< Back
சிறப்புக் கட்டுரைகள்
சோர்வையும், சோம்பேறித்தனத்தையும் உணர்கிறீர்களா?
சிறப்புக் கட்டுரைகள்

சோர்வையும், சோம்பேறித்தனத்தையும் உணர்கிறீர்களா?

தினத்தந்தி
|
22 May 2022 5:55 PM IST

இயந்திரமயமாக்கலும், நவீன தொழில் நுட்பங்களும் கடினமான உடல் உழைப்பு சார்ந்த வேலைகளை செய்பவர்களின் எண்ணிக்கையை குறைய வைத்துவிட்டன. ஒரே இடத்தில் உட்கார்ந்த நிலை யிலேயே விரும்பிய வேலைகளையும், பிடித்தமான விஷயங்களையும் செய்யும் அளவிற்கு வாழ்க்கை சூழல் மாறிக்கொண்டிருக்கிறது.

போதுமான அளவுக்கு உடல் இயக்கம் இல்லாமல் உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது கடுமையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். சோம்பேறித்தனம் குடிகொண்டு உடற்பயிற்சி செய்வதற்கு விருப்பமில்லாமல் போய்விடும். எப்போதும் ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். அங்கும் இங்கும் நகர்ந்து உடல் அசைவுடன் செயல்பட்டால்தான் சோர்வையும், சோம்பலையும் விரட்டியடிக்க முடியும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

இயந்திரம் இயங்காவிட்டால் துரு பிடித்துப்போய்விடும். அதுபோல்தான் மனித உடலும் இயக்கமின்றி இருந்தால் கடும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜிம்மில் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வது அல்லது ஓட்டப்பந்தய பயிற்சி பெறுவதுதான் உடல் இயக்கம் சார்ந்தது என்று குழப்பிக்கொள்ளக் கூடாது. அதற்கு அதிக முயற்சியும், நேரமும் தேவையில்லை. சின்ன சின்ன செயல்கள் மூலமே உடல் அசைவை மேற்கொண்டு உடல் நலனை பாதுகாத்துக்கொள்ளலாம்.

நடைப்பயிற்சியை கட்டாய உடற்பயிற்சியாக மேற்கொள்ள வேண்டியதில்லை. சாதாரணமாக வெளியே நடந்து சென்று வந்தாலே போதுமானது. முதல் நாளிலேயே 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும் என்றில்லை. 4 ஆயிரம் அடிகள் நடக்கலாம் என்ற இலக்குடன் நடை பயணத்தை தொடங்கலாம். பின்பு படிப்படியாக எண்ணிக்கையை அதிகரிக்கலாம். நேரம் குறைவாக இருக்கும் பட்சத்தில், தொலைபேசியில் பேசியபடியே நடக்கலாம்.

பெரும்பாலானோர் பள்ளி நாட்கள் வரை சுறுசுறுப்பாக இருப்பார்கள். சக மாணவர்களுடன் சேர்ந்து விளையாடும் வழக்கத்தை பின்பற்றுவது, வெளி இடங் களுக்கு செல்வதுதான் அதற்கு காரணம். படிப்பை முடித்து வேலையில் இணைந்த பிறகும் சுறுசுறுப்பை தக்கவைத்துக்கொள்ள உடல் சார்ந்த இயக்கங்களை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் நடன பயிற்சிகள் பிரபலமாகிவிட்டன. நடனம் ஆடுவதை பலரும் வேடிக்கையான பொழுதுபோக்காக கருதுகிறார்கள். அது இதய ஆரோக்கியம் மற்றும் இதயத்தின் இயக்கத்தை மேம்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இனிமையான இசையை ஒலிக்கவிட்டு நடனமாடுவதன் மூலம் சோம்பலை விரட்டி சுறுசுறுப்பை தக்கவைத்துக்கொள்ளலாம்.

நடைப்பயிற்சி மீது நாட்டம் இல்லாதவர்கள் நாயை உடன் அழைத்து செல்லலாம். அப்படி நடப்பது மனநலனுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மேலும் நாயுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைத்து மன நிலையை மேம்படுத்தும் என்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதன் மூலம் 200 முதல் 300 கலோரிகளை எரிக்க முடியும். தினமும் 10 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வது 30 நிமிடங்கள் ஜாக்கிங் செய்வதற்கு ஈடானதாகும்.

வீட்டிலும், பணியிடத்திலும் உங்கள் இடத்தை சுத்தம் செய்து ஒழுங்கமைப்பது கூட மிதமான உடற்பயிற்சியாக அமையும்.

மேலும் செய்திகள்