நரை முடி கறுப்பாக இயற்கை சாயம் (டை) தயாரிக்கும் முறை-சித்த மருத்துவ நிபுணர்
|உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்வி களுக்கு சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா) பதில் அளிக்கிறார்.
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
உங்கள் உடம்புக்கு என்ன?, தினத்தந்தி,
86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600007.
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
கேள்வி: என் மகளுக்கு மாதத்தில் இருமுறையாவது சளி, காய்ச்சல் வருகிறது. இப்பொழுது 'பப்' பயன்படுத்துகிறோம். இதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளதா? (தேவி, காஞ்சீ புரம்)
பதில்: உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, வைட்டமின்கள், தாதுக்கள் குறைவாக இருப்பது, ரத்த சோகை, ரத்தத்தில் அதிகரித்து காணப்படும் ஈஸ்னோபில் செல்கள், ஒவ்வாமை, சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஏற்படும் வைரஸ் பாக்டீரியா தொற்றுகள் இவைகளால் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வருகிறது.
சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. குறிப்பாக சளி, இருமல், குணமடைய தாளிசாதி சூரணம் 1 கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. அளவு எடுத்து தேனில் கலந்து இருவேளை சாப்பிட வேண்டும். ஆடாதோடை மணப்பாகு-5 மி.லி. வீதம் காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். மேலும், தூதுவளை நெய் 5 மி.லி. வீதம் இரவு வேளை சாப்பிடலாம்.
வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மூலிகைகளை கொண்டே சளி, இருமலை குணப்படுத்தலாம். துளசி-5 இலைகள், கற்பூரவல்லி 2 இலைகள், ஆடாதோடை 2 இலைகள் எடுத்து சாறு பிழிந்து, அதில் தேன் கலந்து சூடுபடுத்தி காலை 5 மி.லி, இரவு 5 மி.லி வீதம் கொடுக்க வேண்டும். தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். முட்டையை ஆப் பாயில் செய்து அதனுடன் மிளகு கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.
பாலில், மிளகு, மஞ்சள், சுக்கு, பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். நண்டு ரசம், நாட்டுக்கோழி ரசம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.
கேள்வி: எனது பெயர் நூர்தீன், வயது 52. கும்பகோணம். எனது இதய ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய விருப்பமில்லை. இதற்கு சித்த மருத்துவ தீர்வுகள் கூறவும்?.
பதில்: இதயத்தில் அடைப்புகள் பெரும்பாலும் கரோனரி ரத்த குழாய்களில் ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. இதற்கான சித்த மருந்துகள் வருமாறு:
வெண் தாமரை இதழ் சூரணம் காலை, இரவு 1 கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் வீதம் வெந்நீரில் சாப்பிட வேண்டும். மருதம் பட்டை சூரணம் 1 கிராம், சிருங்கி பற்பம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி. வீதம் காலை, இரவு வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்க, செம்பருத்தி பூ, இலவங்கப்பட்டை, அலிசி விதை (பிளாக் சீட்), கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் இவைகளை சம அளவில் எடுத்து பொடி செய்து, தேவையான போது ஒரு டீஸ்பூன் எடுத்து டீ போட்டு குடிக்கலாம்.
கேள்வி: எனக்கு குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆகிறது. குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் இல்லை. தாய்ப்பால் சுரப்பதற்கு சித்த மருந்துகள் சொல்லுங்கள்? (ம. வண்டார்குழலி, ஸ்ரீரங்கம்).
பதில்: புரொலெக்டின் ஹார்மோன் மற்றும் ஆக்சிடோசின் ஹார்மோன் சீராக இருந்தால் நன்றாக பால் சுரக்கும். இவைகளை அதிகப்படுத்தி பால் சுரப்பை மேம்படுத்த உதவும் சித்த மருந்துகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் வருமாறு:
தண்ணீர் விட்டான் கிழங்கு அல்லது சதாவேரி பொடி அல்லது லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம். சவுபாக்கிய சுண்டி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம்.
வெந்தயத்தை பொடித்து நல்லெண்ணெய் சேர்த்து களியாக கிண்டி காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். பூண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். அல்லது பூண்டு குழம்பு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அம்மான் பச்சரிசி இலையைக் கீரையாக சாப்பிட்டு வரவேண்டும். பெருஞ்சீரகம் பால் சுரப்பை அதிகரிக்கும். பெருஞ்சீரக டீ அல்லது பெருஞ்சீரகத்தை வறுத்து சாப்பிடலாம்.
பாதாம் பால் குடிக்கலாம். கருப்பட்டியில் செய்த கறுப்பு எள்ளுருண்டை சாப்பிட வேண்டும். பசலைக்கீரை, அரைக்கீரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பப்பாளிக்காயை கூட்டு வைத்து சாப்பிட வேண்டும். பால், தயிர், கேரட், கேழ்வரகு, முருங்கைக்காய், பாலாடைக்கட்டி, சுறாமீன், பாறை மீன், ஓட்ஸ் கஞ்சி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி சாறு இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு தூங்க வேண்டும். இதனால் புரொலெக்டின் மற்றும் அன்புக்குரிய ஹார்மோன் ஆக்சிடோசின் இவை அதிகரித்து பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
கேள்வி: எனக்கு பித்தப்பையில் 5 மி.மீ. அளவில் கல் உள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள். அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்த சித்த மருந்துகள் உள்ளதா? (ஷீலா மேரி, சென்னை).
