< Back
சிறப்புக் கட்டுரைகள்
பூகம்பத்தால் உருக்குலைந்த துருக்கி
சிறப்புக் கட்டுரைகள்

பூகம்பத்தால் உருக்குலைந்த துருக்கி

தினத்தந்தி
|
12 Feb 2023 9:07 AM IST

இயற்கை ஒரு சமதர்மவாதி. யாரிடமும் பாகுபாடு காட்டாது. இயற்கைக்கு ஆண்டியும் ஒன்றுதான்; அரசனும் ஒன்றுதான்.

காற்று, மழை, வெயில் இவை யாரிடமும் வேறுபாடு காட்டுவதில்லை. அப்படித்தான் இயற்கையின் திருவிளையாடல்களில் ஒன்றான பூகம்பமும்.

பூகம்பம் எப்போது வரும்? எங்கே வரும்? என்ன சேதத்தை ஏற்படுத்தும்? என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால் பூமியின் அமைப்பை பொறுத்து, சில பகுதிகள் பூகம்பம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடங்களாக கணிக்கப்பட்டு உள்ளன.

மனிதனின் கைகால்கள் நடுங்கினால் அதற்கு வயோதிகம், குளிர், அல்லது பயம் காரணமாக இருக்கலாம். இதற்கு ஓரளவு நிவாரணமும் உண்டு.



இதேபோன்று பூமி நடுங்கினால்.... அதற்கு பெயர்தான் பூகம்பம். இதற்கு எந்த நிவாரணமும் கிடையாது. பூகம்பத்தை தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது. முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் சேதத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள முடியும், அவ்வளவுதான்...

ஜப்பான் அடிக்கடி பூகம்பத் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதி என்பதால், அந்த நாட்டில் ஓரளவு நில அதிர்வுகளை தாங்கும் வகையிலான கட்டிடங்களை கட்டுகிறார்கள். இதனால் இழப்புகளை கணிசமாக குறைக்க முடிகிறது. ஆனால் மற்ற நாடுகளில் இதைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

மேற்கு ஆசிய நாடான துருக்கியில் கடந்த 6-ந்தேதி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் அந்த நாட்டையும், அருகில் உள்ள சிரியாவையும் சின்னாபின்னமாக்கியதோடு, மற்ற நாடுகளையும் அதிர்ச்சியில் உறையவைத்து இருக்கிறது.

துருக்கியின் காசியன்டெப் நகருக்கு தென்மேற்கே 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூமிஅதிர்ச்சி 7.8 ரிக்டராக பதிவாகி இருந்தது.

சக்திவாய்ந்த இந்த பூகம்பத்தால் துருக்கியிலும், சிரியாவிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்ததோடு, பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து நாசமாயின. அதிகாலையில் மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பூமி அதிர்ந்ததால், என்ன நடக்கிறது? என்று தெரியாமலே ஏராளமானோர் பலியானார்கள்.

பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்ட பிறகு ஓரிரு நாட்கள் அவ்வப்போது லேசான அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். பூகம்பத்தால் நகர்ந்த பூமிக்கு அடியில் உள்ள பாறை தட்டுகள் ஒரு நிரந்தர நிலைக்கு வரும் வரை லேசாக அசைவதால், இந்த அதிர்வுகள் ஏற்படுகின்றன. இதேபோல் துருக்கியிலும் அதிகாலையில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு பிறகு மாலையில் 50-க்கும் மேற்பட்ட அதிர்வுகள் ஏற்பட்டன. இதில் சில நில அதிர்வுகள் வழக்கத்துக்கு மாறாக அதிக தாக்கத்துடன், அதாவது 7.5 மற்றும் 6.6 ரிக்டர் அளவுகளில் இருந்தது இதுவரை இல்லாத ஒன்றாகும்.

இந்த பூகம்பத்துக்கு துருக்கியில் 20 ஆயிரம் பேருக்கு அதிகமாகவும், சிரியாவில் 4,000 பேரும் என 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் ஏராளமானோர் கைகால்களை இழந்து தவிக்கிறார்கள். துருக்கியில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டு உள்ளது.

சிரியாவில் 2011-ம் ஆண்டிலிருந்து உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான சிரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபோதிலும் நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கே துருக்கி எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகள் பிரிவினைவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சுமார் 40 லட்சம் மக்கள் வசித்து வரும் இந்த பகுதிகளில் பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டு இருக்கிறது.

