நீண்ட காலம் கெட்டுப்போகாத உணவுப்பொருட்கள்
|சில உணவுப்பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாத தன்மை கொண்டவை. அவற்றை பாதுகாப்பாக சேமித்து வைத்தால் அதன் ஆயுள் நீண்ட காலம் நீடிக்கும். அத்தகைய உணவுப்பொருட்கள் சிலவற்றை பார்ப்போம்.
வெள்ளை அரிசி
பிரவுன் அரிசி சுமார் ஆறு மாத காலம் மட்டுமே கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால் வெள்ளை அரிசியை நீண்ட காலம் சேமித்து வைக்க முடியும். அதில் ஈரப்பதம் படர்ந்துவிடக்கூடாது என்பதுதான் முக்கியமானது. காற்றும் புகாத அளவுக்கு மூடி வைத்திருந்தால் விரைவாக கெட்டுப்போகாது. அதன் ஆயுள் நீடிக்கும்.
தேன்
தேன் கெட்டுப்போகாத பொருள் என்றாலும் அதனை சேமிக்கும் விதத்தை பொறுத்தே அதன் ஆயுள் நீடிக்கும். நன்கு பதப்படுத்தப்பட்ட தேனை இறுக்கமாக மூடி சீல் வைத்தால் ஒருபோதும் கெட்டுப்போகாது. 5500 ஆண்டுகள் பழமையான தேன் கெட்டுப்போகாமல் இருந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டதே அதற்கு சாட்சி. பொதுவாகவே தேன் விரைவில் கெட்டுப்போகாது. அதில் பாக்டீரியாக்கள் வளர்வது கடினம் என்பதுதான் அதற்கு காரணம்.
கடுகு
கடுகை அடிக்கடி திறக்காமல் மூடி வைத்தால் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது. கடுகை திறந்த நிலையில் வைத்திருந்தால் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம். அதன் ஆயுள் ஒரு வருடத்துக்கு மேலாக நீடிக்கும்.
சோயா சாஸ்
இதில் சோடியம் அதிகம் உள்ளது. அதன் நொதித்தல் செயல்முறையும் அதன் ஆயுளை நீட்டிக்கச் செய்யும். மூடிய நிலையில் சோயா சாஸை வைத்திருந்தால் கெட்டுப்போகாது. அடிக்கடி திறந்து பயன்படுத்துவதாக இருந்தால் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம். ஒரு வருடத்திற்கும் மேலாக கெடாமல் இருக்கும்.
சிவப்பு ஒயின்
வணிக நோக்கத்தில் தயாரிக்கப்படும் ஒயின்கள் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டிருக்கும். நன்கு பதப்படுத்தப்பட்ட ஒயின்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கெட்டுப்போகாமல் இருக்கும். அதனை திறக்காமல் சேமித்து வைத்திருக்க வேண்டும்.
ஆலிவ்
ஆலிவ் பழங்களை ஜாடியில் போட்டு உபயோகப்படுத்தலாம். அதனை திறக்காமல் வைத்திருந்தால் மூன்று ஆண்டுகள் வரை அதன் ஆயுள் நீடிக்கும்.
உப்பு
உணவு பொருட்களை நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்கும் தன்மை உப்புக்கு உண்டு. அதுபோல் உப்பை உலர்ந்த நிலையில் வைத்திருந்தால் ஒருபோதும் கெட்டுப்போகாது. ஈரப்பதம்தான் அதன் எதிரி.
பாப்கார்ன்
பொரிக்கப்பட்ட பாப்கார்னை உடனே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் மொறுமொறுப்பு இல்லாமல் போய்விடும். விரைவில் கெட்டுப்போய்விடவும் செய்யும். ஆனால் சோள முத்துக்களை உலர்ந்த நிலையில் வைத்திருந்தால் அதன் ஆயுள் பல ஆண்டுகள் நீடிக்கும்.
சர்க்கரை
காற்று புகாத பாட்டில்களில் சர்க்கரையை சேமித்து வைத்தால் நீண்ட காலம் பயன்படுத்தலாம். காற்றும், ஈரப்பதமும் கலந்தால் சர்க்கரையின் தன்மை மாறிப்போய்விடும்.
உலர் பழங்கள்
உலர் பழங்கள் விரைவில் கெட்டுப்போகாது. அதனை குளிர்ச்சியாக வைத்திருந்தால் நீண்ட காலம் நீடிக்கும். குறிப்பாக குளிர்சாதன பெட்டியில் இரண்டு ஆண்டுகள் வரை வைத்து உபயோகிக்கலாம். பிரீசரில் வைத்திருந்தால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கெட்டுப்போகாது.
வெண்ணிலா எசன்ஸ்
இதில் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு போதுமான ஆல்கஹால் உள்ளது. அதனால் நீண்ட காலம் நீடிக்கும். போலியான வெண்ணிலா எசன்ஸின் ஆயுள் குறைவு. ருசியாகவும் இருக்காது. அதனால் கவனமாக வாங்க வேண்டும்.
பால் பவுடர்
பால் பவுடர் நீண்ட காலம் நீடிக்கும். அதனை இறுக்கமாக மூடிய நிலையில் வைத்திருந்தால் இரண்டு ஆண்டுகள் வரை கெட்டுப்போகாது. பிரீசரில் வைத்திருந்தால் அதன் ஆயுளை நீட்டிக்கலாம்.
இன்ஸ்டண்ட் காபி தூள்
இதனை குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும். காற்று, ஈரப்பதம் புகாமல் சரியாக சேமித்து வைத்தால் பல ஆண்டுகள் நீடிக்கும்.
தேங்காய் எண்ணெய்
சமையல், அழகு பராமரிப்பு, மருத்துவம் என பல்வேறு வகைகளில் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. இது நீண்ட ஆயுளை கொண்டது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் நீண்ட காலம் நீடிக்காது.