கிரீன் டீ - காபி: இதயத்திற்கு எது சிறந்தது?
|காபியை விட கிரீன் டீ இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது.
தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் பருகப்படும் பானம் தேநீர்தான். டீ, காபி இவற்றில் ஏதாவது ஒன்று, நிச்சயமாக ஒவ்வொருவரின் விருப்ப பானமாக இருக்கும். இரண்டிலும் காபின் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை புத்துணர்வை தூண்டும் தன்மையை கொண்டிருந்தாலும் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல் இல்லை.
இதய ஆரோக்கியத்திற்கும், ரத்த அழுத்தத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதால் உணவுப் பழக்கத்திலும், உட்கொள்ளும் பானத்திலும் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் காபி, கிரீன் டீ இவற்றில் எது சிறந்து என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. சமீபத்திய ஆராய்ச்சி முடிவு, இந்த கேள்விக்கு பதில் தருவதாக அமைந்துள்ளது.
புற்றுநோய் அபாயத்தை மதிப்பிடும் ஜப்பான் நிறுவனம் 12 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. சுமார் 18 ஆயிரம் பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். காபி, கிரீன் டீ இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் அருந்துவதற்கு அறிவுறுத்தப்பட்டனர். அவர்களின் ரத்த அழுத்தம், இதய ஆரோக்கியம் சீராக கண்காணிக்கப்பட்டது.
காபியில் 95 முதல் 200 மில்லிகிராம் வரை காபின் உள்ளது. அதேசமயம் கிரீன் டீயில் 35 மில்லிகிராம் மட்டுமே உள்ளது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கோப்பையில் பருகப்படும் கிரீன் டீயை விட அதே அளவு காபியில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு காபின் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் காபியை விட கிரீன் டீ இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று அந்த ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது. கிரீன் டீ, ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்ற முடிவுக்கும் ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர். அதே சமயத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி அதிகம் உட்கொள்வது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, கிரீன் டீ இதய ஆரோக்கியத்திற்கு உகந்த பானமாக கருதப்படுகிறது. கிரீன் டீ பல நன்மைகள் கொண்ட ஆரோக்கியமான பானம் என்பதை இந்த ஆய்வு மீண்டும் நிரூபித்துள்ளது.