< Back
சிறப்புக் கட்டுரைகள்
நடனம் ஆடுவது மாரடைப்பை ஏற்படுத்துமா?
சிறப்புக் கட்டுரைகள்

நடனம் ஆடுவது மாரடைப்பை ஏற்படுத்துமா?

தினத்தந்தி
|
18 Sept 2022 2:54 PM IST

நடனம் இதயத்திற்கு நலம் சேர்க்கும் என்று கருதப் படுகிறது. கை, கால்களை அசைத்து நடனம் ஆடுவது உடலுக்கும், இதயத்திற்கும் சிறந்த உடற்பயிற்சியாக அமையும் என்பதும் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

இருப்பினும் உடல் பருமன் அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் நபர்கள் தீவிரமாக நடன பயிற்சி மேற்கொள்வது நல்லதல்ல. மாரடைப்பு அல்லது இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நடனம் ஆடிக்கொண்டிருந்த நபர் திடீரென மாரடைப்புக்கு ஆளான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதனை பார்த்த பலரும் நடனம் ஆடினால் மாரடைப்பு ஏற்படுமா? என்ற வாதத்தை முன் வைத்தனர்.

இதையடுத்து நடனத்துக்கும், மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து புதுடெல்லியைச் சேர்ந்த இதயநோய் நிபுணர் டாக்டர் வனிதா அரோரா கூறுகையில், ''நடனம் ஆடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. அதே வேளையில் நீங்கள் உடல் பருமன் அல்லது உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் நடனம் ஆடுவது மாரடைப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அதேபோல் புகைப்பிடிப்பவர்கள் நடனமாடும்போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது'' என்கிறார். இதே கருத்தை மருத்துவ நிபுணர்களும் முன்வைக்கிறார்கள். ''நடனம் இதயத்திற்கு சிறந்த உடற்யிற்சிதான். இருப்பினும் எந்த வகையான உடற்பயிற்சியையும் அதிகமாக மேற்கொள்ளக்கூடாது. நடனம் அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலில் இருந்து எண்டோர்பின்கள் வெளியாகும். இவை உடலை ஆரோக்கியமாக வைத் திருக்க உதவுபவை.

ஏதேனும் கடுமையான நோயால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், மருத்துவரை அணுகிய பின்னரே நடனம் அல்லது எந்த வகையான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்'' என்கிறார்கள்.

டாக்டர் வனிதா அரோராவின் கூற்றுப்படி, இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரமாக நடனமாடுவதற்கு முன்பு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமனி களில் அடைப்பு ஏற்பட்டு இதய நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் நடனமாடவோ, உடற்பயிற்சி செய்யவோ கூடாது. அதிகப்படியான மன அழுத்தம் கூட உயிருக்கு ஆபத் தானது. அத்தகைய மன நோய்க்கு ஆளாகுபவர்கள் இருதயநோய் நிபுணர்களின் ஆலோசனைக்குப் பிறகு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் தீவிரமாக நடனமாடுவதை தவிர்க்க வேண்டும். நடனம் மட்டுமின்றி ஏரோபிக்ஸ் பயிற்சிகளையும் தவிர்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்