மன நிறைவு தந்த `ஸ்டெம் செல்' தானம்
|17 ஆண்டுகளுக்கு முன்பு மகனை புற்றுநோயால் இழந்தவர், `ஸ்டெம் செல்' தானம் மூலம் டீன் ஏஜ் பெண்ணின் உயிரைக் காப்பாற்றி உள்ளார். புற்றுநோய்க்கு மகனை இழந்த சோகத்தில் இருந்த மனதை, இந்த தானம் நிம்மதி பெற வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அந்த தொழிலதிபரின் பெயர் கிஷோர் பட்டேல். 17 ஆண்டு களுக்கு முன்பு இவரது மூத்த மகன் மோகித் ரத்த புற்று நோய் பாதிப்புக்கு ஆளானார். அப்போது மோஹித்துக்கு 2 வயது கூட நிரம்பவில்லை 21 மாத குழந்தையாக இருந்தான். அவனுக்கு புற்றுநோய் பாதிப்பு மூன்றாம் கட்ட நிலையை எட்டி இருந்தது.
ஆரம்ப நிலையிலேயே கண்டறியாததால் மருத்துவ சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை. பல்வேறு மருத்துவமனைகளை நாடியும் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அமெரிக்காவில் உள்ள மருத்துவர் களையும் அணுகி இருக்கிறார்கள். புற்றுநோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர நோயின் வீரியம் குறையவில்லை.
துரதிருஷ்டவசமாக மோகித் உயிரிழந்துவிட்டான். குழந்தையின் அகால மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையுமே உலுக்கிவிட்டது. குழந்தையை காப்பாற்ற முடியாமல் போன சோகம் மனதை விட்டு அகலாமல் ஆறாத வடுவாக பதிவாகிவிட்டது என்று வேதனையோடு சொல்கிறார், கிஷோர் பட்டேல்.
45 வயதாகும் கிஷோர் மர வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் ரத்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருந்ததால் அதுபோன்ற துயரத்தை எதிர்கொள்பவர்களுக்கு ஏதாவதொரு வகையில் உதவ வேண்டும் என்று முடிவு செய்தார். ரத்த புற்றுநோய், தலசீமியா உள்ளிட்ட கொடிய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அறக்கட்டளை ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அது அரிய வகை நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்களுக்கு நம்மால் ஏதாவதொரு வகையில் தானம் செய்ய முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 2020-ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் `ஸ்டெம் செல்' தானம் செய்வதற்கு கையெழுத்திட்டார். தானம் செய்வதற்கு ஏதுவாக தனது ரத்த மாதிரிகளையும் பதிவு செய்தார்.
தன்னை போல் பிறரையும் தானம் செய்வதற்கு ஊக்கப்படுத்தினார். கொடிய நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்களுக்கு தானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். பெங்களூருவை சேர்ந்த டீன் ஏஜ் வயது பெண்ணிற்கு தனது ஸ்டெம் செல்களை தானமாக வழங்கி இருக்கிறார். ரத்த புற்றுநோய் போன்ற கொடிய நோய் பாதிப்புக்குள்ளான அந்த இளம் பெண்ணிற்கு இவரது `ஸ்டெம் செல்'கள் செலுத்தப்பட்டிருக்கின்றன.
''17 ஆண்டுகளுக்கு முன்பு மகனை இழந்த துக்கம் மனதை விட்டு நீங்காமல் அப்படியே உள்ளது. பல இரவுகளை தூங்காமல் கழித்தேன். மகனின் உயிரை காப்பாற்ற முடியாத இயலாமை இத்தனை ஆண்டு களாக என்னை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது.
இப்போது என் குழந்தையை போல் நோய்வாய்ப்பட்டவருக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பது மன ஆறுதல் அளிக்கிறது. இதை தெய்வீக தலையீடாகவே பார்க்கிறேன். மற்ற குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் போராளியாக இருக்க என்னை தூண்டியது'' என்று மன நெகிழ்வோடு சொல்கிறார்.