொருட்செலவிலான, மிதக்கும் பிரமாண்டம் அவசியம்தானா? இதற்கான செலவில் பல போர்க்கப்பல்களை உருவாக்கலாமே என்ற விமர்சனத்தை முன்வைப்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு கடற்படை முழுமை பெறுவதற்கு, ஒரு நாடு தனது கடல் பாதுகாப்பில் திருப்தி அடைவதற்கு விமானந்தாங்கி கப்பல் அதிஅத்தியாவசியம். அதிலும் 7 ஆயிரத்து 500 கி.மீ. கடலோரத்தைக் கொண்ட, இந்திய பெருங்கடலின் காவலனாக நினைக்கும் இந்தியாவுக்கு கடலில் மிதக்கும் விமானதளங்கள் வெகு முக்கியம். பாகிஸ்தானுடன் மோதி வங்காளதேசத்தை உருவாக்கிய 1971-ம் ஆண்டு போரில் நமது முதல் விமானந்தாங்கி கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்த் பிரதான பங்காற்றியதை நினைவில்கொள்ள வேண்டும்.