< Back
சிறப்புக் கட்டுரைகள்
170 குழந்தைகளை தத்தெடுத்த கல்வியாளர்
சிறப்புக் கட்டுரைகள்

170 குழந்தைகளை தத்தெடுத்த கல்வியாளர்

தினத்தந்தி
|
19 Nov 2022 2:42 PM IST

ஜெர்மனியில் ரசாயன விஞ்ஞானியாகி, இந்தியாவில் தனது கிராமத்தை பெருமைப்படுத்தியவர் சேஷாதேவ் கிசான்.

ஜெர்மனியில் ரசாயன விஞ்ஞானியாகி, இந்தியாவில் தனது கிராமத்தை பெருமைப்படுத்தியவர் சேஷாதேவ் கிசான். ஒடிசா இளைஞரான இவர் இன்றைக்கு பல இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பவராக மாறியிருக்கிறார்.

கிராமத்தில் ஆடு மாடுகளை மேய்ப்பதில் தொடங்கிய அவரது வாழ்க்கைப் பயணம், ஜெர்மனியின் கோட்டிங்கனில் உள்ள புகழ்பெற்ற ஜார்ஜ்-ஆகஸ்ட் பல்கலைக்கழகத்தில் பதவி பெற்றது வரை ஊக்கமளிப்பதாக அமைந்திருக்கிறது. ஆனால், அவரது கதையில் இன்னும் ஊக்கமளிக்கும் விஷயம் என்னவென்றால், ஜெர்மனியில் குடியேறும் வாய்ப்பிருந்தும், வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் சம்பாதித்தாலும், அந்நாட்டிலேயே சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், அவரது நினைவுகள் இந்தியாவில் உள்ள தமது சொந்த கிராமத்தையே வலம் வந்து கொண்டிருந்தது. சேஷா இப்போது தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பியுள்ளார்.

ஒரு காலத்தில் சோறு கிடைக்காமல் கஷ்டப்பட்ட இவர், தற்போது தான் பிறந்த ஊரான ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டை, தான் தத்தெடுத்திருக்கும் குழந்தைகளுக்கு பரிசளிக்க இருக்கிறார். தமது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறார் சேஷா…

"சம்பல்பூரின் நதிதேயுலா கிராமத்தில் பிறந்தேன். ஒரு வயதிலேயே தாயை இழந்தேன். 18-வது வயதில் தந்தையை இழந்தேன். பெற்றோரை இழந்த பிறகும் எனது கனவு பெரிதாக இருந்தது. அதனால் படிப்பைக் கைவிடவில்லை. கால்நடைகளை மேய்ப்பதைத் தவிர, விடுமுறையில் கூலி வேலை செய்யத் தொடங்கினேன்.

என் வாழ்வாதாரத்தையும் கவனித்துக்கொண்டு கல்விச் செலவுகளையும் பார்த்துக் கொண்டேன். ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வானேன்.

பின்னர், ஜார்ஜ்-ஆகஸ்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆப் சயின்ஸில் பேராசிரியர் ஸ்வென் ஷ்னீடரின் கீழ் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினேன். 2018-ம் ஆண்டு ஜெர்மனிக்குச் செல்வதற்கு முன் முதல்- மந்திரி நவீன் பட்நாயக்கால் பாராட்டப்பட்டேன். எனக்கு இப்போது எல்லா வசதிகளும் இருந்தாலும், அவற்றை அனுபவிக்க பக்கத்தில் பெற்றோர் இல்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

ஜெர்மனியில் இருந்து திரும்பியதைத் தொடர்ந்து, நான் 170 குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளேன். என்னைத் தவிர, அவர்களுக்குக் கற்பிக்க ஆசிரியர்களையும் நியமித்துள்ளேன். நான் அவர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். அவர்கள் படிக்க இப்போது கட்டிவரும் புதிய வீட்டையும் நன்கொடையாக அளித்துள்ளேன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனிக்குச் செல்வதற்கு முன்பு, மீண்டும் திரும்பிவந்து நான் பிறந்த ஒடிசாவுக்கு முக்கியமான ஒன்றைச் செய்ய விரும்புகிறேன் என்றும் பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தேன்.

சொன்னது போல் நான் என் வார்த்தைகளைக் காப்பாற்றியிருக்கிறேன். என்னிடம் நீண்ட திட்டங்கள் உள்ளன. சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன். அது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும்" என்றார்.

மேலும் செய்திகள்