தலைமை பதவிக்காக அ.தி.மு.க. சந்தித்த சோதனை; ஒற்றை தலைமை குறித்து சட்ட விதிகள் என்ன சொல்கிறது...?
|எம்.ஜி.ஆர். தனது ஆதரவாளர்களுடன் அ.இ.அ.தி.மு.க. என்ற புதிய கட்சியை 1972-ல் தொடங்கினார்.
ன்னை
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை வேண்டும் என அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை எழுந்தது. இது ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரை கொந்தளிக்க வைத்துள்ளது. ஒற்றைத் தலைமை என்ற பேச்சு தேவையற்றது என அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பை பொறுத்தவரை ஒற்றைத் தலைமை கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் 5 வது நாளாக தனித்தனியே தீவிர ஆலோசனை நடத்தில் வருகின்றனர்.
அ.தி.மு.க. எப்படி உருவானது...?
கடந்த 55 ஆண்டுகளாக தமிழகத்தின் ஆட்சி பீடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இருபெரும் திராவிட கட்சிகள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். தேசிய கட்சியான காங்கிரசின் பிடியில் இருந்த தமிழகத்தை தன் பக்கம் திருப்பியவர் அண்ணா. அவர் உருவாக்கிய தி.மு.க.வில் அவர் இருந்த காலம் வரை எந்த பிளவும் இல்லை.
அண்ணாவின் மறைவுக்கு பிறகு தி.மு.க.வில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். தனது ஆதரவாளர்களுடன் அ.இ.அ.தி.மு.க. என்ற புதிய கட்சியை 1972-ல் தொடங்கினார். 1977-ல் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு
கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர் உயிரோடு இருந்த காலம் வரை எம்.ஜி.ஆர். என்ற ஒற்றை தலைமையே நீடித்தது. தலைமை பதவிக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஆனால் 1987-ல் எம்.ஜி.ஆர். மறைந்ததும் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்ற சர்ச்சை எழுந்தது.
அப்போது மூத்த நிர்வாகியான ஆர்.எம்.வீரப்பனின் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் கட்சியின் தலைவராகவும், முதல்-அமைச்சராகவும் ஆனார். அப்போது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா போர்க்கொடி தூக்கினார். ஜானகி அம்மாளை தலைவராக ஏற்க அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
இதனால் கட்சி பிளவுபட்டது. ஜானகி தலைமையிலான அணி அ.தி.மு.க. (ஜா) என்றும் ஜெயலலிதா தலைமையிலான அணி அ.தி.மு.க. (ஜெ) என்றும் பிளவுபட்டன.
அ.தி.மு.க. அரசு கலைப்பு
அப்போது அ.தி.மு.க.வில் 132 எம்.எல்.ஏ.க்கள் இருந்தார்கள். அவர்களில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தார்கள்.
மற்றவர்கள் ஜானகி தலைமையிலான அரசை ஆதரித்தார்கள். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனால் சட்டசபையில் அடிதடி, ரகளை நடந்தது. இறுதியில் வாக்கெடுப்பில் ஜானகி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சட்டசபையில் நடந்த கலவரத்தை காரணம் காட்டி அடுத்த 4 நாட்களிலேயே ஜானகி தலைமையிலான அ.தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரு அணியாக செயல்பட்டார்கள்.
இரட்டை இலை சின்னம் முடக்கம்
மறு ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்திலும், ஜானகி தலைமையிலான அணி இரட்டைப்புறா சின்னத்திலும் தேர்தலை சந்தித்தன. இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஜானகி, ஜெயலலிதா இருவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்கள். ஆனால் அ.தி.மு.க.வின் ஒற்றுமையின்மையால் அந்த கட்சியின் வாக்கு வங்கி சிதறியது. ஜெயலலிதா அணி 27 இடங்களை கைப்பற்றியது. ஜானகி அணி இரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இரட்டை இலை சின்னத்தை மீட்ட ஜெயலலிதா
அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று 13 ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதி 3-வது முறையாக முதல்வர் ஆனார். தலைமை பிரச்சினையால் உருவான பிளவால் கட்சி ஆட்சியை இழந்தது மட்டுமல்ல. எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்வியும் எழுந்தது. அதைத்தொடர்ந்து ஜானகி அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்றும் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் வெற்றி பெற வேண்டும் என்றும் விட்டுக்கொடுத்தார்.
