இயற்கை சூழ்ந்த வீடு
|ஒரு மரத்தை கூட வெட்டாமல் குறைந்த செலவில் இயற்கை சூழல் நிறைந்த வீட்டை கட்டியிருக்கிறார், கேரளாவைச் சேர்ந்த லயா ஜோசுவா.
எதிர்காலத்தை வளமாக்குவதற்கும், நிகழ்காலத்தில் வாழ்வதற்கும், கடந்த காலத்தைப் பாதுகாப்பதே இவரது தத்துவம். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவரான லயா சமூக சேவகராகவும், இயற்கை மருத்துவ நிபுணராகவும் திகழ்கிறார்.
இந்த தத்துவம்தான் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஜோசுவா வீட்டில் பிரதிபலிக்கிறது. இது குறித்து ஜோசுவா, "இயற்கைக்கு நெருக்கமான மற்றும் எங்கள் இதயங்களுக்கு நெருக்கமான வீட்டை விரும்பினோம். நாங்கள் விரும்பியதைப் போலவே, 2,700 சதுர அடி கொண்ட வீட்டை பசுமையான சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் கட்டியுள்ளோம்.
சுற்றுச்சூழல் பணியாளர் மற்றும் இயற்கை மருத்துவ பயிற்சியாளர் என்ற முறையில், வீட்டை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்றுவதில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன். எந்தவொரு மரத்தையும் வெட்டாமல், அல்லது தீங்கிழைக்காமல் ஒரு வீட்டை கட்ட விரும்பினோம்.
பெரும்பாலும் கற்பாறைகள், கூரை ஓடுகளைப் பயன்படுத்தினேன். பழைய அல்லது இடிக்கப்பட்ட வீடுகளிலிருந்து பயன்படுத்தப்பட்ட மரங்களை வாங்கினேன். இருந்தாலும், நாங்கள் விரும்பியபடி வீட்டைக் கட்டும் கட்டிடவியலாளரை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஒரு வழியாக ஜோசப் மேத்யூ என்ற கட்டிடவியலாளரை சந்தித்தோம். அவர் எங்களுக்கு உதவிகரமாக இருந்தார்" என்றார்.
இது குறித்து கட்டிடவியலாளர் ஜோசப் மேத்யூ, "பெரும்பாலும் நான் சூழலுக்கேற்ற வீடுகளை கட்டி வருகிறேன். கூரை ஓடுகளையே பயன்படுத்துகிறேன். இது வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இந்த வீடு 50 சதவிகிதம் கூரை ஓடுகளைப் பயன்படுத்தியே கட்டப்பட்டுள்ளது" என்றார்.