< Back
சிறப்புக் கட்டுரைகள்
பீட்ரூட்டும்.. உதடும்..!
சிறப்புக் கட்டுரைகள்

பீட்ரூட்டும்.. உதடும்..!

தினத்தந்தி
|
25 Sept 2022 7:05 PM IST

பீட்ரூட்டில் இருக்கும் வைட்டமின் சி சத்து, உதட்டில் படர்ந்திருக்கும் கருமை நிறத்தை போக்கக்கூடியது.

உதட்டை அழகுபடுத்துவதற்கு லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதன பொருட்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்றில்லை. உதட்டின் நிறத்திற்கு ஏற்பவே பளிச் வண்ணத்தில் மிளிரும் பீட்ரூட்டும் சிறந்த உதட்டு அலங்கார பொருள்தான். இது சரும பராமரிப்பிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. உதடுகளை இளஞ்சிவப்பு நிறத்தில் பொலிவு பெற வைப்பதோடு மென்மைத்தன்மையை தக்க வைக்கக்கூடியது.

சரும பராமரிப்பில் கவனம் செலுத்துபவர்கள் முகத்திற்கு விதவிதமான பேஸ் பேக்குகளை பயன்படுத்துவதுண்டு. முகத்திற்கு கொடுக்கும் முக் கியத்துவத்தை உதடுகளுக்கு கொடுக்க தவறிவிடுவார்கள். உதட்டு பராமரிப்புக்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும் என்று தெரியாமல் குழம்பவும் செய்வார்கள். அந்த குறையை பீட்ரூட் போக்கிவிடும். உதட்டுக்கு பிரகாசத்தையும், கூடுதல் அழகையும் பெற்று தரும்.

பீட்ரூட்டில் இருக்கும் வைட்டமின் சி சத்து, உதட்டில் படர்ந்திருக்கும் கருமை நிறத்தை போக்கக்கூடியது. பீட்ரூட் இளம் சிவப்பு நிறத் தினால் ஆனது. அதே நிறத்தை உதடுகளுக்கும் கொடுக்கக்கூடியது. உதட்டுக்கு இயற்கை மாய்ஸ்சுரைசராக செயல்படக்கூடியது. பீட்ரூட் உதட்டுக்கு அழகு சேர்ப்பதோடு, உலர்ந்த உதடுகளை பொலிவாக்கக் கூடியது.

உதட்டு வெடிப்புகளையும் போக்கக்கூடியது. தினமும் பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வந்தால், உதடுகள் மென்மையாக மாறும். மேலும் உதடுகளில் உள்ள வெடிப்புகள், கோடுகளை குறைத்து இளமை பொலிவை தக்க வைக்கும். விரைவில் வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதை தள்ளிப்போடும்.

பீட்ரூட்டை நன்றாக மசித்து, அதனுடன் சர்க்கரை கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து தினமும் உதட்டில் தடவி வரலாம். அவ்வாறு செய்யும்போது இறந்த செல்கள் அகற்றப்படும். உதடுகள் மென்மையாகவும், பிரகாசமாகவும் மிளிரும்.

பீட்ரூட் இயற்கையான 'லிப் பாம்' ஆகவும் செயல்படக்கூடியது. ஒரு துண்டு பீட்ரூட்டை அரை மணி நேரம் பிரிட்ஜில் குளிர வைத்துவிட்டு, அதனை உதடுகள் மீது தடவினால் போதுமானது. சில நொடிகள் தேய்த்தாலே போதும். உதடுகள் ரோஜா மலர் போல பொலிவுடன் காட்சி அளிக்கும். ஒரு டீஸ்பூன் பீட்ரூட் சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து உதடுகள் மீது தேய்த்து வந்தாலும் உதடுகள் பிரகாசமடையும். பீட்ரூட் மற்றும் எலுமிச்சை இரண்டிலும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை உதடுகளை பிரகாசமாக்க உதவுகின்றன.

மேலும் செய்திகள்