மருத்துவ பரிசோதனை முடிவுகள்
|மருத்துவ பரிசோதனை முடிவுகளை பொறுத்த அளவில், பரிசோதிக்கும் ‘லேப்’களை பொறுத்து இயல்பான முடிவுகளிலும், அசாதாரணமான முடிவுகளிலும் சிறிதளவு மாற்றம் இருக்கலாம்.
அதற்கு காரணம், பரிசோதிக்க பயன்படும் கருவிகள், பரிசோதிக்கும் செயல்முறை, தரக்கட்டுப்பாடு, நோயாளியிடமிருந்து ரத்தம், அல்லது சிறுநீரை பெற்று எவ்வளவு நேரம் கழித்து பரிசோதிக்கிறார்கள் என்ற விவரம் போன்ற காரணங்களை வைத்தே முடிவுகள் அமையும்.
இதனால்தான் ஒவ்வொரு ஆய்வகத்திலும் பரிசோதனை முடிவுகளை தரும்போது, கூடவே அங்குச் செய்யப்பட்ட பரிசோதனைகளின் இயல்பான அளவுகளையும் கொடுக்கிறார்கள்.
அடுத்தாக மருத்துவ பரிசோதனை கூடங்களில் இப்போது தானியங்கி கருவிகள் வந்துவிட்டன. ஒவ்வொரு மையத்திலும், அவர்கள் பயன்படுத்தும் கருவியைப் பொறுத்து, குறிப்பிட்ட அளவீட்டுக்குத் தினமும் காலையில் செம்மைப்படுத்துவார்கள். அதாவது காலிப்ரேஷன் செய்வார்கள். இது, எல்லோருக்கும் பொதுவான இயல்பு அளவாக இருக்க வேண்டும். பரிசோதனை முடிவுகள் இந்த அளவீட்டையும் கருவியையும் பொறுத்தே அமையும். இந்த அளவு மாறும்போது, பரிசோதனை முடிவுகளும் மாறுபட வாய்ப்பு உண்டு. சில நேரம், பரிசோதனைகளை முறையாக செய்யாவிட்டாலும், பரிசோதனைகளை தாமதமாகச் செய்தாலும் முடிவுகள் வித்தியாசப்படும்.
உதாரணத்துக்கு, ரத்த பரிசோதனையின்போது, ரத்த மாதிரியை சேகரித்து வெகுநேரம் ஆகிவிட்டால், பரிசோதனை முடிவு துல்லியமாக இருக்காது. நோயாளிகள் பலரும், குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், தாங்களாகவே பரிசோதனைக் கூடங்களில் ரத்தச்சர்க்கரையைப் பரிசோதித்துவிட்டு பழைய மாத்திரைகளையே சாப்பிட்டு வருகிறார்கள். இது சரியல்ல. அவசரத்துக்கு வேண்டுமானால் ஒரு முறை தாங்களாக ரத்த சர்க்கரையை பரிசோதித்துக்கொள்ளலாம். இதையே வழக்கப்படுத்தக் கூடாது. இதில் பல ஆபத்துகள் உள்ளன. குறிப்பாக, சர்க்கரை நோயால் வரக்கூடிய வேறு நோய்களை ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது இதனால் தடைபடும்.
முதலில் பார்த்த மருத்துவருக்கும் அடுத்துப் பார்க்கும் மருத்துவருக்கும் இடைப்பட்ட காலம் அதிகமாக இருந்தால், நோயின் நிலைமை மாறியிருக்கும். இன்னொன்று, 2-வதாக பார்க்கும் மருத்துவரின் நோய்க்கணிப்பு முறை வேறுபடலாம். இந்தச் சூழலில் ஏற்கெனவே பார்த்த பரிசோதனை முடிவுகளை வைத்து சிகிச்சை செய்ய முடியாது. புதிதாகத்தான் மீண்டும் பரிசோதிக்க வேண்டியநிலை வரக்கூடும்.