< Back
சிறப்புக் கட்டுரைகள்
தூக்கத்தை வரவழைக்கும் பழக்கங்கள்
சிறப்புக் கட்டுரைகள்

தூக்கத்தை வரவழைக்கும் பழக்கங்கள்

தினத்தந்தி
|
12 Feb 2023 9:28 PM IST

குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள், அதனால் ஏற்படும் கவலை, பணி நெருக்கடி, நெருக்கமான நபர்களை விட்டுப் பிரிதல் உள்ளிட்ட பல காரணங்கள் தூக்கமின்மைக்கு வழிவகுக்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு போதுமான அளவு தூக்கம் மிக அவசியம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

தினமும் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அது பலருடைய வாழ்க்கையில் சாத்தியமில்லாததாக இருக்கிறது. குறுகிய நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துஎழுபவர்கள் உடல் சோர்வு இல்லாமல் ஓரளவுக்கு சமாளித்துவிடுகிறார்கள். அதே நிலை நீடித்தாலும் ஆபத்தானதுதான். ஒரு சில நாட்கள் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவது இயல்பானது. தொடர்ந்து தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்டால் தூங்குவதற்கு முன்பு ஒருசில பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது அவசியமானது.

பால் பருகுங்கள்:

இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பால் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் பாலில் உள்ளது. இது அன்றைய நாளின் சோர்வை நீக்கி நன்றாகத் தூங்குவதற்கு உதவும்.

குளியுங்கள்:

இரவில் படுக்கும் முன்பு வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இதுவும் தூக்கத்தை வரவழைக்கும். அன்றைய நாளின் களைப்பு நீங்கி உடல் மட்டுமின்றி, மனமும் புத்துணர்ச்சி பெறும். இரவில் குளித்துவிட்டு உறங்கும்போது உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுக்கும் பழக்கமும் கட்டுப்படுத்தப்படும்.

மசாஜ் செய்யுங்கள்:

இரவில் தூங்கும் முன்பு 2 முதல் 5 நிமிடங்கள் உள்ளங்காலில் மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக உள்ளங்காலில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகளில் லேசாக எண்ணெய் தடவி மசாஜ் செய்வது சிறப்பானது. அது உடலையும், உள்ளத்தையும் தளர்வடைய வைக்கும். ஆழ்ந்த தூக்கத்தையும் தரும்.

விலகி இருங்கள்:

இரவில் படுக்கை அறைக்குள் நுழைந்த பிறகு படுத்தவாறே, செல்போன், லேப்டாப், டி.வி. பார்க்கும் பழக்கத்தை கைவிடுங்கள். மனதை அமைதிப்படுத்துவதற்கு வாய்ப்பு கொடுங்கள். அப்படி அமைதியான சூழலை உணர்ந்தால் மூளை செல்கள் தளர்வடைந்து, நல்ல தூக்கம் கிடைக்கும். அடுத்த நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குவீர்கள்.

உணவைத் தவிருங்கள்:

இரவு உறங்குவதற்கு முன்பு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளடங்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்கவும். ரொட்டிகள், நூடுல்ஸ், பாஸ்தா, அரிசி உணவுகள், ஆப்பிள், வாழைப்பழம், பெர்ரி, மாம்பழம், முலாம்பழம், ஆரஞ்சு போன்ற பழங்கள், ஐஸ்கிரீம், மில்க் ஷேக்குகள், கேக், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள், இனிப்பு பொருட்கள், சிப்ஸ் வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

அவை இரவில் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் செரிமான மண்டலத்தின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். நல்ல செரிமானத்திற்கு, இரவில் ஜீரணமாவதற்குக் கடினமாக இருக்கும் உணவைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்