இதனால் பிளவுபட்ட அ.தி.மு.க. ஒன்றானது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தையும் ஜெயலலிதா மீட்டார். அதன் பிறகு ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளரானார். அதன் பிறகு 1991, 2001, 2011, 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் வென்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். ஜெயலலிதா மறையும் வரை (5.12.2016) ஒற்றை தலைமை என்பது கேள்விக்குறி ஆகவில்லை.
ஜெயலலிதா மறைவு
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சரானார். அடுத்த சில நாட்களில் கட்சியின் பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அடுத்த 2 மாதத்தில் சட்டமன்ற குழு தலைவராகவும் சசிகலா அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார்.
கட்டாயத்தின் பேரிலேயே தான் ராஜினாமா செய்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதனால் அவரை பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட தொடங்கினார்கள்.
இதற்கிடையில் பலர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைய தொடங்கினார்கள். அவர்கள் அனைவரையும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கி அறிவித்தார். இந்த சூழ்நிலையில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அணி மாறாமல் இருக்க கூவத்தூரில் விடுதியில் தங்க வைத்தனர்.
ஆட்சி அமைக்க உரிமை கோரிய சசிகலா
தன்னிடம் போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க சசிகலா உரிமை கோரினார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்ததால் அவரது கனவு நிறைவேறாமல் போனது. அவர் சிறை செல்வதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழு தலைவராகவும், டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் அறிவித்து சென்றார்.
இதையடுத்து 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார். அடுத்த 6 மாதத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இரு அணிகளும் இணைந்தனர். சசிகலாவால் நீக்கப்பட்டவர்கள் கட்சிக்குள் சேர்க்கப்பட்டார்கள். கட்சியின் விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டார்கள்.
அதன் பிறகு சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் மனு கொடுத்தார்கள். அவர்களை பதவி நீக்கம் செய்யும்படி சட்டசபை பரிந்துரைத்தது. இதையடுத்து 18 உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு எதிராக டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. போட்டியிட்டது. ஆனால் அ.தி.மு.க. 12 தொகுதிகளில் வென்றது. இதன் மூலம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் முழு பதவி காலத்தையும் எடப்பாடி தலைமையிலான அரசு நிறைவு செய்தது.
இரட்டை தலைமை
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 66 இடங்களை கைப்பற்றியது. இந்த நிலையில் கட்சியில் இரட்டை தலைமை தான் பின்னடைவுக்கு காரணம். எனவே ஒற்றைத்தலைமை வரவேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கியபோது கட்சியின் பொன்விழா கொண்டாடும் தருணத்தில் எம்.ஜி.ஆர். மறைவை தொடர்ந்து ஏற்பட்டது போல் இப்போது ஜெயலலிதா மறைவாலும் கட்சி தலைமை பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருவருமே விட்டுக்கொடுக்காத நிலையில் இந்த சவாலை அ.தி.மு.க. எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.
அ.தி.மு.க. சட்ட விதிகள் என்ன சொல்கிறது
இந்த நிலையில் அதிமுக சட்ட விதிகள் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் கட்சியின் சட்ட விதி 20 திருத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளாகும். கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட முடியும்.
மறைந்த முதல் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் இடத்தை அ.தி.மு.க.வில் யாராலும் நிரப்ப முடியாது என்பதால், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக விதி எண் 43ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 11ன் படி பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் மூலம் வங்கி கணக்குகள், தேர்தலுக்கு வழங்கப்பட வேண்டிய பார்ம் ஏ, பார்ம் பி ஆகியவற்றில் கையெழுத்திடும் அதிகாரம் மேற்கண்ட இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியும்.
தொண்டர்களின் முடிவே அ.தி.மு.க.வின் எதிர்காலம்
அ.தி.மு.க. விதி எண் 20ல் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு போட்டியிடுபவர்கள் கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பயணித்திருக்க வேண்டும். இவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். விதி எண் 20ன் உட்பிரிவு 3ன் படி மேற்கண்ட இருவரும் இணைந்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதே விதி எண் கீழுள்ள பிரிவு 6ன் படி அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அவைத் தலைவர், பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நியமன உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டு இருவரும் இணைந்து தலைமைச் செயற்குழுவை அமைப்பர். இப்படி தேர்வாகும் தலைமை செயற்குழுவின் காலம் 5 ஆண்டுகளாகும்.
ஒருவேளை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் விடுவிக்கப்பட்டால், இந்த பொறுப்பிற்கு புதிய நபர் தேர்வாகும் வரை , முந்தைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கட்சியை வழி நடத்துவர்.
சட்ட விதிமுறைகள் ஒரு பக்கம் இருந்தாலும், பெரும்பாலான தொண்டர்களின் முடிவே அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.