'பிளாஸ்டிக்' கழிவுகளால் நிரப்ப கடல் என்ன குப்பைக்கூடையா?
|மக்கள் அலட்சியமாக வீசிச் செல்லும் பேராபத்து மிக்க பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் சென்று சேருவது பல்லுயிர் பெருக்கத்தின் உறைவிடமாகத் திகழும் கடல் என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
மூன்றாம் உலகப் போர் மூண்டால் அனைத்து மக்களும் அஞ்சி நிற்பது அணு ஆயுதங்களை பயன்படுத்துவார்களோ என்பதற்காக தான். ஆனால் அணு ஆயுதங்களை மிஞ்சிய ஒரு ஆபத்தான விஷயத்தை நாம் அனுதினமும் பயன்படுத்தி, கண்ணிவெடி போல் நமது கால்களுக்கு மத்தியில் வீசிச் செல்கிறோம் என்பதை பலரும் அறியாமல் உள்ளனர்.
ஆம், இன்று அணு ஆயுதங்களை விட ஆபத்தானதாக, எதிர்காலத்தில் மண்ணை முற்றிலும் மலடாக மாற்றக் கூடிய பேராபத்தாக உள்ளது பிளாஸ்டிக் கழிவுகள் என்கிறார்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். எத்தனை காலம் ஆனாலும் மரணிக்க முடியாத வரத்தை பெற்று வந்துள்ளதுதான் பிளாஸ்டிக் கழிவுகள்.
இன்று உணவுப் பொருட்கள் வாங்குவது முதல், தண்ணீர், குளிர்பான பாட்டில்கள் வரை அனைத்திலும் பிளாஸ்டிக் மயம் தான். ஒருமுறை பயன்படுத்தி நாம் வீசிச் செல்லும் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு அழிவே கிடையாது. மண்ணில் மட்டுமல்ல, இதன் தாக்கம் விண்ணிலும் எதிரொலிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், மண்ணில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் ரசாயன மாற்றம் புவியை காக்கும் ஓசோன் படலத்தை கூட துளைக்கும் வல்லமை மிக்கது.
குடியிருப்பு பகுதிகளில் மக்கள் அலட்சியமாக வீசிச் செல்லும் இந்த பேராபத்து மிக்க பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் சென்று சேருவது பல்லுயிர் பெருக்கத்தின் உறைவிடமாகத் திகழும் கடல் என்பதுதான் மிகப்பெரிய சோகம். இந்திய திருநாடு 3 பக்கமும் கடல் சூழ்ந்த தீபகற்ப பகுதியாகும். நமது நாட்டில் சுமார் 8 ஆயிரம் கி.மீட்டர் தூரம் நீளமுள்ள கடற்கரை பரப்பு உள்ளது.
இந்தியா மட்டுமல்ல உலகமே 71 சதவீதம் நீரால் சூழப்பட்டதுதான். இதில் 97 சதவீதம் கடல்.
கடல் என்பது மீன்வளம் நிறைந்தது மட்டுமல்ல. இந்த பூகோளத்தின் இயற்கை சமநிலையை காத்து நிற்பதே கடல்தான். கடல் நீர்மட்டம் உயரும் போது உலகின் அழிவு நிலையும் ஆரம்பமாகிறது என்பதே நிதர்சனமான உண்மை. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடற்பரப்பு இன்று பிளாஸ்டிக் கழிவுகளால் வெகு வேகமாக நிரப்பப்பட்டு வருகிறது.
இந்தியா மட்டுமல்ல உலகில் உள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்கு 80 லட்சம் டன் வீதம் சுமார் 15 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் இதுவரை கொட்டப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி தெரிவிக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு சுமார் 3.3 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இவற்றில் பாதியளவு ஆறுகள், நீர்நிலைகள் மூலம் கடலில் சென்று கலக்கின்றன.
