ரூ.760 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூர் ரெயில் நிலையம்
|பாரம்பரிய கட்டிடத்துக்கு அருகில் பிரமாண்ட நுழைவுவாயில் கட்டிடங்களுடன் ரூ.760 கோடியில் எழும்பூர் ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெறுகிறது.
114 வயதை எட்டும் எழும்பூர் ரெயில் நிலையம்
சென்னை என்றதும் நம் அனைவருடைய நினைவுக்கு வருவது, மெரினா, எழும்பூர் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் தான். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், போக்குவரத்துக்கு முக்கிய அடித்தளமாகவும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் இருந்து வருகிறது. அதிலும் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கான முக்கிய முனையமாக இந்த ரெயில் நிலையம் இயங்குகிறது.
ரூ.17 லட்சம் செலவில் 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந்தேதி எழும்பூர் ரெயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டது. இந்த கட்டிடத்தின் என்ஜினீயர் ஹென்றி இர்வின். கட்டுமான பணிகளை மேற்கொண்டவர் சாமிநாதபிள்ளை. ஆரம்பத்தில் 3 நடைமேடைகள் மற்றும் ஒரு நடைமேம்பாலத்துடன் தனது சேவையை தொடங்கிய இந்த ரெயில் நிலையம், தற்போது 11 நடைமேடைகளுடன் பிரமாண்டமான ரெயில் நிலையமாக காட்சி அளிக்கிறது. அப்போது கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடங்கள் இன்றளவும் மினுக்குடன் அனைவரும் பிரமித்து பார்க்கும் வகையில் தலைநிமிர்ந்து நிற்கிறது. தற்போது தினமும் 35-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ், அதி விரைவு ரெயில்களும், இதுதவிர 250-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகளையும் கையாண்டு வரும் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பழமையான எழும்பூர் ரெயில் நிலையம் வருகிற ஜூன் மாதம் 11-ந்தேதி 114-வது வயதை எட்டுகிறது.
புதுப்பொலிவு பெறுகிறது
இப்படியாக பிரமிப்பூட்டும் வகையில் இருக்கும் எழும்பூர் ரெயில் நிலையத்தை மறுசீரமைக்க, ரெயில்வேத்துறை முடிவு செய்து இருக்கிறது. அதோடு சேர்ந்து, காட்பாடி, கன்னியாகுமரி, ராமேசுவரம், மதுரை ஆகிய ரெயில் நிலையங்களையும் ரெயில்வேத்துறை மறுசீரமைக்க திட்டமிட்டு உள்ளது.
இதில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு மட்டும் ரூ.760 கோடியை ரெயில்வேத்துறை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதற்கான திட்டப் பணிகள் குறித்து கடந்த 19-ந்தேதி சென்னை வந்திருந்த ரெயில்வேத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், அதிகாரிகளிடம் கேட்டறிந்து, மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் தொடர்பாகவும், அதற்கான மாதிரி வரைபடத்தையும் பார்வையிட்டார்.
அந்த வகையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே இருக்கும் பழமையான கட்டிடத்துக்கு அருகில் புதுப்பொலிவுடன் பிரமாண்டமாக உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் 2 நுழைவுவாயில்கள் உலகத் தரத்திலான வசதிகளுடன் கட்டப்பட உள்ளன. அதில் ஒன்று காந்தி இர்வின் சாலை பகுதியிலும், மற்றொன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியிலும் வருகிறது.
பிரமாண்ட நுழைவுவாயில் கட்டிடங்கள்
அவ்வாறு அமைய உள்ள 2 நுழைவுவாயில் பகுதி கட்டிடங்களும் தரைத்தளத்துடன் 3 மாடிகளுடன் கூடிய கட்டிடமாக கட்டப்பட உள்ளன. இதில் தரைத்தளத்தில் டிக்கெட் கவுண்ட்டர், காத்திருப்பு அறையும், முதல் தளத்தில் அலுவலகம் மற்றும் காத்திருப்பு அறையும், 2-வது தளத்தில் காத்திருப்பு அறை, கடைகளும், 3-வது தளத்தில் வணிகம், ஓய்வு அறைகள், பட்ஜெட் ஓட்டல்களும் அமைய உள்ளன.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் பழமையானது, ஏராளமானோர் வந்து செல்லும் வகையிலானது என்றாலும், பயணிகள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து திரும்புவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அந்த நிலையை மாற்றுவதற்கு ஏற்றவாறு, தற்போதைய மறுசீரமைப்பு திட்டத்தில் சில வசதிகளை ரெயில்வேத்துறை கொண்டு வர உள்ளது.
அதன்படி, ரெயில் நிலையத்துக்கு அருகில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு ஏற்றவாறு பல அடுக்கு வசதி கொண்ட புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இதில் ஒன்று எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அருகில் காந்தி இர்வின் சாலையிலும், மற்றொன்று எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு பின்புறத்தில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியிலும் வருகிறது. இவையிரண்டும் தரைத்தளத்துடன் கூடிய 5 மாடி கட்டிடமாக கட்டப்பட உள்ளன.
நவீன வசதிகளுடன் கார் நிறுத்துமிடம்
இதில் காந்தி இர்வின் சாலையில் அமைய உள்ள கார் மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் வணிக பயன்பாட்டுக்காகவும், 2, 3 மற்றும் 4-வது தளங்களில் 300 கார்கள், 120 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும், 5-வது தளம் அலுவலக பயன்பாட்டுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேபோல், பூந்தமல்லி சாலையில் அமைய உள்ள கார் மற்றும் வாகன நிறுத்துமிடத்தில், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் வணிக பயன்பாட்டுக்காகவும், 2, 3 மற்றும் 4-வது தளங்களில் 500 கார்கள், 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும், 5-வது தளம் அலுவலக பயன்பாட்டுக்காகவும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர லிப்ட் வசதிகள், நடை மேம்பாலங்கள், நடைபாதைகள், அஞ்சல் அலுவலகம் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட இருக்கின்றன. எழும்பூர் ரெயில் நிலையத்தை போலவே, காட்பாடி, கன்னியாகுமரி, ராமேசுவரம், மதுரை ரெயில் நிலையங்களும் புதுப்பொலிவை பெற இருக்கின்றன. இவ்வளவு உலக தரத்தில் புதுப்பொலிவுடன் கூடிய கட்டிட பணிகள் எப்போது தொடங்கும்?, எவ்வளவு காலத்துக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்? என்பது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.