பதில்: பித்தப் பை பேரிக்காய் வடிவிலிருக்கும் சீரண உறுப்பு. பித்தப்பையில் தான் கல்லீரலில் சுரக்கும் பித்த நீர் சேகரிக்கப்பட்டு உணவு செரிமானத்தின் போது சிறு குடலை வந்தடையும். சுமார் 30-50 மி.லி. பித்த நீர் பித்தப் பையில் இருக்கும். கொழுப்பு செரிமானத்திற்கு பித்த நீர் இன்றியமையாதது. கல்லீரல் சுரக்கும் பித்த நீரில் கொழுப்பு அதிக அடர்த்தியாக இருப்பது, பித்த நீரில் பிலிரூபின் அதிகமாக இருப்பது, பித்தப் பை சரியாக சுருங்கி, விரியாமல் இருப்பது, இவை பித்தப் பையில் கற்கள் உருவாகுவதற்கான பொதுக் காரணங்கள்.
இவை தவிர பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பது, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பது, அதிக எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, உடல் பருமன் போன்ற காரணங்களால் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.
சித்த மருத்துவத்தில் பித்தப்பை மற்றும் பித்தத்தாரை கற்களுக்கான சிகிச்சை முறைகள் வருமாறு:
இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு, பழச்சாறு, புதினா சாறு இவைகளை சமஅளவில் எடுத்து, அதனுடன் சமஅளவு ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை 10 மி.லி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை எடுத்து பழச்சாற்றில் கலந்து குடிக்க வேண்டும். கீழாநெல்லி பொடி அல்லது கீழாநெல்லி சாறு மற்றும் கரிசாலை பொடி அல்லது கரிசாலைச் சாறு எடுத்து மோருடன் கலந்து காலை, இரவு என இருவேளை குடித்து வரவேண்டும்.
கீழாநெல்லி மாத்திரை காலை, மதியம், இரவு 2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். சாந்த சந்திரோதய மாத்திரை காலை, மதியம், இரவு 2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்.
பிடங்கு நாறி இலைப்பொடி, மஞ்சள், கடுக்காய்த் தோல் இவை மூன்றையும் பொடித்து வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் பொடியை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் குடிக்க வேண்டும். இது பிடங்கு நாறிக் குடிநீர் எனப்படும். மண்டூராதிக் குடிநீர், வெடியுப்புச் சுண்ணம், வெடிஅன்னபேதிச் செந்தூரம் இவைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம்.
நார்ச்சத்து அதிகமுள்ள அவரை, பீன்ஸ், கோவைக்காய், சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, கீரைகள் இவைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், பேக்கரி உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும்.
கேள்வி: எனது பெயர் பர்வத நாச்சியார். வயது 67. தஞ்சாவூர். எனது தோல் மிகவும் வறட்சியாக ஊறலுடன் உள்ளது. அரிப்பு தாங்க முடியவில்லை. இதற்கு சித்த மருந்து கூறுங்கள்?
பதில்: ரத்தத்தில் உள்ள ஹிஸ்டமின் அளவு அதிகரிப்பதால், கொசு மற்றும் பூச்சிக் கடியினால், சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர் வீச்சுகளினால், தோலில் ஈரப்பதம் குறைவதால், வைட்டமின் ஏ,ஈ குறைபாட்டினால், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்றவைகளால் தோல்அரிப்பு, வறட்சி ஏற்படும்.
தோல் அரிப்புக்கு பரங்கிப்பட்டை சூரணம் 2 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி, பலகரை பற்பம் 200 மி.கி இவற்றை மூன்று வேளை பால் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கவும்.
அருகன் தைலம், குப்பைமேனி தைலம் இவற்றில் ஏதாவது ஒன்றை தோல் அரிப்பு ஏற்படும் இடத்தில் பூசலாம். பனி நேரங் களிலும், வெப்பமான பகுதிகளிலும் வேலை பார்ப்பது போன்றவற்றால் தோலின் ஈரப்பதம் குறைந்து தோல் வறட்சி அடைகிறது.
தோல் வறட்சிக்கு- கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கழுவி தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் அரைத்து தோல் வறண்ட பகுதியில் பூச வறட்சி நீங்கும்.
மேலும் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி பழச்சாறு, ஆரஞ்சு, சாத்துக்குடி, வெண்பூசணி சாறு, முலாம்பழ சாறு, கேரட், இளநீர், வெள்ளரிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
நரை முடி கறுப்பாக இயற்கை சாயம் (டை)
வயதாகும் போதும், சில சத்துக்கள் குறைபாடு மற்றும் பரம்பரை அறிகுறிகள் காரணமாகவும் தலைமுடி நரைப்பதுண்டு. இதற்கு சந்தையில் கிடைக்கும் தைலங்கள், பவுடர்களில் ரசாயனம் கலந்திருக்கும். இது பலருக்கு தோல் அலர்ஜி மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ரசாயனம் கலந்த செயற்கை சாயம் பூசும் போது முகம் கறுத்துப்போகும். இதை தவிர்த்து நீங்கள் வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரித்து நரை முடியில் பூசி கறுப்பாக மாற்றலாம்.
தேவையான பொருட்கள்: அவுரி இலை சாறு, கருவேப்பிலை சாறு, மருதோன்றி இலை சாறு, பீட்ரூட் சாறு, தேயிலை டிக்காஷன் போன்றவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் 5 முதல் 10 செம்பருத்தி பூவை அரைத்து கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் வற்றும்வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். களிம்பு பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற வைக்கவும். பின்னர் தேவையான அளவு எடுத்து தலைமுடியில் நன்றாக தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் தோறும் செய்து வந்தால் நரை முடி நிறம் மாறும், இதனால் உடல் சூடும் குறையும், கண்கள் குளிர்ச்சி பெறும்.
மீண்டும் புதன்கிழமை...