மீன்களை விட அதிகம்
தோராயமாக ஒரு நிமிடத்திற்கு 1 லாரி பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. இதே வேகத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் சேருமானால் வரும் 2050-ம் ஆண்டில் கடலில் உள்ள மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என ஐ.நா. எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக் கழிவுகளை பொறுத்தவரை மைக்ரோ நானோ மீட்டர் என கணக்கிடுவார்கள். அதாவது, ஒரு 'மைக்ரோ நானோ' மீட்டர் என்பது 1 செ.மீட்டரில் 10 ஆயிரத்தில் ஒரு பகுதியாகும். 1 ச.மீட்டர் கடல் நீரில் சுமார் 25 ஆயிரம் மைக்ரோ நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாம் அலட்சியமாக வீசிச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலை மட்டுமல்ல, அண்டார்டிகா போன்ற பனிப் பிரதேசம் வரை சென்று சேர்ந்துள்ளது.
அழியும் கடல் உயிரினங்கள்
சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் (WHO) நடத்திய ஆய்வில் ஆர்டிக் பனிப் பாறைகளில் 1 லிட்டர் ஐஸ் கட்டியில் சுமார் 12 ஆயிரம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் உள்ள உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடலில் குவியும் 12 மில்லியன் குப்பைகளை உலகம் முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்திய போது, அதில் 10-ல் 8 பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகளாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் 44 சதவீதம் உணவு மற்றும் குடிநீர் பானங்களுக்கான பைகள்தான். கடற்கரைக்கு சுற்றுலா வரும் பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசிச் செல்லும் போது அவை கடலில் சென்று மிதக்கின்றன. அவற்றை உண்பதால் மீன்கள் மட்டுமல்ல, கடலில் வாழும் பெரிய வகை கடல் பசுக்கள், அரிய வகை ஆமைகள், சுறாக்கள், திமிங்கலங்கள், டால்பின்கள் கூட இறக்கின்றன. இதனால் கடல்வாழ் உயிர் சூழல் அமைப்பே சிதைந்து, கடல் உணவு சங்கிலி அமைப்பும் காணாமல் போய்விட்டதாக, கடல் வாழ் உயிரின வாழ்வியல் ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
கொடிய ரசாயன மாற்றம்
உலகம் முழுவதும் கடல் முற்றிலும் மாசுபடுவதற்கு பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன. கப்பல் போக்குவரத்தால் ஏற்படும் எண்ணெய் கசிவுகள், ஒலி மாசுபாடு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் ரசாயன கழிவுகள், புவி வெப்பமயமாதலால் கடல் சூடேற்றம், நீர்மட்டம் உயர்வு, கடலுக்குள் தேங்கிக் கிடக்கும் தங்கம், வெள்ளி, துத்தநாகம் போன்ற கனிம வளங்களை எடுப்பதற்கான ஆழ்கடல் சுரங்க பணிகள் இப்படி பல்வேறு காரணிகள் இருந்தாலும், கடற்புறத்தையும், கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வையும் சிதைக்கும் மிக முக்கிய காரணி பிளாஸ்டிக் கழிவுகள் தான்.
எத்தனை காலத்திற்கும் அழிவில்லாத இந்த பிளாஸ்டிக் கழிவுகள், உயிரினங்களின் வயிற்றுக்குள் சென்று அவற்றை சாகடிப்பதுடன், இனப்பெருக்க முறையையே அழித்து விடுகிறது. மேலும், பிளாஸ்டிக் கழிவுகள், தரையில் இருப்பதை விட தண்ணீரில் கலக்கும் போது ஏற்படும் ரசாயன மாற்றம் மிக கொடியதாக உள்ளது.
இதனால் ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நிரந்தர தடை விதிப்பது ஒன்றே தீர்வாகும். மேலும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக எளிதில் மக்க கூடிய பொருட்களை உருவாக்க வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் அதன் மாசுபாட்டுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுதல், பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தலை ஒவ்வொரு தனிமனிதனும் புறக்கணிப்பது ஆகியவற்றின் மூலம் இதுபோன்ற எதிர்கால இயற்கை சீரழிவை தவிர்க்கலாம். குறிப்பாக கடற்கரைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதலை தவிர்த்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என்கிறார்கள், சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள்.
