< Back
சிறப்புக் கட்டுரைகள்
சைபர் கிரைம் எச்சரிக்கைத் தொடர்: தொலைநிலை அணுகல் மோசடிகள் - முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி
சிறப்புக் கட்டுரைகள்

'சைபர் கிரைம்' எச்சரிக்கைத் தொடர்: தொலைநிலை அணுகல் மோசடிகள் - முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி

தினத்தந்தி
|
31 July 2022 8:07 AM IST

சைபர் கிரிமினல்கள், தொலைநிலை அணுகல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் பணத்தை கொள்ளையடிப்பது குறித்து எச்சரிக்க விரும்புகிறேன்.

சென்னை:

இணையத்தைப் பயன்படுத்துபவர்களை நம்ப வைத்து பணம்பறித்தல், ஆசைகாட்டி ஏமாற்றுதல் போன்ற குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி கூறுகிறார்.

தொலைநிலை அணுகல் தொழில்நுட்பம்

'எனி டெஸ்க்' (AnyDesk) அல்லது 'டீம் வீவர் க்யூக் சப்போர்ட்' (TeamViewer QuickSupport) போன்ற செயலிகளை அப்பாவி மக்களின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யவைக்கும் 'சைபர்' கிரிமினல்கள், தொலைநிலை அணுகல் தொழில்நுட்பத்தை (Remote Desktop Applications) பயன்படுத்தி அவர்களின் பணத்தை கொள்ளையடிப்பது குறித்து எச்சரிக்க விரும்புகிறேன்.

நமது மின்னணு கருவிகளில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை எங்கோ அமர்ந்திருக்கும் நிபுணர்கள், நேரடியாக கையாண்டு தீர்த்துவைக்க உதவுவதுதான் 'ரிமோட் டெஸ்க்டாப் அப்ளிகேஷன்ஸ்' எனப்படும் தொலைநிலை அணுகல் செயலிகளின் அடிப்படை நோக்கம். வானத்தில் பறந்துக்கொண்டிருக்கும் பைலட்டுகளுக்கு ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களைக் கூட இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பூமியில் அமர்ந்திருக்கும் நிபுணர்கள் தீர்த்துவைக்க முடிகிறது.

இப்படி அதிசயமான நன்மைகளை தருவதால் தொலைநிலை அணுகல் செயலிகளை பதிவிறக்கம் செய்வதை பலரும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் 'சைபர்' கிரிமினல்களுக்கு, இந்த தொலைநிலை அணுகல் செயலிகள், அடுத்தவர் பணத்தை கொள்ளையடிப்பதற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

விண்ணப்பம் பதிவிறக்கம்

மராட்டிய மாநிலம் புனே நகரில் ஜோசப் என்பவரை தொடர்புகொண்டு பேசியவர், அவரது மின் கட்டணம் பாக்கி இருப்பதாகவும், உடனே கட்டாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் எச்சரித்தார். 'எனி டெஸ்க்' (Anydesk) மற்றும் 'மஹாவிதாரன்' (MahaVitaran) அப்ளிகேஷன்களை செல்போனில் டவுன்லோடு செய்யுமாறு மோசடி நபர், ஜோசப்பிடம் கூறியுள்ளார்.

ஜோசப், இந்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்த பிறகு, 'பில்' கட்டுவதற்கு ஒரு சிறிய தொகையை 'ஆன்லைனில்' செலுத்துமாறு மோசடி நபர் கூறினார். அந்த சிறிய தொகையை ஜோசப் 'ஆன்லைனில்' செலுத்திய சிறிது நேரத்தில், ஜோசப்பின் ஒப்புதல் இல்லாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் திருடப்பட்டுவிட்டது.

சிம் கார்டு முடக்கம்

சென்னையில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியை ஆனந்தியிடம், ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி செல்போனில் பேசினார். ஆனந்தியின் 'சிம்' கார்டு முடக்கப்படலாம் என்றும், அதை தவிர்க்க அவர் "செயல்முறை கட்டணமாக" ரூ.10 செலுத்தவேண்டும் என்றும் அந்த நபர் கூறினார். ஒரு இணைப்பை 'வாட்சப்'பில் அனுப்பியிருப்பதாகவும், அந்த இணைப்பை திறந்து, எனி டெஸ்க்-ஐ பதிவிறக்கம் செய்து, பின்னர் அவரது 'டெபிட்' கார்டு மூலம் ரூ.10 செலுத்துமாறு கூறினார்.

அதை நம்பி, ஆனந்தி மென்பொருளை 'டவுன்லோட்' செய்தபிறகு, தனது 'டெபிட்' கார்டு மூலம் ரூ.10 செலுத்தினார். அடுத்த சில மணி நேரங்களில் ஆனந்திக்கு தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் திருடப்பட்டுவிட்டது.

அதிக வருமானம் ஈட்டலாம்..

இணையதளம் மூலமாக அதிக வருமானம் ஈட்டலாம் என்று விளம்பரம் செய்த ஒரு நிறுவனத்தை தொடர்புகொண்டார் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் வேலாயுதம். அதற்கான மென்பொருட்களை நிறுவுவதற்கு தொலைநிலை அணுகல் செயலி 'என் டெஸ்க்'- ஐ பதிவிறக்கம் செய்யுமாறும் ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்துமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

வேலாயுதம் அவ்வாறு பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்திய சில மணி நேரங்களில், பல்வேறு 'ஆன்லைன்' பரிவர்த்தனைகள் மூலம் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.12.5 லட்சம் திருடப்பட்டுவிட்டது.

நிறுவனங்களின் எச்சரிக்கை

தொலைநிலை அணுகல் தொழில்நுட்பங்களை வழங்கும் 'டீம் வீவர்' (TeamViewer) போன்ற நிறுவனங்கள், இந்த தொழில்நுட்பங்களை 'சைபர்' கிரிமினல்கள் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே பல்வேறு எச்சரிக்கைகளை கொடுக்கின்றனர்.

'உங்களுக்கு சம்பந்த மில்லாத, முன்பின் தெரியாத நபர்களுக்கு உங்களது ரகசிய தகவல்களை ஒருபோதும் கொடுக்கவேண்டாம்' என்ற எச்சரிக்கை செய்தியை அவர்கள் தொடக்கத்திலேயே கொடுக்கிறார்கள். இருப்பினும் 'சைபர்' கிரிமினல்கள் அப்பாவிகளின் அறியாமையை பயன்படுத்தி, மோசடிகளை தொடர்கிறார்கள்.

குவியும் ஆன்லைன் மோசடி புகார்கள்

மோசடி செய்பவர்கள் அப்பாவிகளின் தொலைபேசிகளை அணுகி, தொலைநிலை அணுகல் செயலிகளை பதிவிறக்கம் செய்யவைப்பதும், சிறிய 'ஆன்லைன்' நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வைப்பதும், அதன்மூலமாக அப்பாவிகளின் ரகசிய வங்கி கணக்கு தகவல்களை அறிந்து, அதன் மூலம் அவர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

இதுபோன்ற மோசடிகளில் பணத்தை பறிகொடுத்தவர்கள் காவல்துறையில் கொடுக்கும் புகார்கள் தினந்தோறும் குவிந்து வருகின்றன. இந்தவகை மோசடி குறித்து, மேற்கண்ட சம்பவங்களுடன் நான் விவரித்ததன் நோக்கம், பொதுமக்கள் இனியாவது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே.

(தொடரில் விவரிக்கப்படும் சம்பவங்களில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

மேலும் செய்திகள்