வெப்ப அலை: தவிர்க்க கூடியதும்.. கடைப்பிடிக்க வேண்டியதும்..!
|வெப்ப அலை வீரியம் தாங்காமல் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்திருக்கிறார்கள். சிலருக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. வெப்ப அலையின்போது ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு உடலில் நீர்ச்சத்தை பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
கோடை காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டின் பல பகுதிகளில் வெப்பம் தணியாத நிலை நீடிக்கிறது. கடந்த சில வாரங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்ப நிலை உயர்ந்து சமவெளி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குளிர்ச்சி நிலவக்கூடிய மலைப்பிரதேசங்களில் கூட 30 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. கடலோர பகுதிகளில் உள்ள நகரங்களில் 37 டிகிரிக்கும் அதிகமாக வெப்ம் நிலவுகிறது. பல நகரங்களில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்தபாடில்லை. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 25-க்கும் மேற்பட்ட வெப்ப அலைகள் உருவாகி உள்ளன. அவற்றுள் நான்கு வெப்ப அலைகள் வட மாநிலங்களின் சில பகுதிகளை கடுமையாக தாக்கியுள்ளன.
வெப்ப அலையின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்:
பகல் வேளையில் வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செல்ல நேர்ந்தால் நிழற்பாங்கான இடங்களில் நேரத்தை செலவிட வேண்டும்.
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தொப்பி, குடை எடுத்து செல்லுங்கள். மெல்லிய மற்றும் தளர்வான ஆடைகளை அணிய முயற்சியுங்கள்.
அடிக்கடி தண்ணீர் பருகுங்கள். லஸ்ஸி, எலுமிச்சை ஜூஸ், பழ ஜூஸ் பருகுங்கள். நீர்ச்சத்து அதிகம் கொண்ட தர்ப்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரி போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்.
வீட்டுக்குள் வெப்ப நிலையை கட்டுப்படுத்த உள்ளறை செடிகள் வளருங்கள்.
குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால் அவர்களை குளிர்ச்சியான கால நிலை நிலவும் இடங்களில் அமர செய்யுங்கள். அந்த அறையில் குளிர் சாதன வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
வெப்ப அலையின்போது தவிர்க்க வேண்டியவை:
மதிய வேளை மற்றும் மாலை 3 மணிக்குள் நேரடி சூரிய ஒளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மதியவேளையில் எந்தவொரு கடினமான உடற்பயிற்சிகளையும் செய்யக்கூடாது.
வெப்ப அலையின் போது காபி, டீ மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் அருந்துவதை தவிருங்கள்.
செல்லப்பிராணிகளையோ, குழந்தைகளையோ சூரிய ஒளியில் விளையாட அனுமதிக்காதீர்கள்.
அடர் நிற அல்லது இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிருங்கள்.