< Back
சிறப்புக் கட்டுரைகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு காசநோய் ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம்! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
சிறப்புக் கட்டுரைகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு காசநோய் ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம்! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

தினத்தந்தி
|
14 July 2022 4:11 PM IST

நீரிழிவு மற்றும் காசநோய் இரண்டும் மற்றொன்றின் நிகழ்வைத் தூண்டும் என்பதை தேசிய சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

நீரிழிவு மற்றும் காசநோய் இரண்டும் மற்றொன்றின் நிகழ்வைத் தூண்டும் என்பதை தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது.

தேசிய சுகாதார நிறுவன விஞ்ஞானி மற்றும் அறிவியல் இயக்குனர் (ஐசிஇஆர்), டாக்டர் சுபாஷ் பாபு கூறுகையில், நீரிழிவு நோய் இருந்தால், காசநோய் அபாயத்தை அது அதிகரிக்கும் என்றும் மாறாக காசநோய் இருப்பின் அதன்மூலம், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறினார்.

நீரிழிவு காசநோய் அறிகுறிகளை மோசமாக்கலாம் அல்லது காசநோய் எதிர்ப்பு சிகிச்சைக்கு பதிலளிக்கத் தவறிவிடலாம். நீரிழிவு நோய் இருந்தால், காசநோய் குணப்படுத்தப்பட்ட பின்னரும், மீண்டும் காசநோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

உலக மக்கள்தொகையில் கால் பகுதியினர் காசநோய் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் பத்தில் ஒருவர் மட்டுமே காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஒருவருக்கு இணை நோயாக, நீரிழிவு நோய் இருப்பின், இந்த நபர்களுக்கு காசநோய் வெளிப்படும் அபாயம் மூன்று மடங்கு அதிகமாகிறது.

காசநோய் காரணமாக ஒருவரது உடலில், அழுத்தம்-தூண்டப்பட்ட ஹைப்பர் கிளைசீமியா எனப்படும் ஒரு செயல்முறையைத் தூண்டலாம், எனவே நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களுக்கும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு காசநோய் குணப்படுத்தக்கூடியது, ஆனால் காசநோய் சிகிச்சை தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன, அதே போல் மீண்டும் காசநோயால் நோய்வாய்ப்படும் அபாயமும் உள்ளது.

காசநோயாளிகளின் நுரையீரல்கள், நீரிழிவு நோய் இருப்பதால் ஏற்படும் விரிவான சேதம் காரணமாக மெதுவாகவே குணமடைகிறது. இந்த நோயாளிகள் சிகிச்சை முடிந்த பிறகும் 2 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நம் நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்கள் காசநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும் செய்திகள்