சில்லறை பிரச்சினைக்கு தீர்வு: அரசு விரைவு பஸ்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட்- பயணிகள், கண்டக்டர்கள் வரவேற்பு
|அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் அனைத்து விரைவு பஸ்களிலும் யு.பி.ஐ. மூலம் டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னையில் மாநகர பஸ்களில் டிக்கெட்டுகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக பல்லாவரம் பஸ் டெப்போவில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்காக பல்லாவரத்தில் உள்ள மாநகரபோக்குவரத்து கழக பஸ் கண்டக்டர்களுக்கு, யு.பி.ஐ. மற்றும் கார்டு மூலம் டிஜிட்டல் முறையில் பணம் பெறும் புதிய கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் படிப்படியாக சென்னையில் உள்ள மற்ற பணிமனைகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக பஸ்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த தொடுதிரை சாதனங்கள் மூலம், பயணிகள் ஏறும் பஸ் நிறுத்தத்தின் பெயரையும் அவர்கள் சேருமிடத்தையும் கண்டக்டர் தேர்வு செய்யலாம். அவர்கள் தேர்வு செய்தவுடன், பயணிகள் பணம், கார்டுகள் மற்றும் யு.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு வகைகளில் டிக்கெட் கட்டணம் செலுத்தலாம். யு.பி.ஐ. முறை தேர்ந்தெடுக்கப்பட்டால், கியூஆர் குறியீடு திரையில் காட்டப்படும். பயணிகள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம். இந்த முறை தற்போது அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் கூறும் போது, 'அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினசரி 900 பஸ்களும், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரம் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த அனைத்து பஸ்களிலும் யு.பி.ஐ. (யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ்) என்று அழைக்கப்படும் ஆன்-லைன் மூலம் பணம் செலுத்தும் முறை முழுமையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பஸ்களில் கண்டக்டர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே ஏற்படும் சில்லறை பிரச்சினை முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. பயணிகளும் குழுவாக செல்வதாக இருந்தால் பெருந்தொகையை கையில் எடுத்து செல்ல வேண்டும். அதேபோல் கண்டக்டர்களும் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் ரூ.40 ஆயிரம் வரையிலான ரொக்க பணத்தையும் பயணத்தின் போது கையில் கொண்டு செல்வதும் பாதுகாப்பானதாக இருக்காது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு யு.பி.ஐ. மூலம் பணம் வசூலிக்கும் முறை ஒரு நல்ல தீர்வாக இருக்கும். பணமில்லா பரிவர்த்தனையை அமல்படுத்துவதற்காக யு.பி.ஐ. முறையை கொண்டு வந்து உள்ளோம்.
ஆன்லைன் பணம் செலுத்த விரும்பாதவர்கள் பணத்தை அளித்தாலும் அதற்கும் டிக்கெட் வழங்கும் முறையும் நடைமுறையில் இருக்கும். இதுதவிர கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டுகள் மூலமும் பணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அனைத்து கண்டக்டர்களிடமும் மின்னணு டிக்கெட் எந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி 28-ந்தேதி சோதனை முறையில் ஒரு குறிப்பிட்ட பஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பயணிகள் மற்றும் கண்டக்டர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் தற்போது அனைத்து விரைவு பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை மாநகர பஸ்களிலும் தற்போது இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோட்டங்களிலும் இந்த முறை கொண்டு வரப்பட உள்ளது' என்றார்.