பளபளப்பான சருமத்திற்கு...
|இயந்திரகதியில் இயங்கும் இன்றைய வாழ்க்கை சூழலில் சருமத்தை பொலிவுடன் பராமரிப்பது எளிதல்ல. விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை கொண்டுதான் சருமத்திற்கு பொலிவும், அழகும் சேர்க்க முடியும் என்றில்லை.
இயற்கை பொருட்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் பளபளக்கும் சருமத்தை பெறலாம். இந்த பொருட்கள் உடனடி பலன் தராது. சருமத்தில் மாற்றங்கள் நிகழ்வதற்கு கால அவகாசம் தேவைப்படும். நீண்ட காலம் எடுத்துக்கொண்டாலும் நிரந்தரமாக சரும பொலிவை மேம்படுத்திவிடும்.
தேன்:
எந்த வகையான சருமமாக இருந்தாலும் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கும், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதற்கும் தேன் சிறந்த பொருள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். சரும நலன் காக்கும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கும். சிறிதளவு தேனை சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவிவிடலாம். சருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு இறந்த சரும செல்களை அகற்றவும் தேன் உதவும்.
மஞ்சள்:
மஞ்சளில் உள்ளடங்கி இருக்கும் குர்குமின் இயற்கையான ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது சருமத்திற்கு பளபளப்பை தருவதோடு மட்டுமல்லாமல் வீக்கத்தைப் போக்கவும், சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்யவும் உதவும். இரண்டு டேபிள்ஸ்பூன் உளுந்து மாவுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், சில துளிகள் ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீர் சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அதனை முகம் மற்றும் கழுத்தில் பூசிவிட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
தேங்காய் எண்ணெய்:
நோய்த்தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதற்கும், தோல் மறுசீரமைப்புக்கும், விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுப்பதற்கும் துணைபுரியும் சிறந்த இயற்கை மூலப்பொருளாக தேங்காய் எண்ணெய் விளங்குகிறது. வறண்ட சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் செயல்படக்கூடியது. தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து சருமத்தில் இறந்த செல்களை நீக்க உதவும் ஸ்கிரப்பராக பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி சருமத்தில் வட்ட வடிவத்தில் மசாஜ் செய்துவிட்டு இரவில் அப்படியே தூங்கிவிடலாம். காலையில் எழுந்ததும் முகத்தை குளிந்த நீரில் கழுவி விடலாம்.
கற்றாழை:
எங்கும் எளிதாக வளரக்கூடிய கற்றாழை, பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இது, சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் பண்புகளையும் கொண்டது. புதிய சரும செல்களின் வளர்ச்சியை தூண்டக்கூடியது. சருமத்திற்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பளபளப்பை கொடுக்க வல்லது. மஞ்சள், தேன், பால் மற்றும் தண்ணீர் ஆகியவற்றுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யலாம். சுமார் 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் சருமம் பொலிவடையும்.
பேக்கிங் சோடா:
இதுவும் இறந்த சரும செல்களை அகற்ற உதவும். சருமத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் ஆன்டிபாக்டீரியாக்கள் இதில் உள்ளன. வெதுவெதுப்பான நீர், தேன், ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் பேக்கிங் சோடாவை கலந்து பசை போல் குழைத்து முகத்தில் மென்மையாக தடவி மசாஜ் செய்யலாம். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
பப்பாளி:
பப்பாளியில் காணப்படும் பப்பெய்ன் என்ற நொதி, சரும பொலிவை மீட்டெடுக்க உதவும். கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்யும். பப்பாளியில் இருக்கும் வைட்டமின் ஏ, பாப்பைன் போன்றவை சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதத்தை தக்கவைக்க துணைபுரியும். முதலில் பாலை கொண்டு முகத்தை நன்றாக கழுவவும். பின்பு அரை பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவிவிடலாம். சருமம் பொலிவுடன் மின்னுவதை காணலாம்.
வெள்ளரிக்காய்:
உணர்திறன் மற்றும் முகப்பரு பாதிப்புள்ள சருமம் உள்ளவர்களுக்கு வெள்ளரிக்காய் மிகவும் உதவியாக இருக்கும். வெள்ளரிக்காய் சாறை `மாஸ்க்'ஆக பயன்படுத்தலாம். வீக்கத்தைத் தவிர்ப்பதற்காக துண்டுகளை கண்களில் வைக்கலாம். உங்கள் சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க சருமத்தில் தேய்க்கலாம். வெள்ளரிக்காயை துருவி அதில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். முகத்தில் தடவி 5 நிமிடம் வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. பொதுவாகவே ஆலிவ் எண்ணெய் மாய்ஸ்சுரைசராக செயல்பட்டு சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தை அளிக்க உதவுகிறது. தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. ஆலிவ் எண்ணெய் சில துளிகள் எடுத்து சருமத்தில் வட்ட வடிவில் தேய்த்து மசாஜ் செய்யலாம். ஐந்து நிமிடங்கள் கழித்து துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். அவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவுடன் மிளிர தொடங்கும்.
சர்க்கரை:
இறந்த சரும செல்களை நீக்குவதற்கு சர்க்கரை சிறந்த பொருளாக கருதப்படுகிறது. இறந்த செல்களை நீக்குவதோடு சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் அசுத்தங்களை நீக்கி இழந்த பொலிவை மீட்டெடுக்கவும் உதவும். பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட கிரீமுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து முகத்தில் மென்மையாக தடவி மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
எலுமிச்சை:
எலுமிச்சையில் இயற்கையாகவே வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் படர்ந்துள்ள எண்ணெய் பசைத்தன்மையை குறைக்க உதவும். சருமத்தை மேலும் பளபளப்பாக்கும் தன்மையும் கொண்டது. எலுமிச்சையை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக்கூடாது. சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை கலந்து சருமத்தில் தடவ வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வரலாம்.