துருக்கியிலும், சிரியாவிலும் உள்நாட்டு குழுக்கள் மட்டுமின்றி, சுமார் 30 நாடுகளில் இருந்து வந்துள்ள மீட்புக்குழுவினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். மோப்ப நாய்கள் மற்றும் நவீன கருவிகளின் உதவியுடன், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கிடப்பவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீட்டனர். இடிபாடுகளை அகற்றும் போது அவை சரிந்து, உள்ளே கிடப்பவர்கள் இறந்துவிடக்கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக இடிபாடுகளை அகற்றுவதால் தொடக்கத்தில் மீட்புப்பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது.

துருக்கியில் ஹடாய் என்ற இடத்தில், பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை 3 நாட்களுக்கு பிறகு இடிபாடுகளுக்கு இடையே இருந்து லேசான காயங்களுடன் மீட்கப்பட்டது.

இதேபோல் சிரியாவில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஜின்டாய்ரிஸ் என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதில் வசித்து வந்த பலர் உயிரிழந்தனர். ஆனால் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண்குழந்தை இடிபாடுகளுக்கு அடியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. ஆனால் குழந்தையின் தாயும், தந்தையும் இறந்துவிட்டனர்.

சிரியாவில் ரஜோ என்ற இடத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையின் சுவர்கள் மற்றும் கதவுகள் பூகம்பத்தால் சேதம் அடைந்தன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அங்குள்ள கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஐ.எஸ். இயக்கத்தினர் என கருதப்படும் 20 பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படும் போது முதல் 72 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்றும், தேவையான உபகரணங்களும், மருத்துவ வசதிகளும் இருந்தால்தான் இந்த காலக்கெடுவுக்குள் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருப்பவர்களை உயிருடன் மீட்க முடியும் என்றும் இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் டிரென்ட் பல்கலைக்கழகத்தின் இயற்கை பாதிப்பு துறை நிபுணர் ஸ்டீவன் கோட்பி கூறுகிறார்.

ஆனால் துருக்கி, சிரியாவில் இடிபாடுகளை அகற்ற பெரிய அளவிலான எந்திரங்கள் இல்லாததாலும், ரத்தத்தை உறைய வைக்கும் கடும் குளிர் காரணமாகவும், ஒரு வாரம் ஆகியும் இன்னும் மீட்புப்பணிகள் முடிந்தபாடில்லை.

வீடு வாசல்களை இழந்து தவிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இரவில் உறைபனி நிலைக்கும் கீழே வெப்பநிலை சென்றுவிடுவதால் குளிர் தாங்க முடியாமல் அவர்கள் தவிக்கிறார்கள்.

கட்டிட இடிபாடுகள் குவியல் குவியலாக கிடப்பதாலும், சாலைகள் பிளந்து நாசமானதாலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதும், நிவாரண பொருட்களை கொண்டு சேர்ப்பதும் பெரும் சவாலாக இருப்பதாக நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூகம்பத்தால் நாட்டில் உள்ள 8.5 கோடி மக்களில் 1 கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், நிலைமையை சமாளிக்க 10 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் அறிவித்து உள்ளார்.

ஆசிய கண்டத்துக்கும், ஐரோப்பிய கண்டத்துக்கும் இடையே இணைப்பு பாலம் போல் அமைந்துள்ள துருக்கி வடக்கே கருங்கடலாலும் தெற்கு மற்றும் மேற்கே மத்தியதரைக்கடலாலும் சூழப்பட்டுள்ள தீபகற்ப நாடு. இது ஏற்கனவே பலமுறை பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 2000-வது ஆண்டுக்கு பிறகு மட்டும் அங்கு 18 முறை பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டு இருக்கிறது. அனடோலியன், அரேபியன், ஆப்பிரிக்கன் ஆகிய 3 பாறை தட்டுகள் சந்திக்கும் இடத்தில் துருக்கி அமைந்து இருப்பதால்தான் அங்கு அடிக்கடி பூமி அதிர்ச்சி ஏற்படுவதாகவும், அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்தமுறை அரேபிய தட்டும், அனடோலியன் தட்டும் மோதிக் கொண்டதால் தான் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாம் வாழும் இந்த பூமியைப் பற்றி தெரிந்து கொண்டால் பூகம்பம் எதனால் ஏற்படுகிறது? என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

