டுகாடி ஸ்ட்ரீட் பைட்டர் வி 2
|டுகாடி நிறுவனம் புதிதாக ஸ்ட்ரீட் பைட்டர் வி 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.17.25 லட்சம். வி 4 மாடலில் உள்ள ஸ்டைலான பல அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தாலும் முகப்பு விளக்கு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏரோ டைனமிக் வடிவமைப்பு, சேசிஸ் திறன் ஆகியன இதன் செயல்பாடு மேலும் அதிகரிக்க உதவியாக உள்ளது.
உயரமான மற்றும் அகலமான அளவில் டியூபுலர் ஹேண்டில்பார், வாகனம் ஓட்டு வதை எளிதாக்கியுள்ளது. வி 4 மாடலில் உள்ளதைப் போன்ற இருக்கையும் உள்ளதால் உயரம் 845 மி.மீ. அளவை எட்டியுள்ளது. இது 955 சி.சி. திறன் கொண்ட சூப்பர் குவாட்ரோ டுவின் சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இது 153 ஹெச்.பி. திறனை 10,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 101.4 நியூட்டன் மீட்டர் டார்க் விசையை 9 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இது 6 கியர்களை உடையது. இதன் எடை 178 கி.கி. ஆகும். அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோனோ ஷாக் அப்சார்பர் கொண்டது. 5 ஸ்போக் சக்கரம், பைரேலி டயாப்லோ ரோஸோ 4 டயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. முன்புறமும், பின்புறமும் டிஸ்க் பிரேக்கு களைக் கொண்டது.
டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், கிவிக் ஷிப்ட், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் வசதிகளைக் கொண்டது. மூன்று விதமான ஓட்டும் நிலைகள் (ஸ்போர்ட், சாலை மற்றும் வழுக்கும் சாலை) கொண்டது. முன்புறம் 4.3 அங்குல டி.எப்.டி. திரை உள்ளது.
இதில் டுகாடி மல்டி மீடியா சிஸ்டம் (டி.எம்.எஸ்.) வசதி உள்ளது. ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்பு களை இது உணர்த்தும். சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த கலவையாக இது வந்துள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் 17 லிட்டர் கொள்ளளவு கொண்டது.