< Back
சிறப்புக் கட்டுரைகள்
பிரபலமாகி வரும் கினிக்கோழிகள் வளர்ப்பு
சிறப்புக் கட்டுரைகள்

பிரபலமாகி வரும் கினிக்கோழிகள் வளர்ப்பு

தினத்தந்தி
|
8 Dec 2022 7:36 PM IST

கினிக்கோழிகள் பண்ணை முறையில் வளர்த்தால் அதிக அளவில் முட்டைகள் உற்பத்தி செய்து லாபம் பெறலாம் .

கினிக்கோழிகள் முட்டை எளிதாக கிடைக்காத நிலை உள்ளது. எனவே பண்ணை முறையில் வளர்த்தால் அதிக அளவில் முட்டைகள் உற்பத்தி செய்து லாபம் பெறலாம் என்பதால், பண்ணை தொழில் முனைவோர் கினிக்கோழி பண்ணைகளை உருவாக்கி வருகின்றனர். இந்த வகை கோழிகளின் பராமரிப்பு முறைகளை தெரிந்து கொண்டால் நல்ல லாபம் பெறலாம்.

3 ரகங்கள்

கினிக்கோழிகளில் சிவப்பு தாடை, நீல தாடை மற்றும் வெள்ளை தாடை என்று 3 ரகங்கள் உள்ளன. கினிக்கோழிகள் வீடு அல்லது பண்ணைக்கு வரும் புதிய நபர்கள் மற்றும் பிற உயிரினங்களை அடையாளம் கண்டு சிறப்பு சப்தம் மூலம் வளர்ப்போருக்கு தெரிவிக்கும் இயல்பு கொண்டவை.

பாம்புகள், பூச்சிகள் மற்றும் பூரான்களை விரட்டி தாக்கி அழிக்கும். இதனால், விவசாயிகள் மற்றும் பண்ணை தொழில் முனைவோர் இந்த வகை கோழிகளை பண்ணைகளில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் வளர்க்கிறார்கள்.

புரூடிங் முறை

கினிக்கோழி குஞ்சுகளை பண்ணை முறையில் வளர்க்கும் போது அவற்றை குளிர் தாக்காமல் பாதுகாப்பது அவசியம்.

இதற்கு புரூடிங் முறையில் குண்டு பல்புகள் மூலம் இளம் சூடான வெப்பத்தை அளிக்கலாம். இளம் குஞ்சுகளுக்கு இரண்டு வாரங்களுக்கு இவ்வாறு வெப்பம் அளிக்கும் போது இறப்பு இல்லாமல் காப்பாற்றலாம். அதன் பிறகு குஞ்சுகளை வளர்ப்பு கொட்டகையில், ஆழ்கூள முறையில் வளர்க்க வேண்டும்.

இந்த குஞ்சுகளுக்கு தீவனமாக மக்காச்சோளம் 25 பங்கு, கம்பு 15 பங்கு, புண்ணாக்கு 5 பங்கு, தவிடு 28 பங்கு கலந்து இந்த கலவையுடன் சிறிது தனுவாஸ் தாது உப்பு சேர்த்து தீவனமாக அளிக்கலாம்.

திறந்த வெளி முறை

6 வார குஞ்சுகளாகியபின், கினிக்கோழிகளை திறந்த முறையில் வளர்க்கலாம். அப்போது, முட்டைக் கோழிக்கான தீவனத்தை அளிக்கலாம்.

அடர்தீவன செலவை குறைக்க பயறு வகை பசுந்தீவனங்களான வேலி மசால், அகத்தி இலைகளை அளிக்கலாம். இந்த தீவன பயிர்களுக்கு அதிகம் தண்ணீர் தேவை இல்லை என்பதால் குறைந்த இடத்தில் பல்லாண்டு பயிராக செழித்து வளர்த்து, கோழிகளுக்கு தரலாம்.

நோய் பராமரிப்பு

கினிக்கோழிகளுக்கு அதிகமாக நோய் தாக்காது. 4 வார வயது வரை குஞ்சுகளுக்கு புரூடிங் சரியான அளவில் இளம் சூடான வெப்பம் அளிக்காத நிலையில் சரியாக கிரகிக்கப்படாத ஓம்புலைட்டிஸ் மற்றும் ஈகோலி நோய்கள் தாக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க இளம் சூடான வெப்பம் மற்றும் 4 முதல் 5 நாட்கள் நோய் எதிர்ப்பு மருந்துகளை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். 2 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்துகளான அல்பென்டசோல் மற்றும் பென்பென்டசோல் மருந்துகள் அளிக்க வேண்டும்.

7 நாட்கள் வயதில் ராணிகெட் நோய் தடுப்பு மருந்தை சொட்டு மருந்தாக கண்களில் விடவும். போதிய காலத்தில் வாய்வழி நோய் தடுப்பு மருந்தும் கொடுக்கலாம். 3 மாதங்களுக்கு ஒரு முறை மீண்டும் இராணிகெட் மருந்து தரப்பட வேண்டும்.

சந்தைப்படுத்தல்

கினிக்கோழிகள் 12 வாரத்தில் 1.2 முதல் 1.3 கிலோ எடையில் இருக்கும். இந்த காலத்தில் இவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இந்த வகை கோழிகள் ஒரு ஆண்டில் 100 முதல் 150 முட்டைகள் இடும். ஒரு முட்டை 8 ரூபாய் என்ற விலையில் விற்றாலும் ஒரு கோழியில் இருந்து முட்டை மூலம் ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். பசுந்தீவனத்தை நாமே உற்பத்தி செய்து தீவனமாக அளித்தால் அடர் தீவன செலவில் 25 சதவீதம் குறையும்.

கினிக்கோழி முட்டையில் அதிக சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இருப்பதால் இந்த முட்டைக்கு தனித்துவமான வரவேற்பு உள்ளது. இவற்றை பட்டி முறையில் இயற்கையான முறையில் வளர்ப்பதால் அதிக அளவு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, கோழி வளர்ப்பில் ஈடுபடுவோர் இந்த கினிக்கோழிகளையும் வளர்த்து கூடுதல் லாபம் பெற முடியும்.

மேலும் செய்திகள்