< Back
சிறப்புக் கட்டுரைகள்
உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்தது!
சிறப்புக் கட்டுரைகள்

உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்தது!

தினத்தந்தி
|
30 Sept 2022 1:15 PM IST

அலைஸ் என பெயரிடப்பட்டுள்ள உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்தது.

வாஷிங்டன்,

உலகின் முதல் மின் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்தது. அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் மின்சாதனங்களை போல மின்வாகனங்கள் பெருகிவிட்டன.

மின்சார ஸ்கூட்டர், பைக், கார், ரெயில் ஆகிய பல வாகனங்களை கடந்து வந்துள்ளோம். இவற்றை போல சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில், விமானத்தை தயாரிக்க பொறியாளர்கள் ஆராய்ச்சியில் இறங்கினர்.அதன் பயனாக, டர்பைன் ரக என்ஜின் மூலம் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளனர்.

காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வகை பிஸ்டன் ரக என்ஜின்களுக்கு மாற்றாக மின்சக்தியில் இயங்கும் என்ஜின்கள் விமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விமானம், வானில் 2 மணி நேரம் பயணிக்கும் ஆற்றல் வாய்ந்தது. ஆகவே நீண்ட தூர பயணத்திற்கு உகந்தது அல்ல. அதிகபட்சமாக 9 பேர் பயணிக்கலாம். இந்த விமானத்தால் அதிகபட்சமாக 2,500 பவுண்டுகள் (சுமார் 1,100 கிலோ) எடையை சுமந்து கொண்டு பறக்க முடியும்.

அலைஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த மின் விமானம், இஸ்ரேலை தளமாகக் கொண்ட எவியேஷன் விமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த பயணிகள் விமானம் அதிகபட்சமாக மணிக்கு 480 கிமீ வேகத்தை எட்டும். இது 250 கடல் மைல்கள் (400 கிமீ) தூரம் வரை செல்லும்.

வாஷிங்டனில் உள்ள கிராண்ட் கவுண்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்ட இந்த பயணிகள் விமானம் வானில் 3,500 அடி உயரத்தில் எட்டு நிமிடங்கள் பறந்தது.

இதன்மூலம், வணிக பயன்பாட்டுக்கு விமானத்தை தயாரிப்பதற்காக முக்கியமான தரவுகள் கிடைத்துள்ளன. மேலும், விமானத்தின் அமைப்புக்கு குறைவான பராமரிப்பு மட்டுமே தேவைப்படுகிறது என்று எவியேஷன் விமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிரிகோரி டேவிஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்