இரண்டாம் உலகப்போர் அணு ஆயுதத்தை கதைக்களமாக்கிய கிறிஸ்டோபர் நோலன்
|கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படைப்பு, வெளியாகப் போகிறது. ‘ஓப்பன்ஹெய்மர்’ என்ற இந்தத் திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியாக இருக்கிறது.
கிறிஸ்டோபர் நோலன் என்றாலே, சினிமா ரசிகர்களுக்குள், குறிப்பாக ஹாலிவுட் ரசிகர்களுக்குள் ஒரு பரபரப்பும், ஆர்வமும் தொற்றிக்கொள்ளும். அந்த வகையில் தன்னுடைய படைப்புகளை தரமாகவும், அறிவியல்பூர்வமாகவும், நம்பகத்தன்மையுடனும், அனைவரும் புரிந்துகொண்டு ரசிக்கும்படியும் கொடுப்பது கிறிஸ்டோபர் நோலனின் சினிமா பாணி.
இங்கிலாந்தில் பிறந்தாலும், அவரது தாய் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பதால், இளமைக் காலத்தை இங்கிலாந்து, அமெரிக்கா என்று இரண்டு நாடுகளிலும் மாறி மாறி கழித்தவர், கிறிஸ்டோபர் நோலன். இவர் 7 வயதிலேயே தன்னுடைய தந்தையின் கேமராவின் மூலமாக, தன்னிடம் இருந்த பொம்மைகளைக் கொண்டு குறும்படம் எடுத்தவர். இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த காலத்தில் அவருடன் பழக்கமானவர்தான், எம்மா தாமஸ். இவரை தான் கிறிஸ்டோபர் ேநாலன் திருமணம் செய்துகொண்டார்.
படிக்கும் காலத்தில் நண்பர்கள் பலருடன் சேர்ந்து இயக்கிய முதல் முழு நீளப் படம் 'பாலோவிங்'. இந்தப் படத் தயாரிப்பிற்கு கிறிஸ்டோபரின் மனைவி எம்மா தாமஸ் பணமும் உதவிகரமாக இருந்தது. அது முதல் அவர் இயக்கும் அனைத்து படங்களிலும், அவர் ஒரு உதவி தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய படங்களில், அனைவருக்கும் பிடித்தமான படங்களில் முக்கியமானது மெமென்டோ. 2000-ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில், கிறிஸ்டோபர் நோலன் வித்தியாசமான முறையில் தன்னுடைய திரைக்கதையை அணுகியிருந்தார். படத்தில் இரண்டு பிரிவுகளாக கதை சொல்லப்பட்டது.
இறுதிக்காட்சியை தொடக்கமாக வைத்து பின்னோக்கிச் செல்லும் ஒரு கதைக்களம், முதல் காட்சியை தொடர்ந்து அடுத்தடுத்ததாக நகரும் ஒரு கதைக்களம். இவை இரண்டும் கதையின் மையத்திற்கு வரும் போது அங்கே இறுதிக்காட்சியை வைத்திருந்தார், கிறிஸ்டோபர் நோலன். இதுரை யாரும் சொல்லாத அந்தக் கதைப் பாணி, பலரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது.
அடுத்ததாக அவரது படைப்பில் அனைவரின் கண்களையும் விரியச் செய்ததில் 'இன்செப்ஷன்' படத்திற்கு முக்கிய பங்குண்டு. இது ஒருவரின் கனவுக்குள் சென்று அவரின் ஆழ்மன ரகசியங்களை அறியும் ஒரு குழுவைப் பற்றிய கதை. இதில் காலம், நேரம் என்ற அளவைக் கொண்டு விளையாடியிருந்தார், கிறிஸ்டோபர் நோலன். 2014-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த 'இண்டர்ஸ்டெல்லர்' படமும், கால, நேரத்தை மையமாக வைத்து, அறிவியல், விஞ்ஞானம், பிள்ளைப் பாசம் போன்றவற்றையும் கலந்து கொடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்தான். 2067-ம் ஆண்டில் வாழத் தகுதியில்லாத இடமாக மாறும் பூமிக்கு மாற்றாக, வேறு ஒரு கிரகத்தை கண்டறிய செல்லும் ஒரு குழுவின் விண்வெளி போராட்டமும், பாசப் போராட்டமும்தான் கதை. இது இன்றளவும் பலரது விருப்பப்பட பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
கால, நேரத்தை வைத்து விளையாடும் திைரக்கதை அமைப்பால், ரசிகர்களை கவர்ந்தவர் கிறிஸ்டோபர் நோலன் என்றாலும், அவர் பேட்மேன் பட வரிசையில் மூன்று திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கமர்சியல் ரீதியாகவும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடையில் தொய்வுற்றிருந்த சூப்பர் ஹீரோ கதைகளை, தன்னுடைய திரைக்கதை மற்றும் முத்திரை பதிக்கும் வசனங்களின் வாயிலாக, மீண்டும் உயிர்ப்பித்தவர் அவர்தான். 'டார்க் நைட்' படத்தில் வில்லன் கதாபாத்திரம் பேசும் வார்த்தைகள் பலவும், வாழ்வியல் தத்துவங்களை உதிர்ப்பவையாக இருக்கும்.
இவரது இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது, 'டெனட்' திரைப்படம். மூன்றாம் உலகப்போர் நடப்பதில் இருந்து தடுக்கப் போராடும் ஒரு ரகசிய உளவாளியைப் பற்றியது இந்தப் படம். கொரோனா காலகட்டத்தில் பல சிக்கல்களுக்கு இடையே வெளியான இந்தப் படம், அவரது முந்தைய படங்களைப் போல அதிக லாபத்தை ஈட்டவில்லை என்றாலும், நஷ்டத்தை சந்திக்கவில்லை.
இந்த நிலையில்தான் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படைப்பு, வெளியாகப் போகிறது. 'ஓப்பன்ஹெய்மர்' என்ற இந்தத் திரைப்படம், 2023-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படம் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் மீது வீசப்பட்ட அணு ஆயுதங்களின் ஆரம்பக்கட்ட சோதனை பற்றியும், அந்த அணு ஆயுத சோதனையைச் செய்த அணு ஆயுத விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயோபிக் படமாக இருந்தாலும், அதில் கிறிஸ்டோபர் நோலனின் திரைக்கதை மேஜிக் நிச்சயம் இருக்கும். அது படத்தை பல சுவாரசியங்களுடன் கடத்திச் செல்லும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கை.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் அதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அணு ஆயுத சோதனை நடக்கும் கடைசி சில நிமிடங்களை மட்டுமே இந்த டிரெய்லரில் காட்டியுள்ளனர்.
இந்தப் படத்தில் ஓப்பன்ஹெய்மர் கதாபாத்திரத்தில், சில்லியன் மர்பி நடித்திருக்கிறார். இவருடன் அயன்மேன் படங்களின் சூப்பர் ஹீரோவான ராபர்ட் டவ்னி ஜூனியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் உலக வரலாற்றைத் திருப்பிப்போடும் வகையில் இருக்கலாம் என்றும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.