உணவு உற்பத்தியை குறைக்கும் பருவநிலை மாற்றம்
|அதிகரித்து வரும் வெப்பநிலை, மாறி வரும் மழைப்பொழிவு என சமீப ஆண்டுகளாக மாறுபட்ட வானிலை மாற்றங்கள் நிலவிக்கொண்டிருக்கின்றன.
இத்தகைய பருவநிலை மாற்றம் உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும். விவசாய விளைச்சல் குறைந்து உணவு வினியோக சங்கிலியை சீர்குலைத்துவிடும்.
2050-ம் ஆண்டு வாக்கில் கால நிலை மாற்றம் லட்சக்கணக்கான மக்களை பசி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வறுமைக்கு ஆளாக்கிவிடும் என உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கையின்படி, 2030-ம் ஆண்டுக்குள் பட்டினியால் வாடும் இந்தியர்களின் எண்ணிக்கை 73.9 மில்லியனாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
2021-ம் ஆண்டில் உலகளாவிய பசி குறியீட்டில், இந்தியா 101-வது இடத்தில் உள்ளது. 1990 முதல் 2018-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் வளரும் நாடுகளில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது. இது பருவநிலை மாற்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பருவ நிலை மாற்றம் இந்தியாவின் உணவு உற்பத்தியை எதிர்மறையாக பாதிக்கலாம். குறிப்பாக உணவு உற்பத்தி 16 சதவீதம் வீழ்ச்சியடையக்கூடும். அதே நேரத்தில் 2030-ம் ஆண்டளவில் பசி கொடுமைக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில், 1967-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் விவசாய உற்பத்தியில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. வெப்ப நிலை சராசரி அளவை விட ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அது விவசாயத்தை கடுமையாக பாதித்துக்கொண்டிருக்கிறது. அதனால் விவசாய விளைபொருட்களின் அளவு ஒவ்வொரு ஆண்டும் குறைந்திருக்கிறது.
அதிலும் வெப்பமயமாதல் தீவிரமடையும்போது விவசாய உற்பத்தி திறன் குறைந்து விடுகிறது. விவசாய விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறும் நிலையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் உணவு உற்பத்தி திறன் குறைந்து பசி, பட்டினி சூழலை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்பது உணவியல் நிபுணர்களின் கவலையாக இருக்கிறது.