கடலில் உருவான பிளாஸ்டிக் தீவுகள்
உலகில் எத்தனை கண்டங்கள் உண்டு என சின்ன குழந்தையை கேட்டால் கூட கண்ணை மூடிக் கொண்டு கூட பதில் சொல்வார்கள் 7 கண்டம் என்று. ஆனால் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட 8-வது கண்டம் உண்டு என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அது 'பிளாஸ்டிக் கண்டம்' என்று அழைக்கப்படும் பெரிய பசிபிக் குப்பைக் கண்டம் அல்லது ''பிளாஸ்டிக் தீவு''. மனிதர்கள் அலட்சியமாக வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகளால் உருவான இந்த தீவின் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? 2018-ம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி 14 லட்சம் ச.கி.மீட்டர்.
அதாவது, பிரான்ஸ் நாட்டை விட 3 மடங்கு பெரியது. தமிழகத்தை விட 10 மடங்கு பெரிய நிலப்பரப்பை உடையது. இந்த பிளாஸ்டிக் தீவில் 1 லட்சம் கோடி நுண்ணிய பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை மேலும் நுண்ணிய துகள்களாக மாறுமே தவிர, மக்கிப் போகாது என்பதுதான் கவலைக்குரியது. இதேபோல் அட்லாண்டிக் பெருங்கடலிலும் ஆய்வாளர்களால் பிளாஸ்டிக் தீவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தீவு மட்டுமல்ல, பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் செல்லவே முடியாத, கடல் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை செல்லும், தென் பசிபிக் கடலில் நியூசிலாந்துக்கும், சிலிக்கும் இடையில் உள்ள ஒரு தீவுக் கூட்டத்தில் கூட சுமார் 18 டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடப்பதையும், அதை உண்பதால் அங்குள்ள சுமார் 200 அரிய வகை உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவை அழியும் நிலையில் உள்ளதையும் பார்த்து ஆய்வாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர். மனிதன் செல்லாத இடங்களில் கூட இந்த மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் செல்வது கடல் சூழல் எவ்வாறு அழிந்து வருகிறது என்பதற்கு உதாரணம் என்றும், இயற்கை சூழலை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணி எனவும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் பறவைகள்
உலகில் உள்ள பறவை இனங்கள் உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் கண்டம் விட்டு கண்டம் பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் பறந்து வருகின்றன. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஐரோப்பிய கண்டம் உள்பட பல்வேறு கண்டங்களில் இருந்து சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வான் வழியே பறந்து வருகின்றன. இவை கண்டம் விட்டு கண்டம் பறக்கும் போது கடல் வழியை கடந்து வருகிறது. அப்போது பறவைகள் 90 சதவீதம் கடல் கழிவுகளை உணவாக எடுத்துக் கொள்கின்றன.
இதனால் கடலை சுத்தம் செய்ய இயற்கை அன்னை நமக்கு அனுப்பிய தேவதைகள்தான் பறவைகள் என்றால் அது மிகையல்ல. இயற்கையாக நடைபெறும் இந்த நிகழ்வே இப்போது பறவைகளுக்கு அழிவாகவும் மாறியுள்ளது. காரணம், இன்றைய நவீன காலத்தில் கடலில் மிதக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளாக மாறி உள்ளதுதான் மிகப்பெரிய சோகம்.
இதே நிலை நீடித்தால் வரும் 2050-ம் ஆண்டில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணாத பறவைகளே இல்லை என்ற நிலை தான் உருவாகும் என ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அழிந்து விடும் அச்சம்
கடலில் மிதக்கும் பல்வேறு கழிவுகளை பெரிய தோற்றம் கொண்ட ''அல்பட்ராஸ்'' போன்ற மிகப்பெரிய பறவைகள் முதல் பசிபிக் கடலில் காணப்படும் சிட்டுக் குருவியை விட சற்று பெரிதான ''பராக்கீட் அக்லட்'' என்ற சிறிய பறவை வரை உண்கின்றன. இந்த பறவைகள் எல்லாம் தற்போது பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு அழிவின் விளிம்பில் உள்ளன. குறிப்பாக, ''லேசன் அல்பட்ராஸ்'' என்ற பறவை இனத்தின் ஜீரண மண்டலத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரந்தரமாக கலந்து, இந்த பறவைகள் இனத்தின் கருவில் 3-ல் 1 அழிந்து வருவதாக பறவை இன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் இதுபோன்ற பறவை இனங்கள் முற்றிலுமாக அழிந்து விடும் எனவும் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
சுனாமியை தடுக்கும் பவளப்பாறைகள்
கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்பவை பவளப்பாறைகள். பாலிப் என்ற உயிரினம் தான் பவளப்பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன. கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு அதன் மூலம் பவளப் பாறைக்கு கடினத் தன்மையை வழங்குகிறது பாலிப்.
