எடை இழப்புக்கு உதவும் பழங்கள்
|உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்ற உடல் நல பிரச்சினைகளுக்கும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. அவை கலோரிகளின் அளவை அதிகரிக்க செய்துவிடும்.
உடலில் ஊட்டச்சத்துகளின் உள்ளடக்கத்தையும் குறைத்துவிடும். உடல் பருமனுக்கும் வழிவகுத்துவிடும். ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைத்துவிடலாம். உடல் பருமனை குறைக்கும் விஷயத்தில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் மிகுந்திருக்கின்றன. கலோரிகளோ குறைவான அளவிலேயே உள்ளன. உடல் இயக்கம் சீராக நடைபெற உதவுகின்றன. அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் பழங்களை பற்றி பார்ப்போம்.
திராட்சைப்பழம்:
உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவாக திராட்சை கருதப்படுகிறது. இது பொமலோ மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றின் கலவை இனமாகும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் உணவு பட்டியலில் தவறாமல் திராட்சையை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் 40 கலோரிகள் மட்டுமே உள்ளன.
தினமும் உட்கொள்ள வேண்டிய வைட்டமின் சி தேவையில் 65 சதவீதத்தை வழங்குகிறது. திராட்சைப்பழத்தில் கிளைசெமிக் அமிலம் குறைவாக உள்ளது. அது ரத்தத்தில் இயற்கையாக சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு வழிவகை செய்கிறது.
ஆப்பிள்:
நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரை தவிர்க்கலாம் என்று ெசால்வார்கள். பல்வேறு நோய்களை தடுக்கும் தன்மை ஆப்பிளுக்கு உண்டு. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைவதற்கு துணைபுரிவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
110 கலோரிகளை கொண்டுள்ள இது உடலுக்கு இயற்கையான ஆன்டி ஆக்சிடென்டுகளை வழங்கக்கூடியது. ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமற்ற திண்பண்டங்களை சாப்பிடும் எண்ணம் இரண்டு மணி நேரத்திற்கு தலைதூக்காது. மேலும் ஆப்பிளில் இயற்கையான சேர்மங்கள் உள்ளன. அவை உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றன.
ப்ளாக்பெர்ரி - ப்ளூ பெர்ரி:
இவை இரண்டும் உடல் எடை குறைப்புக்கு வித்திடக்கூடியவை. உடலுக்கு தேவையான வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு அளவுகளில் 12 சதவீதம் பெர்ரி பழங்களில் உள்ளது. உடலுக்கு தேவையான 3 கிராம் நார்ச்சத்தை பெர்ரி பழங்கள் சாப்பிடுவதன் மூலம் பெற்றுவிடலாம். 250 கிராம் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் சி தேவையை முழுமையாக பூர்த்தி செய்து விடலாம்.
பேஷன் ப்ரூட்:
இது உடல் எடையை குறைக்க உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது. இதில் வைட்டமின் சி, ஏ, இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. செரிமான அமைப்பை வலுப்படுத்தும் தன்மையும் கொண்டது. அதிக உடல் பருமன் கொண்ட ஆண்கள் இந்த பழத்தை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.
கிவி பழம்:
கிவியில் வைட்டமின் சி, ஈ, போலேட் மற்றும் நார்ச்சத்துகள் நிரம்பியுள்ளன. ரத்த அழுத்த பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் கிவி பழம் சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் விரைவாக உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் கிவி பழத்தை சாப்பிடுமாறு உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
முலாம்பழம்:
முலாம் பழங்களும் குறைவான கலோரிகளை கொண்டவை. முலாம் பழ வகையை சேர்ந்த தர்ப்பூசணி பழத்தில் 40 முதல் 60 கலோரிகளே உள்ளன. மற்ற பழங்களை விட இந்த பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள், பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்றவை அதிகம் நிரம்பி இருக்கின்றன. அவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியவை. மாதுளை, கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, அன்னாசி, பேரிக்காய் போன்ற பழங்களையும் சாப்பிடலாம்.