< Back
சிறப்புக் கட்டுரைகள்
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்
சிறப்புக் கட்டுரைகள்

இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்

தினத்தந்தி
|
19 Aug 2022 5:27 PM IST

உடல் மற்றும் ரத்தத்தின் சீரான செயலிற்கு இரும்புச் சத்து மிக மிக முக்கியம். உடலில் இரும்புச் சத்து குறைபாட்டால் பலவித பிரச்சினைகள் ஏற்படும். முக்கியமாக உடல் அசதி, முடி கொட்டுதல் போன்ற குறைபாடுகள் வரலாம்.

இவைகளில் இருந்து தப்பிக்க, இரும்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். அந்தவகையில், எந்தெந்த உணவுகளில், இரும்புச் சத்து இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

1. பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான இரும்புச்சத்தில் 50 சதவீதம் நிறைந்துள்ளது. மேலும் இதில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

2. மாதுளை

மாதுளை இரும்புச் சத்து நிறைந்த, சிறந்த பழமாகும். 100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் புரதச்சத்து, மெக்னீசியம், வைட்டமின், பொட்டாசியம், வைட்டமின் பி-6, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

3. அத்திப்பழம்

உடலுக்கு உறுதி அளிக்கும் பழங்களில் அத்திப்பழம் மிக மிக சிறந்த பழம் ஆகும். தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தசோகை, மலச்சிக்கல் மற்றும் அசதி போன்ற பிரச்சினை இருக்கவே இருக்காது. அத்திப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.

4. கொய்யாப்பழம்

பழங்களில் சிறந்த பழம் கொய்யாப்பழம். நமது ஊர் பகுதிகளில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது கொய்யாப்பழம். இதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, புரோட்டீன், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் காயாக இருக்கும் கொய்யாவிற்கு, ரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தியும் உண்டு.

5. உலர்திராட்சை

உலர்திராட்சை மற்றும் இதர பழ வகைகளில் அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்திராட்சை உண்டு வந்தால் தேவையான அளவு இரும்புச் சத்து கிடைப்பதோடு உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க உதவும். எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்திராட்சையினை உட்கொண்டு வாருங்கள்.

6. ஆப்ரிகாட்

ஆப்ரிகாட் பழவகைகளில் அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் அப்ரிகாட் பழத்தில் கிட்டத்தட்ட 2.5 மில்லிகிராம் அளவுக்கு இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி-16, கால்சியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

7. மாம்பழம்

முக்கனிகளில் முதன்மை வாய்ந்தது மாம்பழம். இதில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை உண்டு வந்தால் ரத்தசோகை, கண் பார்வை கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் சரும அழகினை மேம்படுத்த உதவும்.

8. தர்பூசணி பழம்

தர்பூசணி பழத்தில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு தர்பூசணி பழத்தில் 12 மில்லிகிராம் அளவிற்கு இரும்புச் சத்து இருக் கின்றது. மேலும் இதில் ஏராளமான வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் இளமையுடன் காட்சி அளிக்கலாம்.

இரும்புச் சத்தின் அவசியம்

எலும்புகள் வலுவாக இருக்க, இரும்புச் சத்து அவசியம். உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்த சிவப்பணுக்களை கொண்டு செல்வதற்கும் உதவுகிறது. மேலும் ஆற்றலை உற்பத்தி செய்யவும், செல்களின் சுவாசத்தை எளிதாக்கவும் துணைபுரிகிறது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் இரும்புச் சத்து அதிகம் தேவைப்படுகிறது.

மேலும் செய்திகள்