< Back
சிறப்புக் கட்டுரைகள்
இன்று சர்வதேச தந்தையர் தினம்..!  தந்தையர் தின வரலாறு தெரியுமா?
சிறப்புக் கட்டுரைகள்

இன்று சர்வதேச தந்தையர் தினம்..! தந்தையர் தின வரலாறு தெரியுமா?

தினத்தந்தி
|
19 Jun 2022 7:32 AM GMT

தந்தையர் தினம் உருவாகக் காரணமாக இருந்தவர் ஒரு பெண்மணி என்றால் நம்ப முடிகிறதா.

சென்னை,

உலகெங்கிலும் உள்ள தந்தையர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

தந்தையின் அன்பு, உழைப்பு, அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து பாராட்டி அவர்களுக்கு அன்பு செலுத்தவே தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையர் தினத்தை நம்மில் பலரும் கொண்டாடினாலும், இந்த தினத்திற்கான பாரம்பரியம் எப்படி தொடங்கியது என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்.

தந்தையர் தினம் உருவாகக் காரணமாக இருந்தவர் ஒரு பெண்மணி என்றால் நம்ப முடிகிறதா. மனைவியை இழந்த தன்னுடைய தந்தையின் அரவணைப்பை போற்றும் வகையில் அந்த பெண், தந்தையர் தின கொண்டாட்டத்தை முன்மொழிந்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஸ்போகேனில் வசித்து வந்த அமெரிக்க உள்நாட்டுப் போர் வீரர் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்டின் மகள் சோனோரா என்னும் பெண்மணி தான் தந்தையர் தினம் உருவாக காரணமாக இருந்தார்.

சோனோராவின் தாய் தனது ஆறாவது குழந்தையை பெற்றெடுக்கும் போது இறந்தார், அதன் பிறகு சோனோராவை அவரது மூத்த சகோதரர்களுடன் சேர்த்து அவரது தந்தை பிரியத்துடன் வளர்த்தார்.

வளர்ந்த பின் ஒருநாள், அன்னையர் தினத்தைப் பற்றிய ஒரு பிரசங்கத்தை அவர் தேவாலயத்தில் கேட்டுக் கொண்டிருந்தபோது, தந்தையின் பாத்திரத்திற்கும் அங்கீகாரம் தேவை என்று உணர்ந்தார். தாய் இல்லாத ஆறு குழந்தைகளை வளர்த்தெடுத்த தன் தந்தைக்கு அன்பு செலுத்த வேண்டும் என்ற காரணத்தால், தந்தையர் தின கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

அவர் அரசாங்கத்திடம் தனது தந்தை ஸ்மார்ட்டின் பிறந்தநாளான ஜூன் 5ஆம் தேதியை தந்தையர் தினமாக உலகெங்கிலும் உள்ள அப்பாக்களை மதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைக்கு முதலில் ஒப்புதல் கிடைக்கவில்லை, இருப்பினும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாகக் கொண்டாட முடிவு செய்தனர்.

அதை தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் லிண்டன் பி ஜான்சன் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் தனக்கு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் குடும்பத்தின் சந்தோசத்துக்காக சுகமாக சுமந்து கொண்டிருப்பார் தந்தை. இன்று மருத்துவம், என்ஜினீயரிங் உள்பட உயர் படிப்புகள் பல படித்துக் கொண்டிருப்பவர்களில் பலர் தனது தந்தை கூலி வேலை செய்து, வயல் காட்டில் விவசாயம் செய்து, கட்டிட வேலை செய்து, சுமை தூக்கி, ஆட்டோ ஓட்டித்தான் கஷ்டப்பட்டு படிக்க வைப்பதாக கூறுவதை கேட்க முடிகிறது.

'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பது சான்றோர் வாக்கு. அப்படிப்பட்ட அப்பாக்களுக்கு, நாம் இன்றைய தினத்தை அவர்களுக்காக அர்ப்பணிப்போம். அனைத்து அப்பாக்களுக்கும் 'இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!'.

Related Tags :
மேலும் செய்திகள்