< Back
சிறப்புக் கட்டுரைகள்
பணிகளை விரைவுபடுத்தி கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும்; அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர்
சிறப்புக் கட்டுரைகள்

பணிகளை விரைவுபடுத்தி கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும்; அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
3 Oct 2022 6:15 PM IST

ரூ.393¾ கோடியில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையப்பணிகளை விரைவுபடுத்தி விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

சென்னை மாநகரில் தினந்தோறும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வெளியூர் பஸ்கள் வந்து செல்வதற்காக கோயம்பேடு பகுதியில் மிகப்பெரிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆம்னி பஸ்களும் இங்கிருந்துதான் புறப்பட்டு செல்கிறது. இந்த பஸ் நிலையம் அருகே கோயம்பேடு மொத்த விற்பனை வணிக வளாகமும் அமைந்துள்ளதால் கோயம்பேடு பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வண்டலூரில் அமைக்க எதிர்ப்பு

அதிலும் குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகளின் வசதிக்காக அதிக அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்போது பஸ் நிலையத்திற்கு உள்ளும், கோயம்பேடு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு வண்டலூர்-வாலாஜாபாத் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி வண்டலூரில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதை தொடர்ந்து சி.எம்.டி.ஏ. (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்) அதிகாரிகள் வண்டலூர்-வாலாஜாபாத் ஒட்டியுள்ள பகுதியில் புறநகர் பஸ் நிலையத்தை அமைக்க முடிவு செய்து அப்பகுதியில் விவசாய நிலத்தை கையகப்படுத்துவற்கான பணியில் இறங்கினர்.

அப்பகுதியில் புறநகர் பஸ் நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் போராட்டங்களில் ஈடுபட்டதால், வண்டலூரில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் தாமதமானது.

கிளாம்பாக்கத்தில் அமைப்பு

இதனையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் புறநகர் பஸ் நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை தேர்வு செய்வதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இதனையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டிய கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் நிலத்தை பஸ் நிலையத்துக்காக தேர்வு செய்தனர். இதனையடுத்து வண்டலூரில் அமைக்கப்பட இருந்த புறநகர் பஸ் நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.

95 சதவீத பணிகள் நிறைவு

திருச்சி, விருதுநகர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது பயணங்களை சிரமம் இன்றி இனிதாக மேற்கொள்வதற்காகவும் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதனைத்தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் எழில்மிகு தோற்றத்தில் மிக பிரமாண்டமான முறையில் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் பஸ் நிலைய கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த ஆண்டே மாநகர பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மாநகர பஸ் நிலையத்தில் மட்டும் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் அமைக்கப்படாமல் உள்ளது.

பொங்கல் முதல்...

அதில், வெளியூர் பஸ்கள் நிற்கும் நடைமேடைகள் உள்ளிட்ட இதர கட்டுமான பணிகள் அனைத்தும் 80 சதவீதம் நடந்து முடிந்துள்ளன. முடிந்த கட்டிடங்களுக்கு தற்போது வர்ணம் பூசும் பணிகள், உயர்கோபுர மின்விளக்குகள், கட்டிடங்களில் தரை அமைக்கும் சிறு சிறு பணிகள் மட்டுமே நடைபெற வேண்டி இருக்கிறது.

மறுபுறம் பஸ் நிலையத்தின் முகப்பு கட்டுமான பணி, பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் உள்ளே சென்று வருவதற்காக பாதைகள் அமைக்கும் பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.

எனவே இன்னும் 2 மாதங்களில் அனைத்து பணிகளும் முழுமையாக முடிந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பணிகளை விரைவுபடுத்தி பஸ் நிலையத்தை திறந்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்