< Back
சிறப்புக் கட்டுரைகள்
நீர் பாதுகாப்பின் முக்கியத்துவம்
சிறப்புக் கட்டுரைகள்

நீர் பாதுகாப்பின் முக்கியத்துவம்

தினத்தந்தி
|
11 Sept 2022 9:01 PM IST

மழைநீர் சேகரிப்பு திட்டம் உண்மையிலேயே பயன் தரக்கூடியது. பிளாஸ்டிக் கழிவுகளையும் மட்கும் தன்மையற்ற கழிவுகளையும் மண்ணுடன் கலப்பதைத் தடுக்க வேண்டும்.

கடல் தவிர்த்து ஆறு, குளம், ஏரி, கிணறு என பல்வேறு குடிநீர் ஆதாரங்களை நம்பியிருந்த நாம், இன்று ஆழ்துளை கிணறுகளை உற்பத்தி செய்தும் தோல்வியையே சந்திக்கிறோம். நீர் ஆதாரங்களை நம் தேவைக்காக அழித்துவிட்டோம். காடுகளைக் குறுக்கினோம். நீர்ப்பரப்பை சுருக்கினோம். மாசுபடுத்தினோம். ஒரு காலத்தில் மனிதன் கணக்கு வழக்கில்லாமல் தண்ணீரை செலவழித்ததை குறிக்கும் விதமாகத்தான் 'பணத்தை தண்ணீராக செலவழித்தல்' என்ற வாக்கியம் தோன்றியிருக்க வேண்டும். தண்ணீர் மீது காட்டிய அசட்டைதான், இன்று விலை கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலையை உருவாக்கி இருக்கிறது.

நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை அழித்து, அவற்றின் மீதுதான் கட்டிடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. எஞ்சி இருக்கும் நீர்நிலைகளையாவது சீர்ப்படுத்தி, பராமரிக்க வேண்டும். மழைநீர், நீர்நிலைகளை சென்றடையும் தடங்களை பராமரிக்க வேண்டும். ஊரின் பெரிய நீர்நிலைகளில் நீரின் மட்டம் உயர்ந்தாலே அந்தப் பகுதியில் இருக்கும் வீடுகளில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறு போன்றவற்றிலும் நீரின் மட்டம் உயரும்.

மழை நீர் நிலத்தினுள் சென்றால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தாலே தண்ணீர் பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்கலாம். பெருகிவரும் கான்கிரீட் சாலைகளும் பிளாஸ்டிக் குப்பைகளும் மழை நீர், மண்ணுக்குள் ஊடுருவிச் செல்வதைத் தடுக்கின்றன. கூடுமானவரை பிளாஸ்டிக் கழிவுகளையும் மட்கும் தன்மையற்ற கழிவுகளையும் மண்ணுடன் கலப்பதைத் தடுக்க வேண்டும்.

வீணாக ஓடி மறையும் தண்ணீரைச் சேகரிப்பதற்கான மழைநீர் சேகரிப்பு திட்டம் உண்மையிலேயே பயன் தரக்கூடியது. மழை நீரை நேரடியாகச் சேமிப்பது ஒரு வகை என்றால், அந்த நீரை நிலத்தினுள் செலுத்துவது மற்றொரு வகை. மழை நீரை நிலத்தினுள் செலுத்துவதால் அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும். மழை நீர் சேகரிப்பு கட்டுமானத்துக்காக அதிகளவில் பணம் செலவிடத் தேவையில்லை. நகர்ப்புற குடியிருப்புகளிலும், வணிக வளாகங்களிலும் இவற்றை நிர்மாணிக்கலாம். கிராமப்புறங்களில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதுடன் குடிசை வீடுகள், ஓட்டு வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கலாம். இப்படிச் சேகரிக்கப்படுகிற தண்ணீர், பிற்காலத்தில் நமது தினசரி பயன்பாட்டுக்கு கைகொடுக்கும். எனவே இருக்கும் தண்ணீரை முறைப்படுத்தி, பாதுகாப்பது மட்டுமே அடுத்துவரும் தலைமுறைக்கு நாம் சேர்த்துவைக்கும் மிகப்பெரிய சொத்து.

மேலும் செய்திகள்