மலிவான மொபைல் டேட்டா வழங்கும் 5 நாடுகள்
|இஸ்ரேல் நாடுதான் உலகில் மலிவான விலையில் மொபைல் டேட்டா வழங்குகிறது. இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் 5 ஜி சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டை இன்னும் விரைவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புழக்கத்தில் இருக்கும் 4ஜி மொபைல் டேட்டா பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு ஒரு ஜி.பி. மொபைல் டேட்டாவின் விலையே ஆயிரம் ரூபாயை எட்டும் நிலையில் இருந்தது.
ஆனால் தொலை தொடர்பு நிறுவனங்களின் போட்டா போட்டி காரணமாக ஒரு ஜி.பி. டேட்டா மலிவு விலையில் கிடைக்கிறது. இருப்பினும் இந்தியாவை விட மலிவு விலையில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள் இருக்கின்றன. அந்த பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது. இது தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த கேபிள் நிறுவனம் ஒன்று குறைந்த விலையில் மொபைல் டேட்டா வழங்கும் 233 நாடுகளை பட்டியலிட்டு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
233 நாடுகளிலும் ஒரு ஜி.பி. மொபைல் டேட்டா எவ்வளவு விலையில் கிடைக்கிறது என்பது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி இஸ்ரேல் நாடுதான் உலகில் மலிவான விலையில் மொபைல் டேட்டா வழங்குகிறது. அங்கு ஒரு ஜி.பி. டேட்டா வெறும் 0.04 அமெரிக்க டாலர் விலையில்தான் விற்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்புப்படி ஒரு ஜி.பி. டேட்டா விலை 3 ரூபாய் 19 காசுகள்தான்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இத்தாலி ஒரு ஜி.பி. டேட்டாவை 0.12 அமெரிக்க டாலர் விலையில் வழங்குகிறது. இந்திய ரூபாய் மதிப்புப்படி தோராயமாக ரூ.9.57. ஐரோப்பிய நாடான சான் மரியோ ஒரு ஜி.பி. மொபைல் டேட்டாவை 0.14 அமெரிக்க டாலர், அதாவது ரூ.11.17 என்ற விலையில் வழங்கி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
நான்காவது இடத்தை பிடித்துள்ள பிஜி தீவில் ஒரு ஜி.பி. மொபைல் டேட்டாவின் விலை 0.15 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.11.97. ஐந்தாவது இடத்தை பிடித் திருக்கும் இந்தியாவில் ஒரு ஜி.பி. டேட்டாவின் சராசரி மதிப்பு 13 ரூபாய் 56 காசுகள். அதாவது 0.17 அமெரிக்க டாலர்கள்.
உலகில் மிகவும் அதிக விலையில் மொபைல் டேட்டாவை வழங்கும் 5 நாடுகளின் பெயர்களும் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவு மொபைல் டேட்டாவை அதிக விலைக்கு வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு ஒரு ஜி.பி. மொபைல் டேட்டாவின் விலை 41.06 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,275.93.
இரண்டாவது இடம் பிடித்திருக்கும் பால்க்லாண்ட் தீவில் ஒரு ஜி.பி. மொபைல் டேட்டாவின் விலை சுமார் 38.45 அமெரிக்க டாலர்கள் (ரூ.3,067.70). அதற்கு அடுத்த இடங்களில் சாவோ டோம் மற்றும் பிரின்சிப் (29.49 அமெரிக்க டாலர், ரூ. 2,352.83), நியூசிலாந்தின் டோகேலாவ் (17.88 அமெரிக்க டாலர்கள், ரூ.1,426.54), ஏமன் (16.58 அமெரிக்க டாலர்கள், ரூ.1,322.82) போன்ற நாடுகள் உள்ளன.