மூன்றில் இரண்டு பங்கு நீராலும் ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ள இந்த பூமி பூகோள அடிப்படையில் 'லித்தோஸ்பியர்', 'ைஹட்ரோஸ்பியர்', 'பயோஸ்பியர்', 'அட்மாஸ்பியர்' என்ற நான்கு பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 'லித்தோஸ்பியர்' என்பது மண் மற்றும் பாறைகளாலான பூமியின் மேற்பரப்பையும், 'ைஹட்ரோஸ்பியர்' என்பது பூமியின் கடல் பகுதியையும், 'பயோஸ்பியர்' என்பது பூமியைச் சார்ந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் குறிக்கும். பூமியின் மேல் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வியாபித்து இருக்கும் காற்று மண்டலத்தை 'அட்மாஸ்பியர்' என்கிறோம்.

பூமிப்பந்தின் உள்பகுதி முழுவதும் பாறைகளாக உள்ளன. தேங்காயில் மேல் ஓடு இருப்பது போல் பூமியின் மேல் பகுதி ஓட்டுப் பகுதி ('கிரெஸ்ட்') என அழைக்கப்படுகிறது. இது நிலப்பகுதியில் 45 முதல் 50 கி.மீ. ஆழம் வரையிலும், கடலில் 5 முதல் 8 கி.மீ. ஆழம் வரையிலும் உள்ள பகுதி ஆகும். இதுதவிர உள்ள மற்ற உள்பகுதி மிகப்பெரிய பாறை தட்டுகளும், நெருப்பு குழம்பும் நிறைந்தது. பூமியின் தரைப்பகுதியில் இருந்து உள்ளே செல்லச் செல்ல வெப்பம் அதிகரிக்கும். பூமிப்பந்தின் உள்மையப்பகுதியின் வெப்பநிலை 5,000 டிகிரி செல்சியசாக இருக்கும்.

பூமிக்கு அடியில் 7 பெரிய பாறை தட்டுகளும், 12 சிறிய பாறை தட்டுகளும் உள்ளன. ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த பாறை தட்டுகள் 20 கி.மீ. முதல் 40 கி.மீ. வரை தடிமன் கொண்டவை. இந்த தட்டுகளின் மீதுதான் 5 கண்டங்களும் உள்ளன. இந்த பாறை தட்டுகள் அவ்வப்போது அசைகின்றன; நகர்கின்றன. அப்போது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதும், ஒன்றுக்கு அடியில் மற்றொன்று சொருகிக்கொள்வதும், உடைந்து நொறுங்குவதும் உண்டு. அப்படி ஏற்படும் போதுதான் பூமி அதிர்கிறது. இதைத்தான் நாம் பூகம்பம் என்கிறோம்.

கடலுக்கு அடியில் இருக்கும் பாறை தட்டுகள் மோதும் போதோ அல்லது நகரும் போதோ கடல் நீர் மேல் நோக்கியும் மற்றும் நாலா புறமும் தள்ளப்படுகிறது. இதனால்தான் 'சுனாமி' அலைகள் (ஆழிப்பேரலைகள்) ஏற்படுகின்றன.

பூகம்பத்தால் ஏற்படும் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம், பல்வேறு அம்சங்களை பொறுத்தே அமைகிறது. அதாவது பூகம்பம் நிலத்தில் ஏற்படுகிறதா? அல்லது கடலில் ஏற்படுகிறதா? எவ்வளவு ஆழத்தில் ஏற்படுகிறது? பூகம்பத்தின் மையப்புள்ளியில் நிலஅமைப்பு எப்படி இருக்கிறது? என்பனவற்றை பொறுத்தே சேதத்தின் அளவு இருக்கும்.

பூகம்பம் நிலப்பகுதியில் ஏற்படும் போது கட்டிடங்கள் நாசமாகும், சாலைகள் சேதம் அடையும். ஆனால் கடலில் சுனாமி அலைகள் உருவாகாது.

