< Back
சிறப்புக் கட்டுரைகள்
குழந்தைகளுக்கான உணவும், ஊட்டச்சத்தும்..!
சிறப்புக் கட்டுரைகள்

குழந்தைகளுக்கான உணவும், ஊட்டச்சத்தும்..!

தினத்தந்தி
|
24 Jun 2022 7:21 PM IST

2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். குழந்தைகளா...! நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை சோதித்துக் கொள்ளுங்கள்.

பருப்பு உணவுகள்

இரண்டு வயது குழந்தைக்கு பருப்பு சம்பந்தப்பட்ட உணவை தினமும் சேர்க்கும்போது, உடலில் புரதத்தின் அளவு சரியாக தக்க வைக்கப்படும். பருப்பு வகைகளில் பல வகைகள் இருக்கிறது. இருப்பினும் பாசி பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.

ஆரோக்கியமான எண்ணெய்கள்

ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள், சோயா பீன்ஸ், பிற நட்ஸ் வகைகள் மற்றும் அவற்றின் எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றை இரண்டு வயது குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கலாம்.

பால் பொருட்கள்

பால் பொருட்களான பால், தயிர், பன்னீர் அனைத்தும் கால்சியம் நிறைந்தவை. கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. உங்கள் குழந்தை லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால், கால்சியம் உட்கொள்ளும் இடைவெளியை ஈடுசெய்ய அவர் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கேரட்

கேரட் 'வைட்டமின்-ஏ' நிறைந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கீரை, காலே மற்றும் பிற காய்கறிகளிலும் வைட்டமின்-ஏ அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.

கோழி

கோழி மற்றும் பிற அசைவ உணவுகளில் எளிதில் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்து உள்ளது. இரும்பு சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு சக்தி அளிக்க உதவுகிறது. ரத்த சோகையைத் தடுக்கிறது.

மீன்

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டவைகளுள் (EFA) மீன் ஒரு நல்ல மூலமாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. இருதய அமைப்பை பலப்படுத்துகின்றன.

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவை வைட்டமின்-சி உள்ளடக்கத்திற்கு புகழ் பெற்றவை. வைட்டமின்-சி குறைபாடு ஸ்கர்வி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். வைட்டமின்-சி ஈறுகள் மற்றும் ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், காயங்களிலிருந்து மீளவும் உதவுகிறது. மாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி, கீரை போன்றவற்றிலும் வைட்டமின்-சி உள்ளது.

வாழைப்பழங்கள்

மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான கூறுகள் எனலாம். தசை வலிமைக்கு தேவையான சத்துக்கள் வாழைப்பழங்களில் காணப்படுகின்றன. இந்த நன்மை பயக்கும் பழத்தை தானியங்கள் மற்றும் பிற உணவுகளில் இணைத்து சாப்பிடலாம்.

வைட்டமின்-டி

இது ஒரு உணவு அல்ல என்றாலும், இது உடல் உறிஞ்சும் ஒன்று. எனவே உடல் வளர்ச்சியில் வைட்டமின்-டி வகிக்கும் ஒருங்கிணைந்த பங்கைக் கருத்தில் கொண்டு இந்த பட்டியலில் சேர்த்திருக்கிறோம். சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

மேலும் செய்திகள்