< Back
சிறப்புக் கட்டுரைகள்
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு
சிறப்புக் கட்டுரைகள்

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு

தினத்தந்தி
|
14 Aug 2022 3:23 PM IST

பிரமாண்டமான தஞ்சைப் பெரிய கோவிலின் சுவர் முழுவதும் கல்வெட்டுகள் ஆக்கிரமித்து இருக்கின்றன.மன்னர் ராஜராஜன், தனது காலத்தில் வெற்றி கொண்ட நாடுகளின் பட்டியலையும் அந்தக் கல்வெட்டில் குறித்து இருக்கிறார்.

அந்தக் கல்வெட்டுகள்தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்தின் அரசியல் வரலாறு, நாகரிகம், சமுதாயச் சிந்தனை, மக்களின் வாழ்வியல் முறை, பல்வேறு கலைகளின் மகோன்னதம் போன்ற பலவற்றை எடுத்துக் காட்டும் ஆவணமாகத் திகழ்கின்றன.

மன்னர் ராஜராஜன், தனது காலத்தில் வெற்றி கொண்ட நாடுகளின் பட்டியலையும் அந்தக் கல்வெட்டில் குறித்து இருக்கிறார்.

தஞ்சைக் கோவில் கருவறையின் வடக்குப் பக்கம் சண்டிகே சுவரர் ஆலயம் அருகே உள்ள சுவரில் அந்தக் கல்வெட்டு, அவரது மெய்க்கீர்த்தியாக மிளிர்கிறது.

"திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக் கொளக் காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி..." என்று தொடங்கி நீண்டு செல்லும் அந்தக் கல்வெட்டில், அவர் வெற்றி பெற்ற நாடுகளின் பட்டியல் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அதாவது அவர், காந்தளூர்ச் சாலை, வேங்கைநாடு, கங்கபாடி, தணிகைபாடி, நுளம்பபாடி, குடமலைநாடு, கொல்லம், கலிங்கம், ஈழ மண்டலம், இரட்டைபாடி ஏழரை இலக்கம், முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம் ஆகிய பகுதிகளை வென்றார் என்பதை அது பறைசாற்றுகிறது.

மன்னர் ராஜராஜன் முன்னெடுத்த அனைத்துப் போர்களிலும் வெற்றியைக் கண்டவர் என்பது மட்டுமே அவரது புகழுக்குக் காரணம் என்று கூறிவிட முடியாது.

இந்தியாவிலேயே முதன் முறையாக, நிலங்களை அளக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி நில வரி வசூலிப்பை எளிமையாக்கியவர்.

அடித்தட்டு மக்கள், பெரிய முதலீடு இல்லாமலேயே வருவாயைப் பெருக்கி வளமான வாழ்வு நடத்துவதற்காக, 'சாவா மூவாப் பேராடு' என்ற உன்னதமான பொருளாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்.

ஏழை எளிய மக்கள் சுலபமாகக் கடன் உதவி பெறுவதற்காக, கோவிலையே வங்கி போலச் செயல்படுத்தியவர்.

ஆட்சி நிர்வாக முறையை, அரசவை நிர்வாகம், ஊரவை நிர்வாகம், கோவில் நிர்வாகம் என்று மூன்றாகப் பிரித்து எளிமைப்படுத்தியவர்.

தரைப்படை, கடற்படை ஆகியவற்றுக்கான உட்கட்டமைப்பை விரிவுபடுத்தி, ஆட்சி நிர்வாகமும் ராணுவமும் நிலைபெறச் செய்தவர்.

கடலில் பல மைல் தூரம் பயணித்து, நாட்டின் மேற்கே நடுக்கடலில் உள்ள மாலத்தீவைக் கடற்படை வலிமையால் கைப்பற்றியவர்.

கடற்கொள்ளையர்களை ஒழித்ததன் மூலம், அயல்நாட்டு வணிகத்தில் ஈடுபடும் வர்த்தகக் குழுவினருக்கு உதவிக் கரம் நீட்டியவர்.

அனைத்துக்கும் மேலாக எத்தனை யுகம் ஆனாலும், ஆடாமல் அசையாமல் இருக்கும் வண்ணம், தஞ்சையில் ராஜராஜீஸ்வரம் என்ற மாபெரும் கற்கோவிலைக் கட்டியவர்.

இப்படி ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தக்காரரான மன்னர் ராஜராஜன் மனதை, இரண்டு கவலைகள் அரித்துக் கொண்டு இருந்தன.

80 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது முன்னோரான முதலாம் பராந்தகன் என்ற சோழ மன்னர், பாண்டிய நாடு மீது படையெடுத்துச் சென்றார். அந்தப் போரில் பாண்டிய மன்னர் ராஜசிம்ம பாண்டியன் தோல்வி அடைந்தார். தங்கள் குலச் சின்னங்கள் சோழர்களிடம் சிக்கிவிடக் கூடாது என்று நினைத்த பாண்டிய மன்னர் ராஜசிம்ம பாண்டியன், குலச் சின்னங்களான மணிமகுடம், இந்திர ஆரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நாட்டைவிட்டுத் தப்பி ஓடினார்.