அதேசமயம் கடலுக்கு அடியில் பெரிய அளவில் பூமி அதிர்ந்தால் நிச்சயம் சுனாமி அலைகள் உருவாகும். லேசான பூகம்பம் ஏற்படும் போது சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

துருக்கியில் சமீப காலமாக பூகம்பத்தை தாங்கி நிற்கக்கூடிய வகையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அதற்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்கள்தான் தற்போதைய பூகம்பத்தில் அதிக அளவில் இடிந்து இருப்பதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்து இருக்கிறார். எனவே இனிவரும் காலங்களில் நில அதிர்வை தாங்கி நிற்கக்கூடிய கட்டிடங்களை கட்டுவதன் மூலம் பூகம்பத்தின் பாதிப்புகளை குறைக்க முடியும் என்ற பாடத்தை துருக்கி பேரழிவு உலகுக்கு உணர்த்தி இருக்கிறது.

பூகம்பத்தால் உருக்குலைந்துள்ள துருக்கியும், சிரியாவும் இந்த பெரும் சோக நிகழ்வில் இருந்தும், அதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தும் விரைவில் மீண்டு எழும் என்று நம்புவோம்...

உதவிக்கரம் நீட்டிய இந்தியா


பூகம்பத்தால் உருக்குலைந்த துருக்கிக்கும் சிரியாவுக்கும் பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. ஐ.நா.சபை நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து இருக்கிறது.

'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் துருக்கிக்கும், சிரியாவுக்கும் இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. விமானப்படை விமானங்களில் மீட்புப்படையினருடன் மருந்து பொருட்கள், நிவாரண பொருட்கள் மற்றும் மோப்ப நாய்களை அனுப்பி வைத்து இருக்கிறது.

இதேபோல் தைவான் உள்ளிட்ட மற்ற நாடுகளும் உதவி வருகின்றன. தைவான் அதிபர் தாய் யிங் வென், துணை அதிபர் வில்லியம் லாய் ஆகியோர் தங்கள் ஒரு மாத சம்பளத்தை துருக்கிக்கு வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.

அது என்ன ரிக்டர் அளவு?


பூகம்பத்தின் தாக்கம் எவ்வளவு என்பது 'ரிக்டர்' என்ற அளவில் கணக்கிடப்படுகிறது. இது ஒரு கணித முறை. 1835-ம் ஆண்டு சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் என்ற அமெரிக்க விஞ்ஞானியால் பூகம்பத்தை அளக்கும் கணிதமுறை கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரது பெயரால் இந்த முறை ரிக்டர் அளவு என அழைக்கப்படுகிறது.

நிலஅதிர்வின் அளவை கண்டறியும் கருவியின் பெயர் 'சீஸ்மோகிராப்'. நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிய இதுவரை கருவிகள் கண்டு பிடிக்கப்படவில்லை.

ஆனால் பறவைகளாலும், சில விலங்குகளாலும் பூகம்பத்தை முன்கூட்டியே உணர முடியும் என்ற ஒரு கருத்து உள்ளது. பூகம்பம் ஏற்படுவதற்கு முன்பு பறவைகள் சற்று பதற்றத்துடன் காணப்படும் என்றும், குரல் எழுப்பியபடி அங்கும் இங்குமாக பறக்கும் என்றும் கூறப்படுகிறது. பல சமயங்கள் பூகம்பம் ஏற்படுவதற்கு முன்பு பறவைகள் அவ்வாறு நடந்து கொண்டது அதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

இந்தியாவில் பூகம்ப பாதிப்பு



இந்தியாவும் பூகம்பத்தால் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. நம் நாட்டில் இமயமலையையொட்டிய பகுதிகள் பூகம்பம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடங்கள் ஆகும். இந்தியாவில் ஏற்பட்ட சில முக்கிய பூகம்பங்கள் பற்றிய விவரங்களை பார்ப்போம்...

* 2001-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி நாடே குடியரசு தின விழாவை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்த போது காலை 8.46 மணிக்கு குஜராத் மாநிலம் புஜ் பகுதியை மையமாக கொண்டு 7.6 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 17.4 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 90 வினாடிகள் நீடித்தது. இதில் 20 ஆயிரம் பேர் பலி ஆனார்கள். கட்டிட இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். முதல்நாள் இரவில் கோடீசுவரர்களாக தூங்கச் சென்ற பலரை, மறுநாள் காலை உணவுக்காக நூற்றுக்கணக்கானோருடன் வரிசையில் நிற்க வைத்தது இந்த பூகம்பம்.

* மராட்டிய மாநிலம் லத்தூர் பகுதியில் 1993-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி அதிகாலை 3.56 மணிக்கு ஏற்பட்ட பூகம்பத்தில் 52 கிராமங்கள் நாசமானதோடு, 9,748 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

* காஷ்மீரில் 2005-ம் ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூமிஅதிர்ச்சியில் 8,735 பேர் உயிரிழந்தனர்; 75,266 பேர் காயம் அடைந்தனர்.