பாலிப் உயிரிழந்து விட்டால் பவளப் பாறையும் உயிரிழந்து விடும். வாய் வழியே உணவை எடுத்து, வாய் வழியாகவே கழிவையும் வெளியிடும் வினோதமான பழக்கம் கொண்டது இந்த பாலிப்.
இந்தியாவில் சுமார் 200 வகையான பவளப் பாறைகள் உள்ளன. இவற்றின் மூலம் கடலில் பலவிதமான வண்ண மீன்கள், 250-க்கும் மேற்பட்ட மெல்லுடலிகள், பாசிகள், கணுக்காலிகள் இனப்பெருக்கம் செய்து வளர்கின்றன. ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் காணப்படும் பவளப்பாறைகள் அலையின் வேகத்தை பெருமளவில் குறைக்கும் தன்மை கொண்டவை. இதனால் தான் கடலுக்குள் பொங்கி வரும் சுனாமி பேரலைகள் கூட பவள பாறைகளில் மோதும் போது வீரியம் குறைந்து அடங்கி விடுகின்றன. சுனாமி தமிழகத்தை தாக்கும் போது, ராமேசுவரம் பகுதி அதிகம் பாதிப்படையவில்லை. அதற்கு காரணம், மன்னார் வளைகுடா கடலில் உள்ள அதிகளவு பவளப்பாறைகள் தான் என்பது ஆய்வாளர்களின் கூற்று.
மேலும் பவளப்பாறைகளில் விழுந்து அலைகளில் வேகம் குறைவதால் தான் பல்வேறு தீவுகள் கூட அலையின் சீற்றத்தால் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மீன்கள், பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் பவளப்பாறைகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தியாவில் ராமேசுவரம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு போன்ற பகுதிகளில் பவளப் பாறைகள் அதிகம் காணப்படுகின்றன. கடலில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆழம் இல்லாத பவளப்பாறைகளில் படியும் போது அவை முற்றிலுமாக அழிந்து விடுகிறது.
ராமேசுவரம் உள்ளிட்ட மன்னார் வளைகுடா பகுதிகளில் மட்டும் நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி சுமார் 11 ஆயிரத்து 700 ச.கி.மீட்டர் பவளப் பாறைகள் அழிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது உலகில் உள்ள மொத்த பவளப்பாறைகளில் 14 சதவீதம் ஆகும்.
இதனால் தான் சமீப காலங்களில் ராமேசுவரம் பகுதிகளில் பவளப்பாறைகள் அழிவால் மீன்வளம் குறைந்து, மீனவர்கள் மீன்பிடித்தலுக்காக எல்லை தாண்டி செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ராமேசுவரம் பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் வகைகளும், 147 வகை கடல் பாசி வகைகளும், 13 வகை கடல் புற்கள், பல்வேறு அரிய வகை கடல் சங்கு, ஆமை, கடல் குதிரை உள்ளிட்ட பல்வேறு அரிய வகை கடல் வாழ் உயிரினங்களும் நிறைந்துள்ளன.
இதனால் தான் இந்த பகுதி உலகில் மிகப் புகழ்பெற்ற 'உயிர் கோள காப்பக பகுதி'யாக அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்கு அடிப்படை காரணம் இங்குள்ள ஏராளமான பவளப்பாறைகள் தான். தற்போது பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் இந்த பவளப்பாறைகள் அழியும் நிலையில் உள்ளது.