நட்பு நாடான இலங்கைக்குச் சென்ற அவர், தங்களின் குலச் சின்னங்களை இலங்கை மன்னரிடம் அடைக்கலமாகக் கொடுத்துவிட்டு காட்டுக்குள் ஒளிந்து கொண்டார்.

பாண்டிய மன்னர்களின் குலச் சின்னங்கள் எங்கே இருக்கின்றன என்பது தெரியாததால், அவற்றைச் சோழ மன்னர் பராந்தகனால் மீட்க முடியவில்லை.

பாண்டியர்களின் குலச் சின்னங்கள் இலங்கை மன்னரிடம் இருக்கின்றன என்பது தெரிந்தபோது, அவற்றைக் கைப்பற்ற பராந்தகனுக்குப் பிறகு அடுத்தடுத்து ஆட்சிப் பீடம் ஏறிய சோழ மன்னர்கள், இலங்கை மீது படையெடுத்தனர்.

ஆனால் 80 ஆண்டு காலமாக பாண்டியர்களின் குலச் சின்னங்கள் சோழர்களிடம் சிக்கவில்லை.

மன்னர் ராஜராஜனும், அவரது காலத்தில் இலங்கை மீது படையெடுத்துச் சென்றார். கப்பல் படை, தரைப் படை ஆகிய இரண்டு படைகள் ஒன்று சேர்ந்து நடத்திய தாக்குதலில், இலங்கை முழுவதும் கைப்பற்றப்பட்டது.

அப்போது மன்னர் ராஜராஜன், பாண்டியர்களின் குலச் சின்னங்கள் இலங்கையில் எங்கே இருக்கின்றன என்று தேடினார். ஆனால் அவரால் அதனைக் கண்டுபிடித்துக் கைப்பற்ற முடியவில்லை.

இலங்கையை முழுவதுமாக வெற்றி கொண்ட தன்னாலும் பாண்டியர் குலச் சின்னங்களை மீட்க முடியவில்லை என்பது மன்னர் ராஜராஜனின் கவலைகளில் ஒன்றாக இருந்தது.

தமிழகத்தின் வடமேற்குப் பகுதியான மேலைச் சாளுக்கிய தேசத்தை சத்யாச்சரியன் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். (அமரர் கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் நாவலைப் படித்தவர்கள், அதில் வரும் இரண்டாம் புலிகேசி என்ற சத்யாச்சரியன் கதாபாத்திரத்தை மறந்து இருக்க மாட்டார்கள். அவரது வம்சத்தில் பிறந்த இந்த சத்யாச்சரியன், 2-ஆம் தைலபன் என்பவரின் மகன். இவர், மன்னர் ராஜராஜன் காலத்தைச் சேர்ந்தவர்).

சத்யாச்சரியன் அடிக்கடி எல்லையில் சோழர்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்தார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னர் ராஜராஜன் தீர்மானித்தார்.

9 லட்சம் படை வீரர்களுடன் மேலைச் சாளுக்கியத்துக்குப் படையெடுத்துச் சென்ற ராஜராஜனும், அவரது மகன் ராஜேந்திரனும், துங்கபத்திரை நதியின் தென்பகுதி வரை முன்னேறிச் சென்று பல இடங்களைக் கைப்பற்றினார்கள். ஆனாலும், துங்கபத்திரை நதியின் வடபகுதியில் உள்ள தலைநகரமான மான்யகேடத்தை அவர்களால் பிடிக்க முடியவில்லை.

போர் நீண்ட நாட்கள் நீடித்ததால், சோர்வடைந்து இருந்த வீரர்களை அழைத்துக் கொண்டு ராஜராஜன் தஞ்சைக்குத் திரும்பிவிட்டார்.

மேலைச் சாளுக்கியப் போரில் முழுமையான வெற்றி கிடைக்காததால் மன்னர் ராஜராஜன் மனம் உடைந்தார்.

மேலைச் சாளுக்கியப் போர் முடிந்து தஞ்சை திரும்பியதும் மன்னர் ராஜராஜன், யாரும் எதிர்பாராத அதிர்ச்சிகரமான ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

"அடுத்த முறை மீண்டும் மேலைச் சாளுக்கியம் மீது போர் தொடுப்பேன். சத்யாச்சரியனை அடக்கி அவனது தலைநகர் மான்யகேடத்தைக் கைப்பற்றுவேன். அதுவரை "கிரிஹர விஹாரம் இல்லை" என்று சபதம் செய்தார்.

'கிரிஹர விஹாரம் இல்லை' என்று அவர் சபதம் செய்த தகவல், செப்பேட்டில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. 'கிரிஹர விஹாரம் இல்லை' என்பது எதைக் குறிக்கிறது என்ற விவரம் செப்பேட்டில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

'கிரிஹர விஹாரம் இல்லை' என்பதை சில ஆய்வாளர்கள், "தஞ்சை அரண்மனையில் உள்ள கிரிஹர விஹாரம் என்ற பகுதிக்குள் நுழைய மாட்டேன்" என்று ராஜராஜன் கூறியதாக மொழிபெயர்த்துள்ளனர்.

