காய்கறி விற்று காமன்வெல்த் போட்டியில் கலக்கியவர்..!
|இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 109 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார், லவ்பிரீத் சிங்.
இந்த உயரத்தை அடைய அவர் சந்தித்த சவால்கள் அதிகம். 13 வயதில் தன் கிராமத்தில் சில இளைஞர்கள் பளுதூக்குவதை வேடிக்கை பார்த்து அதில் ஈர்க்கப்பட்டார். பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு போட்டிகளில் பங்கேற்க ஆசைப்பட்டவருக்கு பணம் தடையாக இருந்தது.அவரது தந்தை கிருபால் சிங் கிராமத்தில் சிறிய தையல் கடை வைத்திருந்தார். அவரது வருவாய் மூத்த மகன் லவ்பிரீத் சிங்கின் லட்சியத்தை நிறைவேற்ற போதுமானதாக இல்லை. அதனால் பகுதி நேரமாக அமிர்தசரஸில் உள்ள மொத்த காய்கறி வியாபாரிகளிடம் பணியாற்றி, பளுதூக்கும் வீரராகும் கனவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.
அதிகாலை 4 மணிக்கு காய்கறி மண்டிக்குச் சென்றுவிட்டு மூட்டைகளை தூக்குவார். அதன் பின்னர் காலை 6 மணிக்கு வீடு திரும்புவார். அதன்பிறகு பயிற்சிக்கு செல்வார்.
இது குறித்து லவ்பிரீத் சிங் கூறுகையில், "காய்கறி மண்டியில் வேலை பார்த்து தினமும் ரூ.300 வரை சம்பாதிப்பேன். அதன்மூலம் பளுதூக்கும் பயிற்சி பெற்றேன். இந்த வருவாயின் மூலம் உணவு மற்றும் பயிற்சிக்கு தேவையானவற்றுக்கு செலவழித்தேன். தொடர்ந்து பல ஆண்டுகள் போராடினாலும், மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உழைப்புக்குப் பலன் கிடைத்தது. அதுவே நான் இந்திய கடற்படையில் பணியில் சேர உதவியது" என்றார்.