< Back
சிறப்புக் கட்டுரைகள்
இந்தியாவின் மின்னல் மனிதர் அவினாஷ் சேபிள்
சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவின் மின்னல் மனிதர் அவினாஷ் சேபிள்

தினத்தந்தி
|
19 Aug 2022 8:26 PM IST

காமன்வெல்த் போட்டிகளில் ‘ஸ்டீபிள் சேஸ்’ எனப்படும் விளையாட்டில் பங்கேற்று, இந்தியாவிற்கு முதல் முறையாக பதக்கம் வென்று தந்திருக்கிறார் அவினாஷ் சேபிள்.

View this post on Instagram

A post shared by Avinash Sable (@avinash__sable)

பதக்கப்பட்டியலில் இந்தியா 4-ம் இடம் பிடித்தது. இந்தியாவின் சார்பாக நிறைய இளம் நட்சத்திரங்கள் பதக்கம் வென்றிருந்தனர். ஆனால் அவர்களில், மிக முக்கியமானவர், அவினாஷ் சேபிள். இவர், காமன்வெல்த் போட்டிகளில் 'ஸ்டீபிள் சேஸ்' எனப்படும் விளையாட்டில் பங்கேற்று, இந்தியாவிற்கு முதல் முறையாக பதக்கம் வென்று தந்திருக்கிறார். இதுவரை கென்யர்களின் ஆதிக்கமே அதீதமாக இருந்த இந்த விளையாட்டில், முதல் இந்தியராக, முதல் அயல்நாட்டு வீரராக இந்த சாதனையை படைத் திருக்கிறார்.

ராணுவ வீரரான அவினாஷ் சேபிள் இந்திய நாட்டின் சிறிய கென்யா என்றழைக்கப்படும் பீட் மாவட்டம் (மகாராஷ்டிரா) பகுதியில் உள்ள மண்ட்வா கிராமத்தில் பிறந்தவர். வலிமையானவர். கடுமையான உடற்பயிற்சி, தொடர் பயிற்சி, தீவிரமான உணவு கட்டுப்பாடு... போன்றவற்றால் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றிருக்கிறார்.

''இது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. நானும் நம்பவில்லை. சிறப்பாக செயல்படுவேன் என்பது தெரியும். அதற்காக ஸ்டீபிள் சேஸ் விளையாட்டின் ஜாம்பவான்களான கென்ய வீரரை முந்தி, வெண்கலம் வெல்வேன் என்பதை கன விலும் எதிர்பார்க்கவில்லை'' என்று ஆச்சரியப்படும் அவினாஷ், ஸ்டீபிள் சேஸ் என்ற தடை தாண்டும் ஓட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாகத்தான் பயிற்சி பெறுகிறார். அதற்கு முன்புவரை, அபாரமான ஓட்டப்பந்தய வீரராகவும், தடைத்தாண்டும் போட்டியாளராகவுமே செயல்பட்டார். 4 ஆண்டிற்குள் ஸ்டீபிள் சேஸ் விளையாட்டில் கால்பதித்து, காமன்வெல்த் போட்டியில் பதக்கமும் வென்றிருக்கிறார்.

''ஸ்டீபிள் சேஸ் என்பது இந்தியாவிற்கு மிகவும் புதுமையான விளையாட்டு. அயர்லாந்தை பூர்வீகமாக கொண்டது. 2 ஆயிரம் மீட்டர், 3 ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மீட்டர்... என பல பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். வேகமாக ஓட வேண்டும். தடைகளை தாண்டி துள்ளி குதிக்க வேண்டும். தண்ணீரிலும் ஓடி இலக்கை எட்ட வேண்டும். அதுதான் ஸ்டீபிள் சேஸ் விளையாட்டின் அடிப்படை. இந்த விளையாட்டில், கென்யர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும். இந்த முறை, அந்த பார்முலாவில் ஒரு திருத்தமாக இந்தியர்களின் கையும் மேலோங்கி இருக்கிறது'' என்பவர், குறுகிய காலத்திற்குள் நிறைய சாதனைகளை படைத்திருக்கிறார். குறிப்பாக தன் சொந்த சாதனைகளையே தொடர்ந்து முறியடிப்பதுதான் அவரின் வழக்கமும் கூட.

''2018-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தை 8.29.80 என்ற நேரத்தில் முடித்து முதல் தேசிய சாதனையை படைத்தேன். அந்த முதல் சாதனையை அதற்கடுத்த வருடமே 8.28.94 என்ற நேரத்தில் முடித்து முறியடித்து, 2019-ம் ஆண்டு உலக மற்றும் தேசிய தடகள தொடர்களுக்கு தகுதியும் பெற்றேன்'' என்பவர், உலக அளவிலான ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் 1991-ம் ஆண்டு தீனா ராமிற்கு பிறகு பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இவர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தின் வெற்றிமுகமாக கருதப்பட்டாலும், அபார ஓட்டத்திறனை தன்னுடைய தனித்துவமாக கொண்டிருக்கிறார்.

2020-ம் ஆண்டு அரை-மாரத்தான் போட்டி ஒன்றை 60 நிமிடம் 30 விநாடிகளில் முடித்தார் அவினாஷ். ஓர் இந்தியர் அரை-மாரத்தான் ஓட்டத்தை 61 நிமிடங்களுக்குள் கடப்பது அதுவே முதல்முறை.

''அமெரிக்காவின் சான் ஜுவான் கேபிஸ்டிரேனோ நகரில் நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியை 13:25.65 நிமிடங்களில் நிறைவு செய்தேன். இதன்மூலம் 5000 மீ ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தை குறைந்த நேரத்தில் நிறைவு செய்த 30 ஆண்டு கால தேசிய சாதனையை நான் முறியடித்தேன். ஏனெனில் 1992-ம் ஆண்டு பகதூர் பிரசாத் என்ற வீரர் முழு தொலைவை 13:29.70 நிமிடங்களில் ஓடியதே முந்தைய சாதனையாக இருந்தது'' என்றவர், 2 ஆயிரம் மீட்டர், 3 ஆயிரம் மீட்டர் பந்தயங்களில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் கலந்து கொள்ள தொடங்கியது, 2020-ம் ஆண்டில்இருந்துதான். அதற்குள்ளாகவே, பதக்கம் கிடைத்திருப்பது ஆச்சரியமான ஒன்றாக கருதப்படுகிறது.

''என்னுடைய பழைய சாதனைகளையும், காமன்வெல்த் பதக்கத்தையும் மறந்துவிட்டு, புதிதாக பயிற்சி மேற்கொள்ள இருக்கிறேன். ஏனெனில் கடந்த காலத்தை விட, எதிர்காலம் இன்னும் அதிகமான போட்டிகளை எனக்கு தர இருக்கிறது. அதில் வெற்றி பெறுவதும், பதக்கம் வெல்வதுமே என் லட்சியம்'' என்ற கருத்துடன் விடைபெற்றார்.

மேலும் செய்திகள்