சென்னை ஐ.ஐ.டி.யில் டிஜிட்டல் கடல்சார் எம்.பி.ஏ. படிப்பு தொடக்கம்
|உலகில் முதல் முறையாக சென்னை ஐ.ஐ.டி.யில் டிஜிட்டல் கடல்சார் எம்.பி.ஏ. படிப்பு தொடங்கியுள்ளது.
சென்னை,
உலகிலேயே முதல் முறையாக டிஜிட்டல் கடல்சார் மற்றும் வினியோக தொடர்பு பாடத்தை கொண்ட எம்.பி.ஏ. படிப்பு சென்னை ஐ.ஐ.டி.யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் ஐ.ஐ.டி. வளாகத்தில் பயிற்சி என நெகிழ்வுத் தன்மையுடன் இந்த படிப்பு இருக்கிறது.
இந்த புதிய படிப்பை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி தலைமை தாங்கினார். இதில் சென்னை ஐ.ஐ.டி. டிஜிட்டல் கடல்சார் வினியோக தொடர்பு பாடத்திட்ட தலைவர் கே.முரளி, மேலாண்மை கல்வித் துறை தலைவர் எம்.தேன்மொழி, எம்.பி.ஏ. திட்ட இயக்குனர் ரமேஷ் சிங்கால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய படிப்புக்கான 2 ஆண்டு பாடத்திட்டத்தை சென்னை ஐ.ஐ.டி. மேலாண்மை கல்வித் துறையும், கடல்சார் என்ஜினீயரிங் துறைகள், ஐ-மாரிடைம் கன்சல்டன்சி ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளது.
குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம், குறைந்தது 2 ஆண்டு முழு நேர பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த படிப்புக்கு https://www.iitm.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கான மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே நடைபெறும். மேலும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்.பி.ஏ. படிப்புக்கான பாடத்திட்டம் செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்குகிறது.
இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி கூறுகையில், 'நவீன கடல்சார் மற்றும் வினியோக தொடர்பு (டிஜிட்டல் மாரிடைம் மற்றும் சப்ளை செயின்) தொழிலில் ஏற்படும் சிக்கல்களை கையாளும் வல்லுனர்கள் மற்றும் தொழில் முனைவோரின் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் வகையில் புதுமையான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்ப செயல்பாடுகளை மேம்படுத்துதல், அதனுடன் சார்ந்த வளர்ச்சியை அதிகரித்தல் தொடர்பான புரிதலை இதில் சேருபவர்களுக்கு அறிய செய்வதே எங்களுடைய குறிக்கோள்' என்றார்.