< Back
சிறப்புக் கட்டுரைகள்
வாழைப்பழங்களை ஏன் அதிகம் சாப்பிடக்கூடாது?
சிறப்புக் கட்டுரைகள்

வாழைப்பழங்களை ஏன் அதிகம் சாப்பிடக்கூடாது?

தினத்தந்தி
|
21 Feb 2023 6:10 PM IST

தினமும் இரண்டு வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால், உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களுள் ஒன்று வாழைப்பழம். இதனை உட்கொள்வது உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் உதவும்.

வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், சர்க்கரை, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. மேலும் செரிமானத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் நார்ப்பொருளை கொண்டுள்ளது. இது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவும்.

ஆனால் வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஒரு வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரிகள் உள்ளன. தினமும் இரண்டு வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால், உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். மேலும் பொட்டாசியத்தின் அளவும் மிக அதிகமாக இருப்பதால், வாழைப்பழத்தை அதிகமாக உட்கொண்டால், தலைசுற்றல், வாந்தி, நாடித் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

வாழைப்பழம் சாப்பிடுவதால் பல்லில் துவாரம் ஏற்படும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இதில் நிறைய மாவுச்சத்து உள்ளது. அது பற்களுக்கு இடையில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். எனவே வாழைப்பழத்தை சாப்பிட்டதும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதில் இருக்கும் மாவுச்சத்து பற்களில் படிந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

வாழைப்பழத்தில், வைட்டமின் பி6 அதிக அளவில் காணப்படுகிறது. அதனை அதிகம் உட்கொள்வது நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். 'பாடிபில்டிங்' பயிற்சி செய்து கட்டுடல் அழகை பேணுவதற்காக வாழைப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படலாம். ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் காணப்படுகிறது. அதனை சமையலில் சேர்த்து தினமும் உட்கொண்டால், வாயு தொந்தரவு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பழுத்த வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் கலந்திருக்கும். இது செரிமானத்திற்கு நல்லது. எனினும் வாழைப்பழத்தில் தண்ணீர் குறைவாக இருப்பதால் மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே அதிகம் உட்கொள்ளக்கூடாது.

வாழைப்பழத்தில் கிளைசெமிக் கூறுகள் உள்ளன. அவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்யும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் வாழைப்பழங்களை குறைந்த அளவுஉட்கொள்ளுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உட்கொள்வதுதான் சரியானது.

சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைஉள்ளவர்கள் பொட்டாசியம் நிறைந்த உணவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் குறைந்த அளவே வாழைப்பழம் உட்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்