* 1991-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2,000 பேர் பலியானார்கள். 1,800 பேர் காயம் அடைந்தனர்.

பூகம்பத்தால் அணுஉலை நாசம்


2011-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி அதிகாலை ஜப்பானுக்கு வடகிழக்கே 72 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் 9.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதனால் 133 அடி உயரத்துக்கு உருவான சுனாமி அலைகள் கடற்கரையில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தை வந்து தாக்கின. இதனால் அணுமின் நிலையம் நாசமானது.

பூமி அதிர்ந்ததால் விமானநிலையங்கள் ரெயில்பாதைகள், சாலைகள் பிளந்தன. 1 லட்சத்து 27 ஆயிரத்து 299 கட்டிடங்கள் முழுமையாக இடிந்து விழுந்தன. மேலும் லட்சக்கணக்கான கட்டிடங்கள் சேதம் அடைந்தன. 15 ஆயிரத்து 894 பேர் பலியானார்கள்; 6,152 பேர் காயம் அடைந்தனர்; 2,562 பேர் காணாமல் போனார்கள். ஜப்பான் வரலாற்றில் இது பேரழிவாக அமைந்தது.

இந்த அணுஉலை விபத்தின் போது ஏற்பட்ட அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளில் 2 ஆயிரம் பேர் வரை இறந்ததாக பின்னர் தகவல் வெளியானது.

இதேபோல் அமெரிக்காவின் அலாஸ்கா பிராந்தியத்தின் அருகே 1964-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி புனிதவெள்ளி அன்று மாலை 5.36 மணிக்கு கடலுக்கு அடியில் 27 மீட்டர் ஆழத்தில் 9.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுனாமி அலைகள் உருவாயின. வால்டஸ் நகர துறைமுகம் நாசமானது. ஏராளமானோர் பலியானார்கள்.

25 ஆண்டுகளில்...


உலகில் எங்காவது ஒரு மூலையில் எப்போதாவது பூகம்பம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பூகம்பத்தின் அளவு 2 ரிக்டர் அளவுக்கு குறைவாக இருக்கும் போது, அதை நம்மால் உணர முடியாது. இதனால் குறைந்த அளவில் ஏற்படும் பூகம்பத்தை நிலஅதிர்வு என்கிறோம்.

கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய பூகம்பங்களை பார்ப்போம்...

1998 மே 30 ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள படக்ஷான் மாகாணத்தில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி ஆனார்கள்.

1999 ஆகஸ்டு 17 துருக்கியின் இஸ்மித் பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 18 ஆயிரம் பேர் பலி.

2001 ஜனவரி 26 குஜராத்தில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி.

2003 மே 21 அல்ஜீரியாவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2,200 பேர் சாவு.

2003 டிச.26 ஈராக்கின் தென்கிழக்கு பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் நடந்த பூகம்பத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2004 டிச.26 இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே அதிகாலை கடலுக்கு அடியில் உள்ள தரைப்பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பமும், அதனால் உருவான சுனாமி அலைகளும் பேரழிவை ஏற்படுத்தின. இதனால் இந்தோனேசியாவில் மட்டுமின்றி மலேசியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2005 அக்.8 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் நிகழ்ந்த பூமி அதிர்ச்சியில் 80 ஆயிரம் பேர் சாவு.

2006 மே 27 இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 5,700-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய பூகம்பம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி இருந்தது.

2008 மே 12 சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

2010 ஜன.12 ஹைதி தீவில் 7 ரிக்டரில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி.

2015 ஏப்.25 நேபாளத்தில் 7.8 ரிக்டரில் ஏற்பட்ட பூகம்பம் 8,800 பேரின் உயிர்களை காவு வாங்கியது.

2018 செப்.28 இந்தோனேசியாவில் 7.5 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமியும் உருவானது. இதில் 4,300-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

2021 ஆக.14 ஹைதி தீவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2,200 பேர் சாவு. இந்த பூகம்பம் 7.2 ரிக்டராக பதிவாகி இருந்தது.

2022 ஜூன் 22 ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 1,100 பேர் இறந்தனர்.

மேலும் செய்திகள்