ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் உணவுப் பொருட்கள்
|ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க சரியான உணவு பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் பின்பற்றுவது முக்கியம்.
உடலில் ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க வேண்டியது அவசியமானது. இல்லாவிட்டால் சிறுநீரகங்கள், இதயம் உள்ளிட்ட முக்கியமான உறுப்புகளுக்கு ஆபத்தானது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க சரியான உணவு பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் பின்பற்றுவது முக்கியம். நீரிழிவு நோயைத் தடுக்க விரும்புபவர்கள், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பும் நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் குறித்து பார்க்கலாம்.
ஆப்பிள் சிடேர் வினிகர்:
பொதுவாக இது உடல் எடையை குறைப்பதற்கு உதவக்கூடியது. ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கும் துணைபுரியும். குறிப்பாக இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும். ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
ஆப்பிள் சிடேர் வினிகரை அப்படியே பருகக்கூடாது. இது அசிட்டிக் அமிலம் மற்றும் அதிக அமிலத்தன்மை கொண்டது. எனவே அதை சிறிதளவு தண்ணீரில் கலந்து உபயோகப்படுத்த வேண்டும்.
வெண்டைக்காய்:
இது நீரிழிவு நோயாளிகளுக்கு நலம் சேர்க்கக்கூடியது. இதில் பிளாவனாய்டுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியவை. எனவே உணவில் வெண்டைக்காயை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
புரோக்கோலி:
புரோக்கோலியில் சல்போராபேன் எனப்படும் சேர்மம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது நீரிழிவு எதிர்ப்பு விளைவை குறிப்பிடத்தக்க அளவில் கொண்டிருப்பதால் ரத்த சர்க்கரையை குறைக்கும் திறனுடையது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புரோக்கோலி இன்சுலின் உணர்திறனையும் அதிகரிக்கக்கூடியது. ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தக்கூடியது.
சியா - ஆளி விதைகள்:
நீரிழிவு நோயாளிகளுக்கு, சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் நன்மை சேர்க்கும். சியா விதைகள் நார்ச்சத்து நிரம்பியது. குறைந்த கார்போஹைட்ரேட்டுகளை கொண்டது.
உடல் எடையை நிர்வகிப்பதற்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் சியா விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆளி விதைகளும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவி செய்யும்.
முட்டை:
முட்டைகள் சாப்பிடுவதும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். ஏனெனில் முட்டைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. அவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வழிவகுக்கும். மேலும் முட்டைகள் இன்சுலின் செயல்பாட்டையும் மேம்படுத்தக்கூடியவை. மஞ்சள் கருவில் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதனால் முட்டையை உணவில் சேர்க்க மறக்காதீர்கள்.
பீன்ஸ்-பயறு:
இவை ஊட்டச்சத்து நிறைந்தவை மட்டுமல்ல, கரையக்கூடிய நார்ச்சத்துக்களையும் கொண்டவை. ஸ்டார்ச்சும் நிரம்பியவை. செரிமான செயல்முறையை மெதுவாக்கும். மேலும் ரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதையும் தடுக்கும். பீன்ஸ் மற்றும் பயறு வகைகளை வழக்கமாக உட்கொள்வது நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கும் என்று ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
நட்ஸ் வகைகள்:
பாதாம், வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகள், அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் (நட்ஸ் பட்டர்) ஆகியவை ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதிலும், டைப் - 2 நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளன.
சியா விதைகளைப் போலவே, நட்ஸ் வகைகளிலும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. எளிதில் ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகளை கொண்டுள்ளது. அதேவேளையில் உடல் எடையை குறைக்கும் செயல்முறையில் ஈடுபட்டிருப்பவர்கள் இவற்றை குறைவான அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.