இரண்டு வருடத்தில் நான்கு பட்டங்கள்
|கல்லூரிக்கு சென்ற இரண்டே ஆண்டுகளில் 4 பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்து இளம் பட்டதாரி ஆகி இருக்கிறான், ஜாக் ரிக்கோ. இந்த சிறுவனுக்கு வயது 13 தான் ஆகிறது. கலிபோர்னியாவில் பெற்றோருடன் வசிக்கிறான்.
தன்னுடைய தனித்துவ கற்றல் திறனால் மிக குறைந்த வயதிலேயே (11 வயது) அங்குள்ள புல்லர்டன் கல்லூரியில் சேர்ந்தான். சமூக அறிவியல், சமூக நடத்தை மற்றும் சுய மேம்பாடு, கலை மற்றும் மனித வெளிப்பாடு, வரலாறு ஆகிய பாடங்களை தேர்ந்தெடுத்து படித்தவன் இரண்டே ஆண்டுகளில் படிப்பை நிறைவு செய்துவிட்டான். 107 ஆண்டு பாரம்பரியமிக்க அந்த கல்லூரியில் ஒரே சமயத்தில் இந்த சாதனையை நிகழ்த்திய இளைய பட்டதாரி மாணவர் என்ற பெருமையையும் பெற்றுவிட்டான்.
''நான் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். உலகத்தைப் பற்றியும், நாம் படிக்கக்கூடிய பல்வேறு விஷயங்களைப் பற்றியும் அதிகம் தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறேன்'' என்கிறான், ஜாக் ரிக்கோ.
கல்லூரியில் நடந்த அனைத்து தேர்வுகளிலும் ஜாக் நல்ல மதிப்பெண்களை பெற்றிருக்கிறான். ''இவன் வயதுள்ள சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடுவது, படம் வரைவது, விளையாடுவது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது போன்ற விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இவனுக்கும் படிப்புக்கு மத்தியில் மற்ற சிறுவர்களை போல் சாதாரண விஷயங்களை செய்வதற்கு அதிக நேரம் கிடைத்தது'' என்று பெருமிதம் கொள்கிறார், ஜாக்கின் தாயார்.
நெவாடா பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை தொடர்வதற்கு ஜாக் திட்டமிட்டுள்ளான். அவனுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.