தியாகிகளுக்கு மறுக்கப்படும் கவுரவம்
|சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில், அவர்கள் 45 பேரும், சடச்சனாவில் உள்ள ஜீவராஜ் தோசி வீட்டில் தங்கி இருந்தனர். சுதந்திர போராட்டத்தில் ஒற்றுமையாக செயல்பட்ட 45 பேரும் வசித்த வீட்டை நினைவிடமாக மாற்ற அரசு முன்வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இன்று 76-வது சுதந்திர தினம். இந்தியாவுக்கு அவ்வளவு எளிதில் சுதந்திரம் கிடைத்து விடவில்லை. நமது நாட்டிற்கு வாணிபம் செய்யவந்த ஆங்கிலேயர்களிடம் அடிமையாக சிக்கிக்கொண்ட இந்தியர்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தர பலரும், தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். அப்படிப்பட்ட தியாகிகளுக்கு உரிய கவுரவம் கிடைப்பது இல்லை. கர்நாடகத்திலும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 45 பேர் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை உரிய கவுரவம் வழங்கப்படவில்லை என்று, அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து 525 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, விஜயாப்புரா. இந்த மாவட்டத்தில் உள்ளது சடச்சனா என்ற பகுதி. இந்தியாவின் சுதந்திரத்திற்காக காந்தியடிகள் அமைதியான வழியில் போராட்டம் நடத்திக்கொண்டு இருந்த போது சடச்சனாவைச் சேர்ந்த ஜீவராஜ் தோசி என்பவர் காந்தியடிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். சுதந்திர போராட்டம் குறித்து அவர் மக்களிடையே தீவிர பிரசாரம் செய்தார். அவரது பிரசாரத்தால் கவரப்பட்ட சடச்சனாவைச் சேர்ந்த ஹிரமல்ல சன்னபசப்பா, மேலு ஹிரப்பா, ஹல்லப்பா பசவப்பா, குரு பாலப்பா, குரு பாதப்பா, கோவிந்த பாலப்பா, ராஜப்ப குரப்பா உள்பட 45-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுதந்திர போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
'நாட்டிற்காக வாழ்வோம் அல்லது நாட்டிற்காக உயிரை விடுவோம்' என்ற கோஷத்துடன் 45 பேரும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர். விஜயாப்புரா மற்றும் மராட்டிய பகுதிகளில் பம்பரம் போல் சுழன்று 45 பேரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிரசாரம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது பிரசாரத்தால் கடும் கோபம் அடைந்த ஆங்கிலேய அரசு 45 பேரையும் பிடித்து சிறையில் அடைத்தது. மேலும் அவர்களுக்கு சிறைக்குள் பல்வேறு துன்பங்களை ஆங்கிலேய அதிகாரிகள் கொடுத்தனர். ஆனாலும் 45 பேரும் விடாப்பிடியாக 'சுதந்திரமே எங்கள் உயிர்மூச்சு' என்று உரக்க முழங்கினர். சில கால தண்டனைக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகும் கூட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டனர்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில், அவர்கள் 45 பேரும், சடச்சனாவில் உள்ள ஜீவராஜ் தோசி வீட்டில் தங்கி இருந்தனர். தற்போது அந்த வீடு மிகவும் பாழடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் அந்த 45 பேருக்கு உரிய கவுரவம் அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு நினைவிடம் கூட அமைக்கப்படவில்லை, அவர்களின் குடும்பத்தினருக்கும் உரிய சலுகைகள் வழங்கப்படவில்லை என்பது அந்தப் பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. சுதந்திர போராட்டத்தில் ஒற்றுமையாக செயல்பட்ட 45 பேரும் வசித்த வீட்டை நினைவிடமாக மாற்ற அரசு முன்வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.