< Back
சிறப்புக் கட்டுரைகள்
காதல் வாழ்க்கையை புரிந்து கொள்ள நான்கு வழிகள்..!
சிறப்புக் கட்டுரைகள்

காதல் வாழ்க்கையை புரிந்து கொள்ள நான்கு வழிகள்..!

தினத்தந்தி
|
19 Jun 2022 2:40 PM IST

காதல் வாழ்க்கையில் சின்ன சின்ன சண்டைகள் வருவது இயல்புதான். அத்தகைய குட்டி சண்டைகள் வராமல் இருக்க, உங்கள் காதலியை நீங்கள் நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். அத்தகைய புரிதலை உண்டாக்கும் சில விஷயங்களை உங்களுக்காக தொகுத்திருக்கிறோம். படியுங்கள்.

காதல் உறவுகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள். சண்டையில்லாத காதல் வாழ்க்கையை உருவாக்குங்கள்.

1. குத்திக்காட்டாதீர்கள்

காதலி தப்பே செய்திருந்தாலும் எடுத்தவுடனே `எனக்குத் தெரியும் நீ இப்படித்தான் செய்வே'ன்னு என ஆரம்பிக்காதீர்கள். வேறு ஒருவர் குத்திக்காட்டுவதை விட, நீங்கள் குத்திக்காட்டுவதுதான் அவருக்கு அதிகம் வலிக்கும். உங்களைக் காதலிக்கத் தொடங்கிய பெண், இந்த உலகத்தில் வேறு யாரை விடவும் உங்களைத்தான் அதிகம் நம்புவார்.

2. இயல்பாக இருங்கள்

உலகத்திலேயே உங்களுக்கு அதிகம் பிடித்த நபர் உங்கள் காதலியாகத்தான் இருப்பார். கல்யாணம் வரை அநியாயத்துக்கு உச்சத்துக்குப் போய் புகழ்ந்துகொண்டே இருப்பீர்கள். இப்படி இருப்பது, உங்களின் காதல் வாழ்க்கைக்கு நிச்சயமாக ஒருநாள் இடைஞ்சலை கொண்டு வரும். முடிந்தவரை இயல்பாக இருங்கள்.

குறிப்பாக, உங்கள் காதலியுடன் இருக்கும்போது நீங்கள் நீங்களாகவே இருங்கள். இம்ப்ரெஸ் செய்வதாக நினைத்து அளவுக்கு அதிகமாக 'ஐஸ்' வைத்தால், இதுதான் உங்கள் குணம் என நினைத்துக்கொள்வார். என்றாவது ஒருநாள் உங்களின் நிஜ முகம் தெரியவரும்போது அதிர்ச்சியடைவார். நீங்கள் நீங்களாக இருப்பதைத்தான் எந்தப் பெண்ணும் விரும்புவார்.

3. அக்கறை

சுயமான முடிவுகளை எடுப்பதைப் பெண்கள் விரும்பினாலும், தன் மீது அக்கறையுள்ள ஆணைத்தான் எந்த ஒரு பெண்ணும் விரும்புவார். காதலி என்பவர், உங்களின் நிரந்தரத் தோழி; பிரியவே கூடாது என நீங்கள் நினைக்கும் வாழ்க்கைத்துணை. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களைப் பற்றிய விஷயங்களை விட அவர் குறித்த விஷயங்களை நீங்கள் அதிகம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

அவரின் பிறந்த நாள் தொடங்கி அனைத்து விவரங்களையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என விரும்புவார். அதை சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். 'தெருவில் விற்றுக்கொண்டு போனது. உனக்குப் பிடிக்கும்னு வாங்கிட்டு வந்தேன்' என்று நீங்கள் வாங்கி கொடுப்பது உங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அதுதான் அவருக்கு 'ஆனந்தம்'.

4. இடைவெளி

இருவரும் எவ்வளவு அன்யோனியமாக இருந்தாலும் தனி மனித சுதந்திரம் முக்கியமானது. இருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பதையும் அவர் விரும்புவார். இருவரும் இருக்கிறீர்கள். அப்போது ஒரு அழைப்பு வருகிறது. அவர் பேசி முடித்தவுடனே 'போனில் யார்?' என்று கேட்பது உங்கள் காதலிக்கு கோபம் வரவழைக்கும் கேள்வி.

உங்களிடம் சொல்லவேண்டியதாக இருந்தால் அவரே சொல்வார். அந்த இடைவெளியை அவருக்கு வழங்காமல் 'யார்... என்ன?' என்பது போன்ற கேள்விகளை நீங்கள் எழுப்பினால், அதுதான் உங்கள் காதலுக்கு நீங்களே வைக்கும் 'டைம்பாம்'. உங்கள் மொபைலின் பேட்டன் லாக் முதல் மெயில் பாஸ்வேர்டு வரை காதலிக்குத் தெரிந்திருந்தாலும், அவருக்கான சுதந்திரத்தை கொடுத்தே ஆகவேண்டும்.

மேலும் செய்திகள்