'சைபர் கிரைம்' எச்சரிக்கைத் தொடர்: 'டேட்டிங்' செயலி 'பிளாக்மெயில்கள்' - முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி
|முன்பின் தெரியாத ஆண், பெண் இரண்டு தரப்பினரையும் தொடர்புப்படுத்தி காசு பார்ப்பதுதான் ‘டேட்டிங்’ செயலிகளின் அடிப்படை ‘லாஜிக்’. அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் ‘டேட்டிங்’செயலிகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
'ஸ்மார்ட்' போன்களின் தயவால் தற்போது உலகம் ரொம்பவே சுருங்கிவிட்டது. கடலை மிட்டாய் முதல் காதலி வரை எல்லாவற்றையும் செயலிகளுக்குள் (Apps) கொண்டுவந்துவிட்டனர். ஆம், மனித உறவுகளையும் கூட தற்போது கடைச்சரக்காக மாற்றிவிட்டன 'டேட்டிங்' செயலிகள். "சில தளங்கள் நீண்ட கால உறவுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எங்கள் செயலியில், உங்களுக்கு 'ரொமான்டிக்' அனுபவத்தை வழங்குவதற்காகவே நாங்கள் செயல்படுகிறோம். உங்கள் இணையிடம் நீங்கள் தேடுவது எதுவாக இருந்தாலும் அதை பூர்த்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் வழங்குகிறோம்" என்று விளம்பரம் வெளியிட்டுள்ளது ஒரு பிரபல 'டேட்டிங்' செயலி.
இதுபோன்ற கவர்ச்சி விளம்பரங்களாலும், அதில் வரும் புகைப்படங்களாலும் தூண்டப்படும் இளைஞர்கள் 'டேட்டிங்' செயலிகளுக்கு ஏராளமாக பணம் கட்டி ஏமாறுகிறார்கள். அல்லது இதுபோன்ற 'டேட்டிங்' செயலிகளை பயன்படுத்தி அறிமுகமாகும் மோசடி நபர்களின் மிரட்டல்களால் பணத்தையும், மானம், மரியாதையையும் இழக்கிறார்கள்.
சென்னையை சேர்ந்த பிரதீப், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். தனியாக வசித்து வந்த அவர் 'ரொமான்சு'க்கு ஆசைப்பட்டு ஒரு 'டேட்டிங்' செயலியில், தன் பெயரை பதிவு செய்தார். ஒரு சில நிமிடங்களில், அவரிடம் பேசிய மகேஷ் என்பவர், 'இது கல்லூரி பெண்கள் பங்கேற்கும் 'பிரீமியம்' 'டேட்டிங்' முறை. எனவே ஒரு லட்சம் ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தவேண்டும்' என்று கூறினார். 'ரொமான்ஸ்' கண்ணை மறைத்ததால், பிரதீப் அந்த தொகையை கட்டினார். அடுத்து அந்த நபர், சில பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அதில் பிடித்த பெண்ணை தேர்வுசெய்யுமாறு கூறி, அதற்கான தகவல் கட்டணம், பாதுகாப்பு கட்டணம் என பல்வேறு காரணங்கள் சொல்லி, ரூ.12 லட்சம் வரை வாங்கியுள்ளார். இவ்வளவு பணத்தையும் வாங்கி முடித்தவுடன், 'விரைவில் அந்த பெண் உங்களை தொடர்புகொள்வார்' எனக் கூறி, ெசல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த பிரதீப், போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரூவில் வங்கி மேலாளராக பணியாற்றும் ராஜேந்தர், 'டேட்டிங்' செயலி மூலமாக அறிமுகமான இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். தொடக்கத்தில் அன்பை காட்டிய அந்த பெண் அடுத்து 'பிளாக் மெயிலராக' மாறி ராஜேந்தரிடமிருந்து தொடர்ந்து பணம் பறித்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது சொந்த பணம் முழுவதும் காலியானதால், வாடிக்கையாளர்களின் பணத்தில் ரூ.5 கோடி வரை திருடி வசமாக மாட்டிக்கொண்டார் ராஜேந்தர். தற்போது சிறையில் இருக்கிறார், அந்த வங்கி மேலாளர் ராஜேந்தர்.
ஐதராபாத்தில் வசிக்கும் ஹரீஷ், 'டேட்டிங்' செயலி மூலம் டெல்லியை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணிடம் 'சாட்' செய்துவந்தார். இரு வாரங்களுக்கு முன் டெல்லிக்கு வந்த ஹரீஷ், ஒரு ஓட்டலில் தான் தங்கியிருப்பதாகவும், அங்கு தன்னை சந்தித்துப்பேச வருமாறும் பிரீத்திக்கு அழைப்பு விடுத்தார். அதனை நம்பி ஓட்டலுக்குச் சென்றார் பிரீத்தி. அப்போது தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மயங்கவைத்து, தன்னை ஹரீஷ் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார் பிரீத்தி. இந்திய தண்டனைச் சட்டத்தின் 328 மற்றும் 376 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஹரீசை தேடிவருகின்றனர்.
மாறிவரும் கலாசாரத்தின் அடையாளமாக 'டின்டர்', 'பம்புள்', 'ஹிங்கே', 'ஹப்பன்' போன்ற 'டேட்டிங்' செயலிகள் தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகின்றன. உலக அளவில் 'டின்டர்' ஒரு கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டுள்ளது. இதுபோன்ற பெரிய 'பிராண்டுகள்' மட்டுமன்றி உள்ளூர் அளவிலான 'டேட்டிங்' செயலிகளும் ஏராளமாக வந்துவிட்டன.
முன்பின் தெரியாத ஆண், பெண் இரண்டு தரப்பினரையும் தொடர்புப்படுத்தி காசு பார்ப்பதுதான் 'டேட்டிங்' செயலிகளின் அடிப்படை 'லாஜிக்' என்பதை பயனாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும். அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் 'டேட்டிங்' செயலிகளையும், அவர்களின் 'ஏஜெண்டு'களையும் முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். 'டேட்டிங்' செயலிகளை வாய்ப்பாக பயன்படுத்தி ஏராளமான 'பிளாக்மெயில்' கும்பல்கள் அலைந்துகொண்டிருப்பதை மனதில்கொண்டு, முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையோடு பழகுங்கள்.
மேலை நாடுகளைப்போல் பெண்களுக்கு சம உரிமையும், சம வாய்ப்புகளும் நமது நாட்டில் இன்னும் சாத்தியப்படாத நிலையில், 'டேட்டிங்' செயலிகள் மூலமாக அறிமுகமாகும் முன்பின் தெரியாத நபர்கள் குறித்து இங்குள்ள பெண்கள் கூடுதல் எச்சரிக்கை கொண்டிருக்கவேண்டும் என்பது எனது சிறப்பு வேண்டுகோள்.
(தொடரில் விவரிக்கப்படும் சம்பவங்களில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)