< Back
சிறப்புக் கட்டுரைகள்
மொபைல் போனை நீண்டநேரம் பயன்படுத்தாதீர்கள்...! ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிர்ச்சி தகவல்கள்

Image Credit:www.msn.com

சிறப்புக் கட்டுரைகள்

மொபைல் போனை நீண்டநேரம் பயன்படுத்தாதீர்கள்...! ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிர்ச்சி தகவல்கள்

தினத்தந்தி
|
4 Nov 2022 11:31 AM IST

டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகிவிட்ட மனிதர்கள், பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் பல இன்னல்களுக்கு ஆளாவார்கள்.

சென்னை,

நாம் அனைவரும் டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகிவிட்டோம். நாம், நாள் முழுவதும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கணினி திரையை நோக்கிக்கொண்டு, விசைப்பலகைக்கு மேல் குனிந்து அதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் அல்லது தொடர்ந்து, நீண்டநேரம் நம் கைகளில் உள்ள ஸ்மார்ட்போன்களை பார்க்கிறோம்.

இந்நிலையில், டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகிவிட்ட மனிதர்கள், தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்பதை கண்டறிய டோல்ப்ரீபார்வர்டிங்.காம் என்ற நிறுவனம் ஆராய்ச்சி நடத்தியது.

அதன் முடிவில், ஆராய்ச்சியாளர்கள் 3டி(முப்பரிமாண) முறையில், மனிதனை போன்றதொரு கற்பனை உருவத்தை வடிவமைத்திருக்கிறார்கள். அதற்கு மைண்டி எனப் பெயரிட்டு உள்ளனர்.

எதிர்காலத்தில் மனிதர்கள் குனிந்த முதுகு, நகம் போன்ற கைகள் மற்றும் டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளியாகும் ஒளியில் இருந்து நம் கண்களைப் பாதுகாக்க, கண்களில் கூடுதலாக இரண்டாவது கண் இமை கொண்டு புதிய உடல் வடிவம் கொண்ட மனிதர்களாக நாம் மாறிவிடுவோம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

மேலும், 90 டிகிரி வளைக்கும் வகையில் முழங்கை, தடிமனான மண்டை ஓடு, சிறிய மூளை, கழுத்து கொண்ட மனிதர்களாக நாம் மாறிவிடுவோம்.

இது குறித்து, மேப்பிள் ஹோலிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் உடல்நலம் சார்ந்த ஆரோக்கிய நிபுணர் கேலேப் பேக்கே கூறியதாவது, மனிதர்கள் தங்கள் போனைப் பார்த்து மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவது, அவர்கள் கழுத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் முதுகெலும்பு சமநிலையை இழக்கிறது. இதன் விளைவாக, உங்கள் கழுத்தில் உள்ள தசைகள் உங்கள் தலைப்பகுதியை தாங்கிக்கொள்ள கூடுதல் சக்தியை செலவிட வேண்டும் என்று கூறினார்.

கை, கழுத்து, கண்களில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்?

கைபேசியை கைகளில் மணிக்கணக்கில் வைத்துக்கொண்டிருப்பதால், மோதிர விரல் மற்றும் சிறிய விரல்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. காலப்போக்கில், நம் கைகளில் உள்ள விரல்கள் மாறக்கூடும்.

உங்கள் கைபேசியை கைகளில் மணிக்கணக்கில் வைத்திருக்கும் போது, முழங்கையை நீண்ட நேரம் வளைத்து வைத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது.இது முழங்கை வலியை ஏற்படுத்துகிறது, இதனால் கைகளில் பலவீனம் ஏற்படுகிறது.

அதேபோல, நீண்ட நேரம் கணிணி மற்றும் போனை மணிக்கணக்கில் பார்ப்பதால், கழுத்தின் பின்பகுதியில் உள்ள தசைகள் உங்கள் தலையை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்க சுருங்க வேண்டும். நீங்கள் எவ்வளவு அதிகமாக கீழே பார்க்கிறீர்களோ, அவ்வளவு கடினமாக உங்கள் தலையை உயர்த்த, கழுத்தின் தசைகள் வேலை செய்ய வேண்டும். இந்த தசைகள் அதிகமாக சோர்வடையும் மற்றும் புண் ஏற்படலாம்.

கணிணி மற்றும் போனை மணிக்கணக்கில் பார்ப்பதால், அதிலிருந்து வரும் அதிகப்படியான ஒளியைத் தடுக்க, காலப்போக்கில், மனிதர்கள் கண்களில் உள்ளே, ஒரு பெரிய கண்ணிமை உருவாகலாம். இது கணிணி , மொபைல் திரையிலிருந்து உள்வரும் (புளூலைட்)நீல ஒளியைத் தடுக்க உதவும்.

இத்தகைய பாதிப்புகளை மனிதர்கள் எதிர்காலத்தில் சந்திக்கலாம் என்பதை எச்சரிக்கவே, மைண்டி என்ற 3டி தொழில்நுட்பத்தில் தத்ரூப பெண்ணை உருவாக்கியுள்ளனர். அதன் படங்களை பார்த்தால் நாம் எவ்வளவு பெரிய சிக்கலை சந்திக்க போகிறோம் என்பது தெளிவாக விளங்கும்.

இதிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுங்கள். உடற்பயிற்சி என்பது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு எளிமையான வழியாகும்.

மேலும், உடற்பயிற்சி செய்யும்போது தொழில்நுட்பத்தில் நாம் செலவிடும் நேரத்தை கட்டுப்படுத்துகிறது. எந்தவொரு வணிகத்திற்கும் ஆரோக்கியமான பணியாளர்கள் இருப்பது, எப்போதும் நன்மை பயக்கும். ஆகவே அலுவலகங்களில் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டியது அவசியம்.

ஸ்மார்ட்போன், வீடியோ கேம் மற்றும் டிவி ரிமோட்டை கீழே வைத்துவிட்டு, டிஜிட்டல் திரையில் இருந்து பார்வையை விலக்கிக்கொண்டு, விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

மேலும் செய்திகள்