< Back
சிறப்புக் கட்டுரைகள்
சேவல் ஜல்லிக்கட்டு
சிறப்புக் கட்டுரைகள்

சேவல் ஜல்லிக்கட்டு

தினத்தந்தி
|
16 Jan 2023 10:50 AM IST

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ‘சேவல் ஜல்லிக்கட்டு.’

இந்த சேவல் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று, போலீஸ் நிலையம் அருகே உள்ள நந்தவனத் தெருவில் நடைபெறும். சுமார் 9 அடி சுற்றளவு கொண்ட வட்டத்தை வரையும் பொதுமக்கள், அதன் நடுவில் போட்டியாளரின் கண்களை கட்டி நிறுத்தி விடுவார்கள். எந்த திசையில் நிற்கிறோம் என்பது தெரியாத வண்ணம், போட்டியாளரை 4 முதல் 5 சுற்று வரை சுற்றி விடுவார்கள். பின்னர் அவரது காலில் கயிற்றை கட்டுவார்கள். அதன் மறுமுனையை சேவலின் காலில் கட்டிவிடுவார்கள்.

சேவல் செல்லும் திசையை அறிந்து, அந்த சேவலை போட்டியாளர் பிடிக்க வேண்டும். அவ்வாறு பிடித்து விட்டால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும். அவருக்கு பரிசுகளும் வழங்கப்படும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், போட்டியாளர் வட்டத்தை விட்டு வெளியேறிவிடக் கூடாது. அப்படி வெளியேறினால், அவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பலரும் ஆர்வமாக கலந்து கொள்வார்கள். அவர்களைச் சுற்றி கூடி நிற்கும் பொதுமக்கள் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்துவார்கள்.

இந்த சேவல் ஜல்லிக்கட்டு பற்றி அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், "மாடுகளை வைத்து நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் எவ்வளவு கவனமாக இருந்தாலும், காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் நாங்கள் நடத்தும் சேவல் ஜல்லிக்கட்டு, அனைவரையும் உற்சாகத்தில் திளைக்க வைக்கும் வகையில் இருக்கக்கூடியது. இந்தப் போட்டியில் எந்த காயமும் ஏற்படாது என்பதால், இந்த சேவல் ஜல்லிக்கட்டை நடத்தி வருகிறோம்" என்றனர்.

மேலும் செய்திகள்