வேறு சில ஆய்வாளர்கள், "மலைப் பகுதியில் நடைபெறும் வேட்டை விளையாட்டு கிரிஹர விஹாரம் எனப்படும். அந்த விளையாட்டில் இனிமேல் கலந்து கொள்ள மாட்டேன்" என்பதைத்தான் ராஜராஜன் தெரிவித்ததாகக் கூறி இருக்கிறார்கள்.

தஞ்சை அரண்மனைக்கு அருகே ராஜராஜனுக்கு விருப்பமான புத்தர் விகாரை இருந்தது. தினமும் அங்கு செல்லும் அவர், இனிமேல் அந்த விகாரைக்குச் செல்ல மாட்டேன் என்பதை இவ்வாறு சொல்லி இருக்கிறார் என்று சமஸ்கிருத பண்டிதர்கள் சிலர் கூறுகிறார்கள்.

கிரிஹர விஹாரம் என்பது உயர்ந்த மாளிகைக் கட்டடம் என்று சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

அரச சுக போகத்தை அனுபவிக்க மாட்டேன் என்பதுதான் அதன் பொருள் என்பது வேறு சிலரது கருத்து.

ராஜராஜனின் சபதம் எதைக் குறிக்கிறது என்பதில் இப்போதுவரை குழப்பம் நீடிக்கின்றபோதிலும், அது முக்கியமான சபதம் என்பது மட்டும் தெரிகிறது.

ராஜராஜனின் சபதம் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாகவே தஞ்சை அரண்மனை சில காலமாகத் தனது சோபையை இழந்து காணப்பட்டது.

இளவரசராக ராஜேந்திரன் பதவி ஏற்ற போதும் இந்தச் சோகத்தின் நிழல், அரண்மனை வளாகம் முழுவதும் படர்ந்து இருந்ததைப் பார்க்க முடிந்தது.

ராஜராஜனின் இந்த இரண்டு கவலைகளுக்கும் தீர்வு காணக்கூடிய ஒருவர் உண்டு என்றால் அது அவரது மகன் ராஜேந்திரன் என்பதை அனைவரும் அறிந்து இருந்தார்கள்.

ராஜராஜன், தஞ்சை மன்னராக முடி சூட்டிக் கொண்டபோது அவருக்கு 52 வயது. அப்போது, 25 வயதை நெருங்கி இருந்த ராஜேந்திரன், இளவரசருக்கு உரிய அனைத்து பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து, மன்னர் ராஜராஜன் மேற்கொண்ட அனைத்துப் போர்களிலும் ராஜேந்திரன் படைத் தளபதியாகக் கலந்து கொண்டு சோழப் படைக்கு வெற்றி தேடித் தந்தார்.

ராஜேந்திரனின் திறமைகளை நன்கு அறிந்து கொண்ட தஞ்சை மக்கள், அவர் பாண்டியர்களின் குலச் சின்னங்களை மீட்பதோடு, மேலைச் சாளுக்கிய தலைநகர் மான்யகேடத்தைக் கைப்பற்றி, ராஜராஜனின் இரண்டு கவலைகளையும் தீர்த்து வைப்பது உறுதி என்று திடமாக நம்பினார்கள்.

அப்படிப்பட்ட தகுதியை ராஜேந்திரன் எவ்வாறு வளர்த்துக் கொண்டார் என்ற ரகசியம், அவரது இளமைக்கால வரலாற்றில் புதைந்து காணப்படுகிறது.

(வரலாறு வளரும்)

வியப்பான வினோதம்...

தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய மன்னர் ராஜராஜன், அந்தக் கோவில் சுவர்கள் முழுவதும் தனது கல்வெட்டைப் பதிவு செய்து இருக்கிறார். இதன் மூலம், தஞ்சைக் கோவில் பற்றிய தகவல்களையும், அப்போது நடைபெற்ற ஆட்சி நிர்வாகம், அந்தக் காலத்திய மக்களின் சமூகப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

தஞ்சைப் பெரிய கோவிலைப் போன்ற தோற்றத்தில் கங்கை கொண்ட சோழீச்சரம் என்ற கோவிலைக் கட்டிய மன்னர் ராஜேந்திர சோழன், அந்தக் கோவிலில் தனது கல்வெட்டு எதையுமே பதிவு செய்யவில்லை. தனது வீரப் பிரதாபங்களைக் கல்வெட்டாகப் பதிவு செய்யும் முன் அவர் மரணத்தைத் தழுவினாரா என்பது தெரியவில்லை.

கங்கைகொண்ட சோழீச்சரம் கோவில் சுவர்களில் உள்ள ஏராளமான கல்வெட்டுகளில், ராஜேந்திரனின் கல்வெட்டு ஒன்றுகூட இல்லை என்பது வினோதம்தான்.

மேலும் செய்திகள்