அந்தக்கால தீபாவளி... பண்டிகைகளுக்கெல்லாம் 'தல', தீபாவளி...!
|எத்தனையோ பண்டிகைகள் இருந்தாலும், உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளிக்கென்று தனி மவுசு உண்டு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை எது என்றால், அது தீபாவளிதான். எண்ணெய் குளியல், புத்தாடை, பலகாரம், பட்டாசு என்று இல்லத்தில் குதூகலத்தை கொண்டு வரும் பண்டிகை இது.
காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நவீன வசதிகள், வாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க பண்டிகைகளின் கொண்டாட்ட முறையிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அந்த காலத்தில், தீபாவளி நெருங்கி விட்டால் வீட்டில் பெண்கள் இனிப்பு, கார வகைகளை செய்வதற்கான முஸ்தீபுகளில் ஒரு வாரத்துக்கு முன்பே இறங்கிவிடுவார்கள். அரிசியை ஊறவைத்து காய வைப்பது, அரைப்பது, பலகாரம் செய்வது என்று வீடே அல்லோலகல்லோலப்படும்.
சிறுவர்-சிறுமிகள் ஒருபுறம் பட்டாசு, புதுத்துணி என்று பெரியவர்களை நச்சரிக்க தொடங்கிவிடுவார்கள். அப்பா வாங்கி வரும் பட்டாசுகளை பங்கு பிரித்துக்கொண்டு வெடிப்பது; அம்மா செய்து வைத்த பலகாரத்தை சாமி கும்பிடுவதற்கு முன்பே ரகசியமாக எடுத்து தின்று திட்டு வாங்குவது; தைத்து வந்த உடையை அடிக்கடி எடுத்துப்பார்த்து புதுத்துணியின் வாசத்தை ரசிப்பது என்று சிறுவர்களுக்கு தீபாவளி எப்போதுமே 'ஸ்பெஷல்' சந்தோஷம்தான்.
தீபாவளி அன்று, தாங்கள் செய்த பலகாரங்களை அண்டை வீட்டார், உறவினர்களுக்கு கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். இதுபோன்ற பழக்கங்கள் உறவுகளை வலுப்படுத்தும்.
புதுமண தம்பதியருக்கு தலை தீபாவளி எப்போதுமே மறக்க முடியாத ஒன்றுதான். புதுமாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டில் கவனிப்பு தடபுடலாக இருக்கும். இளவட்டங்களின் கேலி, கிண்டல் என்று வீடே அமர்க்களப்படும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மக்களுக்கு சினிமா, நாடகத்தை விட்டால் வேறு பொழுதுபோக்குகள் கிடையாது. ''இந்த ஆண்டு தீபாவளிக்கு என்ன படம் ரிலீசாகிறது?'' என்று ஒரு மாதத்துக்கு முன்பே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பெரும்பாலும் தீபாவளிக்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் வெளியாகும் என்பதால், தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். வியர்வை சொட்ட, புதுச்சட்டை கிழிய முண்டியடித்து டிக்கெட் எடுத்துக்கொண்டு கவுண்ட்டரில் இருந்து வெளியே வருவதே ஒரு சாதனையாக கருதப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள 'டெண்ட்' கொட்டகைகளில் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு மட்டும் பகலிலும் காட்சிகள் திரையிடுவார்கள். உள்ளே வெளிச்சம் வராமல் இருக்க பக்கவாட்டில் பெரிய தடுப்பு திரைகளை கட்டி இருப்பார்கள். பாதி படம் வெள்ளையாக தெரிந்தாலும், காட்சி முடிந்து வெளியே வருபவர்களின் முகத்தில் தீபாவளியை முழுமையாக கொண்டாடிவிட்ட மகிழ்ச்சியும், பெருமையும், தெரியும். அன்றைய காலத்திலெல்லாம் படம் பார்க்காவிட்டால், பலருக்கு தீபாவளியை கொண்டாடியது போலவே இருக்காது.
விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இப்போது ஏராளமான வசதிகள் வந்துவிட்டன. உலகம் 'ரெடிமேட்' மயமாகிக்கொண்டிருக்கிறது. இதனால் தீபாவளிக்கு வீட்டில் பலகாரம் செய்யும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. ''நீங்களெல்லாம் ஜாலியாக டி.வி. பார்த்துக்கொண்டிருக்கும் போது நாங்கள் மட்டும் எண்ணெய் சட்டியின் முன் நின்று வேகவேண்டுமா?" என்று குடும்பத்தலைவிகள் புலம்ப தொடங்கியதன் விளைவாக, கடைகளில் 'ஆர்டர்' செய்து வாங்கிவிடுகிறார்கள்.
ஆயத்த ஆடைகளை மக்கள் அதிகம் விரும்ப தொடங்கிவிட்டதால், தைக்க கொடுத்த புதுத்துணியை வாங்க தீபாவளிக்கு முதல் நாள் இரவு வரை தையல் கடைக்கு நடையாய் நடந்த காலம் மலையேறிவிட்டது.
எண்ணெய் தேய்த்து குளித்ததும் சாமி கும்பிட்டு விட்டு, பலகார தட்டை மடியில் வைத்துக்கொண்டு டி.வி. முன்பு அமர்ந்து விடுகிறார்கள். டி.வி. பார்க்க விரும்பாதவர்கள் செல்போன், கம்ப்யூட்டர்களில் மூழ்கிவிடுகிறார்கள். உறவினர்கள், நண்பர்களை நேரில் பார்த்து பேசுவது, கலகலப்பாக உரையாடி மகிழ்வதெல்லாம் அரிதாகிவிட்டது.
எங்கோ இருக்கும் முகம் தெரியாத நபருடன் 'சாட்' செய்து கொண்டிருக்கும் பிள்ளைகள், பெற்றோர் ஏதாவது சொல்ல அருகில் வந்தால், 'உஷ்' என்ற ஒற்றைச் சொல்லில், உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள்.
உலகம் நெருங்கி வந்துவிட்டது; உள்ளங்கள் விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. வீட்டுக்குள்ளேயே தனித்தனி தீவுகள் உருவாகிவிட்டன.
கொண்டாட்டங்கள் மாறிவிட்டன. என்றாலும் மீண்டும் வராத-அனுபவிக்க முடியாத கடந்த காலத்தின் நினைவுகளை அசைபோடுவது என்பது, தாயின் மடியில் தலைசாய்த்து கண் அயர்வது போன்ற சுகமான அனுபவம்.
அந்த காலத்திய தீபாவளி கொண்டாட்டம் குறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள், இந்த பிரபலங்கள்...